Thursday, March 28, 2024
Home » நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் வடக்கு கிழக்குக்கான விசேட வேலைத் திட்டங்கள்

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் வடக்கு கிழக்குக்கான விசேட வேலைத் திட்டங்கள்

by manjula
January 20, 2024 10:24 am 0 comment

கடந்த 4 தசாப்தங்களாக நடைபெற்ற யுத்தத்தால் வட – கிழக்கு பிரதேசம் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தது. கடந்த ஒன்றரை வருடங்களாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சை பொறுப்பேற்ற அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசம் தற்போது சிறந்த முறையில் அபிவிருத்தி அடைந்து வருவதைக் காணக் கூடியதாகவுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி வடக்கின் யாழ். உள்ளிட்ட பல பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் குறித்து தனது அமைச்சின் ஊடாக அவர் அறிவித்துள்ளார்.

முதலாவதாக யாழ். நகரை அபிவிருத்தி செய்வதை பிரதானமாகக் குறிப்பிடலாம். அதில் யாழ். நகர மண்டபத்தை நிர்மாணிப்பது முக்கியமானதாகும். ஆயுதப் போராட்டம் காரணமாக கடந்த 1985 ஆம் ஆண்டு முழுமையாக அழிவடைந்த யாழ். நகர மண்டபத்தின் மீள் நிர்மாணப் பணிகளை, தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக கட்டங்கட்டமாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது. தற்போது இந்த மண்டபத்தின் பௌதிக நிர்மாணம் 70 % நிறைவு பெற்றுள்ள நிலையில் அதற்காக இதுவரை 1,233.34 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் ஆரம்ப மதிப்பீட்டுச் செலவினம் 2,350.00 மில்லியன் ரூபாவாகும். பொருளாதார நெருக்கடி நிலைமையால் நிர்மாணப் பொருட்களின் விலையேற்றத்தை அடுத்து, திருத்தப்பட்ட மதிப்பீடொன்று செய்யப்பட்டது. அதன்படி இத்திட்டத்தின் திருத்தப்பட்ட மொத்த மதிப்பீட்டு செலவு 3,796.70 மில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளது. இந்த திட்டத்தை நிறைவு செய்ய மேலும் 2,536.36 மில்லியன் ரூபா அவசியமாகின்றது.

எவ்வாறாயினும் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் அமைக்கப்படும் இத்திட்டத்தின் முதல் கட்டத்தை நிறைவு செய்ய மேலும் 400 மில்லியன் ரூபா தேவைப்படுகின்றது. அதன்படி யாழ் நகர மண்டபத்தின் முதல் கட்டப் பணிகளை 2024ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்து அடுத்த கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நிறைவு செய்யப்படும். நிறைவு செய்யப்படும் முதல் கட்டத்தை யாழ். மாநகர சபையிடம் கையளிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக யாழ். ஜனாதிபதி மாளிகையை மாணவர்களின் நலனுக்காக செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக யாழ். ஜனாதிபதி மாளிகை மற்றும் அதனுடன் ஒட்டிய 24 ஏக்கர் காணியை வலய மற்றும் தேசிய மட்ட பொருளாதார அபிவிருத்திக்கு கைகொடுக்கும் முதலீட்டு திட்டமொன்றுக்கு பயன்படுத்த ஜனாதிபதியும் அமைச்சரவையும் தீர்மானித்துள்ளன. அதன்படி உத்தேச புதிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக SLIIT நிறுவனம் மற்றும் கனடாவை தளமாக கொண்ட Mgick Woods Canada Inc நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து வடக்கு பல்கலைக் கழகம் ஒன்றினையும் தகவல் தொழில் நுட்ப பூங்காவொன்றினையும் நிறுவ நகர அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

50 வருட ஒப்பந்த காலத்தைக் கொண்ட அரச மற்றும் தனியார் பங்களிப்புடன் கூடிய உத்தேச பல்கலைக்கழகம் மற்றும் தகவல் தொழில் நுட்ப பூங்காவுக்கு முதலீட்டாளர்களால் 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்படவுள்ளது. தற்போது குறித்த காணி மற்றும் கட்டடம் ஆகியன நகர அபிவிருத்தி அதிகார சபையின் பெயருக்கு மாற்றப்பட்டு வரும் நிலையில் உத்தேச திட்டத்துக்கு அமைய முத்தரப்பு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

உத்தேச பல்கலைக் கழகம் ஊடாக பொறியியல் தொழில்நுட்பம், வியாபார முகாமைத்துவம், உயிரியல் தொழில்நுட்பம், சுகாதார சேவை மற்றும் நடவடிக்கை முகாமைத்துவம் ஆகிய பாடநெறிகள் தொடர்பில் ஆண்டுக்கு 10,000 மாணவர்கள் உள்ளீர்க்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மன்னார் வீதியில் சங்குபிட்டி பாலம் அருகே அமையப்பெற்றிருக்கும் பூனகரி சுற்றுலா தொடர்பில் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமையப்பெற்றுள்ளது. அந்த விஷேட நிலைமையை அடிப்படையாகக் கொண்டு நகர அபிவிருத்தி அதிகார சபை பூனகரி நகர அபிவுருத்தித் திட்டங்களை விரைவாக தயாரித்து வருகின்றது. விஷேடமாக பூனகரி நகர அபிவுருத்தியின் கீழ், பூனகரிக் கோட்டையை அண்மித்த சுற்றுலா வலயத்தின் அபிவிருத்தி, பூனகரி நகரின் மத்தியில் கடைத்தொகுதி மற்றும் ஏனைய அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்ய முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் 2024ஆம் ஆண்டில் அமைச்சுக்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வன்முறைகளால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கில் மக்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்யும் பல்வேறு செயற்றிட்டங்கள் கடந்த 2023ஆம் ஆண்டு இந்த அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டது. விஷேடமாக கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வாக, நனோ பிளான்ட் என அறியப்படும் ரிவர்ஸ் ஒஸ்மொசிஸ் தண்ணீர் சேகரிப்பு பிரிவுகள் 50 இனை நிர்மாணிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதில் 25 தற்போதும் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய 25 உம் இந்த வருட இறுதிக்குள் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளன. இதற்காக 2023 இல் ஒதுக்கப்ட்ட நிதி 211 மில்லியன் ரூபாவாகும். 2024இல் இந்த பகுதிகளில் அடிப்படை வசதிகளை விருத்தி செய்ய 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் தேவையின் அடிப்படையில் நிதியினை பகிர்ந்து மேலும் நனோ பிளான்ட்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அமைச்சுக்கு சொந்தமான மீள் குடியேற்ற அலகின் கீழ் நிறுவப்பட்டுள்ள கண்ணிவெடி அகற்றும் செயற்றிட்டத்தின் ஊடாக 213.06 சதுர கிலோ மீற்றர் பரப்பு சந்தேகமற்ற பகுதியாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. இதன்போது தனி நபர் பாதிப்பு கண்ணிவெடிகள் 731510 உம், யுத்த கள கனரக தாங்கிகளை அழிக்க வல்ல கன்னி வெடிகள் 1947 உம், வெடிக்காத யுத்த கள ஆயுதங்கள் 288315 உம் மற்றும் தோட்டாக்கள் 1,065,880 இனை குறித்த நிலப் பகுதியில் இருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சந்தேகமற்ற பகுதியாக மாற்றப்பட வேண்டிய நிலையில் 21.85 சதுர கிலோ மீற்றர் பகுதி எஞ்சியுள்ளது. இவ்வாறு சந்தேகமற்ற பகுதியாக மாற்றப்படும் நிலங்கள், அப்பகுதியில் வதியும் நபர்களின் வீடுகளை நிர்மாணித்தல் உள்ளிட்ட பொருளாதார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும்.

இதற்கு மேலதிகமாக அடுத்த ஆண்டு 25,000 வீடுகளுக்கு சோலார் பேனல்கள் பொருத்தும் திட்டத்தை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படைப் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன. இத்திட்டத்தின் கீழ் அரைவாசிப் பணிகள் நிறைவடைந்த வீடுகளில் சோலார் பேனல்கள் நிறுவப்படும். இதன் மூலம் தேசிய வீடமைப்புத் திட்டத்திற்காக திறைசேரி செலுத்த வேண்டிய பாரிய செலவைக் குறைக்க முடியும். மேலும், தேசிய மின் கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க அளவில் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை சேர்க்க முடியும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT