Friday, March 29, 2024
Home » அமெரிக்காவுடன் வெளிப்படையாக முரண்பட்ட இஸ்ரேல் காசாவில் தொடர்ந்தும் குண்டு மழை

அமெரிக்காவுடன் வெளிப்படையாக முரண்பட்ட இஸ்ரேல் காசாவில் தொடர்ந்தும் குண்டு மழை

by manjula
January 20, 2024 8:14 am 0 comment

மத்திய கிழக்கு அமைதிக்கான ஒரே வழியாக அமெரிக்கா கருதும் பலஸ்தீன நாடு ஒன்றின் உருவாக்கத்திற்கு, இஸ்ரேல் வெளிப்படையாக எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையில் அது காசா பகுதி மீது நேற்றும் (19) பயங்கர தாக்குதல்களை நடத்தியது.

தெற்கு காசாவின் பிரதான நகரான கான் யூனிஸில் நேற்றுக் காலை துப்பாக்கிச் சூடுகள் மற்றும் வான் தாக்குதல்கள் இடம்பெற்றதாக பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இங்கு பலஸ்தீன இஸ்லாமிய போராட்ட அமைப்பான ஹமாஸின் பல உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் இருப்பதாக இஸ்ரேல் கூறும் நிலையிலேயே அங்கு தாக்குதல்கள் உக்கிரம் அடைந்துள்ளன.

அல் அமல் மருத்துவமனைக்கு அருகில் கடுமையான பீரங்கி தாக்குதல்கள் இடம்பெற்றதாக பலஸ்தீன செம்பிறை சங்கம் கூறியுள்ள நிலையில், வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற தாக்குதல்களில் 77 பேர் கொல்லப்பட்டு பல டஜன் கணக்கானோர் காயமடைந்ததாக காசா சுகாதார அமைச்சு கூறியது.

காசா நகரில் உள்ள அல் ஷிபா மருத்துவமனைக்கு அருகில் குடியிருப்பு தொகுதி ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்திருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசாவில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொலைத்தொடர்புகள் முடக்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு நடவடிக்கைகளில் சிக்கல் ஏற்பட்டிருப்பதோடு வெளியுலகுக்கு அங்கிருந்து தகவல்களை பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. காசாவில் தொடர்பாடல் முடக்கத்தில் மறைந்துகொண்டு இஸ்ரேல் 15 படுகொலை சம்பவங்களில் 172 பேரை கொன்றிருப்பதாக பலஸ்தீன வெளியுறவு அமைச்சு குற்றம்சாட்டியுள்ளது.

இந்த இராணுவ நடவடிக்கையில் தமது கவட்டி படையணியின் துருப்புகள் தூர தெற்கு பகுதியை அடைந்திருப்பதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் போரினால் காசாவில் 2.4 மில்லியன் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 90 வீதமானவர்கள் தமது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அதிக நெரிசல் மிக்க தற்காலிக முகாம்களில் வசிக்கும் பலரும் உணவு, நீர், எரிபொருள் மற்றும் மருத்துவ பராமரிப்பை பெறுவதற்கு போராடி வருகின்றனர். பஞ்சம் மற்றும் நோய் பரவும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அவசர உதவிகளுக்கு ஐ.நா நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 24 ஹெபடைடிஸ் ஏ (கல்லீரல் அழற்சி) சம்பவங்கள் மற்றும் கல்லீரல் வைரஸ் தொற்று பரவலுடன் தொடர்புபட்ட ஆயிரக்கணக்கான மஞ்சள் காமாலை சம்பவங்கள் காசா பகுதியில் பதிவாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

“கிட்டத்தட்ட குடிநீர் இல்லாத, சுத்தமான கழிப்பறை அல்லது சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்க முடியாத மனிதாபிமானற்ற வாழ்க்கைச் சூழல்கள் ஹெபடைடிஸ் ஏ மேலும் பரவ வாய்ப்பு ஏற்படுத்துகிறது” என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனொம் கெப்ரியேசுஸ் எக்ஸ் சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி தொடக்கம் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் சரமாரித் தாக்குதலில் 24,700க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு அவர்களில் 70 வீதத்திற்கும் அதிகமானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களாவர்.

ஹமாஸை முழுமையாக ஒழிப்பதற்கு சூளுரைத்திருக்கும் இஸ்ரேல், காசாவில் தொடர்ந்தும் பலஸ்தீன போராளிகளிடம் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது.

“முழுமையான வெற்றியை தவிர வேறு எதிலும் நாம் திருப்தி அடைய மாட்டோம்” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை (18) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார். அந்த வெற்றிக்கு பல மாதங்கள் எடுத்துக்கொள்ளும் என்றும் அவர் எச்சரித்தார்.

முழு வெற்றி என்பது பயங்கரவாத தலைவர்களை ஒழிப்பது, ஹமாஸ் செயற்பாடுகள் மற்றும் இராணுவத் திறனை தகர்ப்பது, எமது பணயக்கைதிகள் வீடு திரும்புவது அதேபோன்று காசாவை இராணுவ மயமற்ற பகுதியாக மாற்றுவதை கொண்டதாக இருக்கும் என்றார் நெதன்யாகு.

பலஸ்தீன நாடு

காசாவில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைக்கு அதன் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா ஆதரவு அளித்து வரும் நிலையில், இரு தரப்பும் வெளிப்படையாக முரண்பாட ஆரம்பித்துள்ளன.

சுவிட்சர்லாந்தின் டவோஸில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் பேசிய அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன், பலஸ்தீன நாடு ஒன்றுக்காக அழைப்பை விடுத்துள்ளார்.

எனினும் இதனை நெதன்யாகு திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.

“ஜோர்தான் நதியின் மேற்காக உள்ள ஒட்டுமொத்த பகுதியின் பாதுகாப்பு இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார். “இது அத்தியாவசியமான நிபந்தனை என்பதோடு இது (பலஸ்தீன) இறைமை என்ற யோசனைக்கு முரணானது” என்றும் கூறினார்.

சாத்தியமான பலஸ்தீன நாடு ஒன்றை உருவாக்குவது மற்றும் அங்கீகரிப்பது இஸ்ரேலுக்கான பாதுகாப்பை அடைவதற்கு அவசியமானது என்று அமெரிக்கா நம்புகிறது.

“இதனை நாம் வெளிப்படையாக மாறுபட்டு பார்க்கிறோம்” என்று நெதன்யாகுவின் கருத்துப்பற்றி வினவியபோது அமெரிக்க பாதுகாப்பு கவுன்சில் பேச்சாளர் ஜோன் கிர்பி பதிலளித்தார்.

இது தொடர்பில் பதிலளித்த பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் பேச்சாளர் நபில் அபூ ருதைனி, சுதந்திர பலஸ்தீன நாடு இல்லாது பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை இருக்காது என்றார்.

“பலஸ்தீனிய மக்கள் மற்றும் அவர்களின் நியாயமான உரிமைகளுக்கு எதிரான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு கொள்கைகள் காரணமாக முழு பிராந்தியமும் எரிமலை வெடிப்பின் விளிம்பில் உள்ளது” என்றும் கூறினார்.

அப்பாஸின் பலஸ்தீன அதிகாரசபை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களை பெற்றிருந்தபோதும் அங்கு இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.

குறிப்பாக துல்கரம் நகரில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள் காரணமாக கடந்த புதன்கிழமை தொடக்கம் குறைந்தது ஆறு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹூத்தி தாக்குதல்கள்

இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லையில் தினசரி இடம்பெறும் மோதல்கள், செங்கடலில் வர்த்தகக் கப்பல்கள் மீதான ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள், அதற்கு எதிராக அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் தாக்குதல்களால் காசா போர் பிராந்தியம் எங்கும் பரவும் அச்சம் அதிகரித்துள்ளது.

பலஸ்தீனத்திற்கு ஆதரவாக செங்கடல் மற்றும் அடென் வளைகுடாவில் செல்லும் இஸ்ரேலுடன் தொடர்புபட்ட கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதாக ஈரான் ஆதரவு ஹூத்திகள் கூறி வருகின்றனர். இந்நிலையில் யெமன் மீது வான் தாக்குதல்களை நடத்திய அமெரிக்கா மற்றும் பிரிட்டனுடன் தொடர்புபட்ட கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதாக அந்த கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்காவுக்கு சொந்தமான அடென் வளைகுடாவில் செயற்பட்ட கப்பல் ஒன்றின் மீது நேற்றும் ஹூத்திக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மார்ஷல் தீவுகள் கொடியுடனான செம் ரங்கர் கப்பல் மீது இரு ஏவுகணைகள் வீசப்பட்டிருப்பதாகவும் ஆனால் அந்தப் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளையகம் கூறியது. அந்தக் கப்பல் அடுத்த துறைமுகத்தை நோக்கி பயணிப்பதாகவும் அது குறிப்பிட்டது.

இந்நிலையில் சர்வதேச கடல் பகுதியில் நிலவும் பதற்றத்தை தணிக்கும் முயற்சியாக ஹூத்தி குழுவின் பிரதிநிதிகள் மற்றும் ஈரானுடன் எகிப்து அதிகாரிகள் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT