மெக்ஸிக்கோ நகரத்துக்கு எமிரேட்ஸ் விமானசேவை | தினகரன்


மெக்ஸிக்கோ நகரத்துக்கு எமிரேட்ஸ் விமானசேவை

டுபாயிலிருந்து ஸ்பெய்ன் நகரமான பார்சிலோனா ஊடாக மெக்ஸிக்கோ நகர சர்வதேச விமான நிலையத்துக்கான நாளாந்த விமான சேவைகளை எதிர்வரும் டிசெம்பர் 9ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கான தனது திட்டத்தை, எமிரேட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

மெக்ஸிக்கோ நகரத்துக்கான எமிரேட்ஸின் விமானம், பார்சிலோனாவுடன் தொடர்புபட்டதான சேவையாக அமையும். எனவே, இவ்விரு நகரங்களுக்குமிடையில் இதற்கு முன்னர் காணப்பட்டிருக்காத பாணியிலும் சௌகரியத்துடனும் வாடிக்கையாளர்கள் பயணிக்க முடியும். மெக்ஸிக்கோ, ஸ்பெய்ன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள், இந்த நாடுகளுக்குப் பயணம் செய்வதற்கு விஸா தேவையில்லை என்பதோடு, வெறுமனே அவர்களது கடவுச்சீட்டுகளுடனேயே பயணிக்க முடியும். 

இந்தப் புதிய பாதையானது எமிரேட்ஸ் போயிங் 777-200LR விமானத்தைக் கொண்டு இயக்கப்படும்.

இவ்விமானத்தில் 38 வணிக வகுப்பு ஆசனங்களும் 264 சாதாரண வகுப்பு ஆசனங்களும் காணப்படுகின்றன. புதிய 777 விமானமானது, 14 தொன் சரக்குகளை ஏற்றுவதற்குமான வசதியைக் கொண்டுள்ளதால், மெக்ஸிக்கோவின் ஏற்றுமதிகளான அவக்காடோக்கள், பெரி பழங்கள், மாம்பழங்கள், வாகன உதிரிப் பாகங்கள், அல்லது மருத்துவ விநியோகங்கள் ஆகியவற்றை, மேலதிக பூகோளச் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. எமிரேட்ஸின் ‘ஸ்கை கார்கோ’, மெக்ஸிக்கோ நகரத்திலிருந்தும் நகரத்துக்கும், 2014ஆம் ஆண்டு முதல் சரக்கு விமானங்களைப் பறந்துவருவதோடு, கடந்தாண்டில் மாத்திரம் இப்பாதையில் 22,500 தொன்னுக்கும் மேற்பட்ட சரக்குகளைக் கொண்டு சென்றிருந்தன. 

எமிரேட்ஸ் எயார்லைன் நிறுவனத்தின் தலைவர் சேர் டிம் கிளார்க் கருத்துத் தெரிவிக்கையில், 'டுபாய்க்கும் மெக்ஸிக்கோவுக்கும் இடையிலான புதிய விமானத் தொடர்பை அறிமுகப்படுத்த இயலுமாக அமைந்தமை குறித்து நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளோம்.

உயர்தரமான, நாளாந்த சர்வதேச விமான சேவைகள் என்பன சுற்றுலாத்துறை, வணிகம், கலாசாரத் தொடர்புகள் ஆகியவற்றின் விருத்திக்கு முக்கியமானவை. வர்த்தகம், குறிப்பாக உயர் பெறுமதியையும் குறிப்பிட்ட நேரத்துக்குள் சேர்க்கப்பட வேண்டியதுமான பொருட்களின் வர்த்தகம், இந்த எமிரேட்ஸ் போயிங் 777 விமானத்தில் சரக்குகளை ஏற்றுவதற்குக் காணப்படும் போதுமான கொள்திறன் காரணமாக வழியேற்படுத்தப்படும். புதுப்பொலிவாக்கப்பட்ட போயிங் 777-200LR விமானங்களின் நாளாந்தப் பறப்புகள் காரணமாக, சுற்றுலாத்துறைக்கும் பெரியளவு நன்மையேற்படுமென நாம் எதிர்பார்க்கிறோம்' என்று தெரிவித்தார்.     


Add new comment

Or log in with...