இனக்குரோதம் வளர்ந்தால் நாட்டை முன்னேற்ற முடியாது! | தினகரன்


இனக்குரோதம் வளர்ந்தால் நாட்டை முன்னேற்ற முடியாது!

எமது எதிர்கால சமூகத்துக்கு அமைதியான தேசமொன்றையே நாம் கையளிக்க வேண்டும்

கொழும்பு ஆனந்தா கல்லூரி பரிசளிப்பு விழாவில் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

ன் ஆனந்தா கல்லூரியில் கல்வி கற்கும் போது அதிபராகக் கடமையற்றிய ராஜபக்‌ஷ மற்றும் ஆசிரியர்கள் பௌத்த,இந்து,முஸ்லிம் என்ற வேறுபாடுகளின்றி என்னை ஒர் சிறந்த முஸ்லிம் தலைவராக்கினார்கள். ஆனந்தா கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்த எனக்குப் பயிற்சியளித்த ஆசிரியர்களை என்னால் ஒருபோதும் மறக்க முடியவில்லை".

இவ்வாறு முன்னாள் அமைச்சரும் இலங்கை ஊடக நிறுவனத்தின் தலைவருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார்.

ஆனந்தா கல்லூரியில் கடந்த 19ஆம் திகதி நடைபெற்ற, ஆனந்தியன் கழகங்களுக்கிடையே திறமைகளை வெளிப்படுத்திய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் கலந்து கொண்டார்.

ஆனாந்தா கல்லூரியின் அதிபர் எஸ்.எம். கீர்த்தி ரத்தன தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.இம்தியாஸ் மேலும் தெரிவித்ததாவது:

"இக்கல்லூரியில் நான் கற்கும் காலத்திலேயே சிங்கள பேச்சு, விவாத போட்டிகளில் பங்குபற்றி தங்கப் பதக்கம் பெற்றேன். நான் பாலி பாசையினையும் கற்று தேறினேன்.கொக்கி விளையாட்டு அணி தலைவனாகவும் இருந்து சம்பியன் ஆனேன். நான் ஒரு போதும் என் ஆசிரியர்களை மறப்பதில்லை. 1972ஆம் ஆண்டு கலாநிதி என்.எம்.பேரேரா பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பரிசளிப்பு வைபவத்தின் போது நான் மாணவத் தலைவனாக ஆற்றிய உரைக்கு அதிபர் பாராட்டி எழுதி தந்த ஓட்டோ கிராப் வசனம் இன்றும் என்னிடம் உள்ளது. அவர்கள் மனதில் ஒருபோதும் நான் ஒரு முஸ்லிம் என்ற வேறுபாடுகள் இருக்கவில்லை.

இக்கல்லூரி ஆயிரக்கணக்கான சிங்களத் தலைவர்களை உருவாக்கிய கல்லூரியாகும். அதில் என்னையும் ஒரு குடும்ப உறுப்பினர் போல் கட்டிக் காத்த வரலாறுகளை நான் ஒருபோதும் மறப்பதற்கு இல்லை. என்னை ஒர் அரசியல்வாதியாக இல்லாமல், ஒரு சிறந்த ஆனந்தியன் என்ற தோரணையில் இந்தக் கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், சிரேஷ்ட மாணவர்கள் இன்றைய நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அழைத்த கௌரவத்தினையிட்டு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். ஆனந்தியன்கள் ஒருபோதும் மத, இன குலபேதமின்றி சிறந்த தலைமைகளையே அன்று உருவாக்கினார்கள். ஆனந்தியன் ஒருபோதும் குனிந்து நிற்கும் மாணவ சமுகம் அல்ல. தலை நிமிர்ந்து நிற்கும் சமூகமாகும்.

இளம் சிறார்களுக்கு பாரிய பொறுப்பு உள்ளது. நாம் பல்வேறு பிரிவுகளாகவும் கூட்டங்களாகவும் சென்று பல குழிகளில் வீழ்ந்து நிற்கின்றோம். இனரீதியாகப் பிரிந்து பிரச்சினைகளை வளர்த்துக் கொண்டால் நமது நாடு எவ்வாறு முன்னேறிச் செல்ல முடியும்? ஆனாந்தாக் கல்லூரியை இந்த நாட்டினை நேசிப்பவர்களையே உருவாக்கினார்கள். எதிர்காலத்தில் சுபீட்சத்தை ஏற்படுத்த வேண்டுமானால் ஒர் இனத்தை இன்னுமொரு இனம் குரோதமாக பார்க்கலாகாது.

அன்று சிங்கப்பூர் தலைவர் சொன்ன வார்த்தைகள் இன்றும் நினைவில் உள்ளன. 'இலங்கையைப் போன்று சிங்கப்பூரை மாற்றிக் காட்டுவேன்' எனக் கூறினார். தற்பொழுது சிங்கப்பூர் எவ்வாறு முன்னேறி உள்ளது?நமது நாடு எங்கே சென்றுள்ளது? நமது நாட்டு இளைஞர்கள் தொழில் தேடி சிங்கப்பூர் செல்கின்றார்கள்.

கொழும்பின் சில பிரதேசங்களில் முடுக்கு வீடுகளில் வாழ்ந்தால் 'கொரியா' என்று சொல்வார்கள். கொரியாவில் இவ்வாறுதான் அனறு மக்கள் முடுக்குகளில் வாழ்ந்தார்க்ள். ஆனால் இன்று கொரியா எந்த நிலைக்கு முன்னேறி உள்ளது? எமது நாட்டு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொரியாவுக்கு தொழில் தேடிச் செல்கின்றார்கள். அதே போன்றுதான் சிங்கப்பூர் கூட முன்னர் கூலியாட்கள் தொழில் செய்யும் நாடாக இருந்தது. இலங்கையில் இனக்குரோதங்கள் இருக்கும் போது நாம் ஒரு போதும் நமது நாட்டை முன்னேற்ற முடியாது. சிங்கப்பூர் பிரதமர் அன்று சிங்கப்பூரில் வாழ்ந்த இந்தியர்கள், இஸ்லாமியர்கள், சீன இனத்தவர்களை பிரச்சினையாக எடுக்காமல் இந்தியர்களது வியாபாரத்திற்கு அனுமதி அளித்து இஸ்லாமியர்களது வியாபாரத்திற்கும் அங்கு அனுமதி அளித்து அந்தந்த நாடுகளிடையே நட்புறவை ஏற்படுத்தினார். தற்பொழுது உலகில் அதிகூடிய தனிநபர் வருமானம் பெறும் 10 நாடுகளில் சிங்கப்பூரும் உள்ளது.

ஆனால் நமது நாடு கடந்த 5 தசாப்தங்களாக பிரச்சினைகள் தீர்த்துக் கொள்ளாமல் பிரிந்து நிற்கின்றது. ஒரு அழகான சுதந்திரமான நாடாக இலங்கையை மாற்றமுடியாமல் நாம் மீண்டும் மீண்டும் பின்நோக்கியே செல்கின்றோம். தொடர்ந்தும் நாம் இவ்வாறு சென்றால் இந்த நாட்டில் உள்ள எதிர்கால சமூகத்திற்கு சிறந்த எதிர்காலம் ஒருபோதும் வரப் போவதில்லை. நாம் நமது எதிர்கால சந்ததியினருக்கு இந்த நாட்டினை பாரம் கொடுக்கும் போது இனக்குரோதம், யுத்த நாடாக பாரம் கொடுப்பதா? இந்த நாட்டை மலேசியா , சிஙக்பூர், யப்பான், ஜேர்மன் போன்ற நாடுகள் வரிசையில் கொண்டுவருவோம்.

ஆனாந்தா கல்லூரியில் கற்பித்த ஆசிரியர்களுள் ஒர் சிறந்த ஆசிரியர்தான் கலாநிதி ரீ.பி ஜாயா. அவர் வரலாறு, மற்றும் லத்தீன் பாசையும் கற்பித்துள்ளார். அவர் கல்வி போதிக்கும் போது ஆனந்தா கல்லூரி மாணவர்கள் அவரது வகுப்பிற்காக காத்து இருப்பார்கள். ஒருபோதும் அவரது வகுப்புக்கு தவறாமல் சமுகமளித்திருப்பார்கள். வெள்ளையர்கள் ஆட்சிக் காலத்தில் மிசனரிப் பாடாசலைகள் ஏற்படுத்திய போது சகல மாணவர்களுக்கும் அனுமதி கிடைக்கவில்லை. அத்துடன் மேற்கத்தைய கலாசாரங்கள் மேலோங்கின. ஆகவேதான் சிங்கள கல்விமான்கள் ஆனந்தா, தர்மராஜ,மகிந்தய, ராகுல போன்ற பௌத்த பாடசாலைகளை ஆரம்பித்தனர், அதேபோன்று தான் கலாநிதி டி.பி. ஜாயாவும் ஆனந்தா அதிபரிடம் முஸ்லிம் பாடசாலைகளை கட்டி எழுப்புவதற்கு அனுமதி கேட்டிருந்தார். அவர் கொழும்பு சாகிராவை கட்டி எழுப்புவதற்காக ஆனந்தாக் கல்லூரியில் இருந்து அப்போதை அதிபர் குலரத்தின திறமையான சிங்கள 2 ஆசிரியர்களை அவருடன் அனுப்பி வைத்தார். மாத்தளை சாகிரா, புத்தளம் சாகிரா, கம்பளை சாகிராக்கள் உருவாகின. அதே போன்றுதான் இந்து வித்தியாலயம், யாழ் இந்து போன்ற கல்லூரிகள் அன்று ஆரம்பிக்கப்பட்டன.

பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் வெள்ளையர்களிடம் சுதந்திரம் வேண்டி நின்ற போது வெள்ளையர்கள் சொன்னது 'உங்களுக்கு சுதந்திரம் தர முடியாது. சுதந்திரம் தந்தால் நீங்கள் பிரிந்து நின்று சண்டை பிடித்து யுத்தம் நடத்தி நாட்டை அழித்து விடுவீர்கள் என்றாகும்.ஆகவே சுதந்திரம் தர உங்களுக்கு வாய்ப்பு இல்லை எனக் கூறினார்கள். முதலில் நீங்கள் சமதானமாகுங்கள் என்றார்கள். பிரச்சினைகளை உருவாக்கி வைத்தார்கள். 50க்கு 50 என்றும் திணித்தார்கள். ஆனால் கலாநிதி ரீ.பி ஜாயா நாடு பூராகச் சென்று அங்குள்ள முஸ்லிம் சங்கங்களையும் நிறுவனங்களையும் சந்தித்து விட்டு அரச சபையில் இருந்த ஏனைய 2 முஸ்லிம் தலைவர்களுடன் பேசி விட்டு, அவர் சுதந்திரம் வேண்டி 1946 செப்டம்பரில் ஆற்றிய உரையை நான் ஹன்சாட்டிலிருந்து வாசித்து மனப்பாடமாகி விட்டது. யுத்தத்திற்கு முன்னர் எமது நாட்டில் பல்கலைக்கழகம், சிவில் சேவைகள், பொலிஸ் சேவை உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தன. 1960களில் எமது நாடு எந்தவொரு நாட்டுடன் கடன் பெறாத நாடாகவும் தமது உற்பத்தியை உருவாக்கி தன்னிறைவு பெற்ற நாடாகவும் விளங்கியது.

அதன் பின்னர் நாம் இனக் குரோதங்களையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்திக் கொண்டோம்.தற்பொழுது யுத்தம் ஓய்ந்து விட்டது.

நாம் காலத்திற்குக் காலம் பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொண்டு சென்றால் அழகானதொரு நாடாக இலங்கையை முன்னேற்ற முடியாது. நமது எதிர்கால சமூகத்திற்காக நல்லதொரு நாட்டை கையளிப்பதற்கு ஒன்றுபடுவோம்".


Add new comment

Or log in with...