திருக்கோணமலை - கன்னியா வெந்நீரூற்று பகுதியில் விகாரை கட்டுவதற்கு தடையுத்தரவு | தினகரன்


திருக்கோணமலை - கன்னியா வெந்நீரூற்று பகுதியில் விகாரை கட்டுவதற்கு தடையுத்தரவு

திருக்கோணமலை- கன்னியா வெந்நீரூற்று மற்றும் பிள்ளையார் கோயில் அமைந்திருந்த இடத்தில் விகாரை கட்டுவதற்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று (22) இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கன்னியா வெந்நீரூற்று பகுதியில் அத்துமீறி நுழைந்து சில அடாவடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக திருகோணமலை, மாணிக்கவாசகர் வீதி, இலக்கம் 66இல் வசித்து வரும் கோகில ரமணி திருகோணமலை மேல் நீதிமன்றில் இன்றையதினம் எழுத்தானை விண்ணப்பமொன்றை தாக்கல் செய்தார்.

இவ்வழக்கு இன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்பட்டபோது எதிர் மனுதாரர்கள் சார்பில் பணிப்பாளர், தொல்பொருள் திணைக்களம், கொழும்பு மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து வெந்நீர் ஊற்று பகுதிக்கு அருகாமையில் பிள்ளையார் கோயில் இருந்த இடத்தில் விகாரை கட்டுவதற்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதேவேளை மனுதாரரையோ அல்லது மற்றைய பக்தர்களையோ கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் கோயிலுக்கு அல்லது அதனை அண்மித்த பகுதிக்கோ செல்வதை தடுக்கக் கூடாது எனவும் அப்பகுதியில் அனுமதிச் சீட்டுக்கள் வழங்குவதை தடை செய்யுமாறும் எதிர்மனுதாரர்கள் மாரியம்மன் கோயிலுக்கு உரித்தான ஆதனங்களை நிர்வகிப்பதை தடுக்கக் கூடாது எனவும் திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவினை விதித்துள்ளது.

இதேவேளை எதிர்மனுதாரர்கள் அடுத்த மாதம் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளையிட்டுள்ளார்.

(ரொட்டவெவ குறூப் நிருபர் அப்துல்சலாம் யாசீம்)


Add new comment

Or log in with...