'ஏப்ரல் 21' தாக்குதலுக்கு முஸ்லிம்கள் பொறுப்பு கூற வேண்டியதில்லை | தினகரன்


'ஏப்ரல் 21' தாக்குதலுக்கு முஸ்லிம்கள் பொறுப்பு கூற வேண்டியதில்லை

கர்தினால் மெல்கம் ரஞ்சித்

உயிர்த்த ஞாயிறுதினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு முழுமையான பொறுப்பை அரசாங்கமே ஏற்க வேண்டும். ஆகவே, நாட்டை ஆட்சிசெய்யக்  கூடிய தரப்பினரிடம் ஒப்படைத்துவிட்டு அரசாங்கம் விரைவாக ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் தெரிவித்தார்.  

பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்கான நீர்கொழும்பு கட்டுவாப்பிடி புனித செபஸ்டியன் தேவாலயம் புனரமைக்கப்பட்டு நேற்று முதல்முறையாக வழிபாடுகள் நடைபெற்றன. பேராயர் தலைமையில் நடைபெற்ற இவ்வழிபாடுகளில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.  

வழிபாடுகளின் பின்னர் மக்களுக்கு கருத்து வெளியிட்ட பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்ஜித், 

உயிர்த்த ஞாயிறுதினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு முஸ்லிம் சமூகம் பொறுப்புக்கூற வேண்டியதில்லை. நாட்டில் கலவரமொன்றை ஏற்படுத்தி சர்வதேச சக்திகளின் நோக்கங்களை நிறைவேற்றவே அறியாத முட்டாள் இளைஞர்களை இதற்காக பயன்பத்தியுள்ளனர்.

அரசியல் தலைமைகள் சர்வதேச சக்திகளின் தேவைக்கேற்ப செயற்பட்டுக்கொண்டுள்ளனர். வலுவிழந்துள்ள நாட்டை வலுப்படுத்த தலைமைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மிகவும் பலமாகவிருந்த புலனாய்வுத்துறை பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. வனாத்தவில்லு முகாமில் சுற்றிவளைக்கப்பட்ட தீவிரவாதிகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்காது விடுவிக்கப்பட்டனர். அதேபோன்று மாவனல்ல புத்தர் சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகள் அரசியல் தலைமைத்துவதின் கீழ் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் முதல் சட்டவாக்கத்துறை மற்றும் நிறைவேற்றுத்துறைக்கு இடையில் காணப்பட்ட முரண்பாடுகள் காரணமாக பாதுகாப்புச் சபை கூட்டப்படவில்லை. பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்றிருந்த புலனாய்வுத் தகவல்கள் எவரும் கண்டுக்கொள்ளாதமையாலேயே இந்நிலைமை ஏற்பட்டது.

இவை அனைத்துக்கும் அரசாங்கம்தான் பொறுப்புக்கூற வேண்டும் என்றார்.


Add new comment

Or log in with...