அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்பதில்லை | தினகரன்


அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்பதில்லை

மு.கா அதியுயர்பீடம் முடிவு

பிரதமரை இன்று சந்திக்க ஏற்பாடு

முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை அமைச்சு பொறுப்புக்களை ஏற்காதிருக்க நேற்று நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் அதியுயர் பீட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து தமது முடிவை அறிவிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. மக்கள் காங்கிரஸும் இதே நிலைப்பாட்டில் இருப்பதாக கட்சி முக்கியஸ்தர் ஒருவர் தினகரனுக்கு தெரிவித்தார். மு.கா மத்திய குழு கூட்டம் நேற்று (21) காலை 10.30க்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் ஆரம்பமானது. இக்கூட்டம் மாலை 03.30 வரை இடம்பெற்றது. பலவேறு வாத பிரதிவாதங்களுடனும் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டன. இந்த கூட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம், நாடுபூராவுமுள்ள முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை, கிழக்கில் எமக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் தீர்த்துக் கொள்ள வேண்டிய பிரச்சினைகள் என்பன தொடர்பில் நிரந்தரமான தீர்வொன்று கிடைத்த பின்னரே அடுத்த கட்ட முடிவு எடுப்போம்.

தற்பொழுது முகங்கொடுத்து வரும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்க வேண்டும். அது தொடர்பில் அரசாங்கத்தை அறிவூட்டியுள்ளோம். இதற்கு துரித தீர்வு கிடைக்க வேண்டும்.

கல்முனை விவகாரம் உட்பட சில பிரச்சினைகள் இருக்கின்றன.கல்முனை போன்று வேறு சில பகுதிகள் குறித்தும் பிரச்சினை காணப்படுகிறது. அரசின் முடிவுகளுக்கு அமையவே எதிர்கால செயற்பாடுகள் எடுக்கப்படும்.

அமைச்சு பொறுப்புகளை ஏற்பது தொடர்பில் இன்னும் முடிவில்லை. அது கால தாமதமாகும். இன்று (22) பிரதமருடன் சந்திப்பு இருக்கிறது. அதன்போது எமது முடிவை அறிவிக்க இருக்கிறோம்.

எமது பிரச்சினைகள் தொடர்பில் அரசு வழங்கும் முடிவிலே நாம் அமைச்சு பதவிகள் ஏற்பது தங்கியுள்ளது.

5 ஆம் திகதி ஐ.தே.க தலைமையில் ஆரம்பிக்கப்பட இருக்கும் புதிய கூட்டணியில் நாம் அங்கம் வகிப்பதா இல்லையா என்பதும் அரசின் பதிலிலே இருக்கிறது. கூட்டணியில் இணைவது குறித்து கட்சிக்குள் ஆராயப்படவில்லை. அது தொடர்பில் நாம் மீண்டும் கூடி ஆராய இருக்கிறோம் என்றும் கூறினார்.

பிரதமரும் ஜனாதிபதியும் அமைச்சு பதவிகளை ஏற்குமாறு கோரினாலும் ஏன் ஏற்காதிருக்கிறீர்கள் என வினவியதற்கு பதிலளித்த அவர் ,அவ்வாறு ஓடிச்சென்று அமைச்சு பதவிகளை ஏற்கவேண்டிய தேவை எமக்குக் கிடையாது.

மீண்டும் பொறுப்புகளை ஏற்கும் நோக்கத்துடன் நான் அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்யவில்லை.இன்னும் சில காலங்களே எஞ்சியுள்ளன.நாம் மீண்டும் அமைச்சு பதவிகளை ஏற்பதா இல்லையா என்பதை கட்சி தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் தரப்புடன் இணையப் போகிறீர்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த மு.கா தலைவர்,நாம் இன்னும் எந்த ஒரு அரசியல் ரீதியான முடிவும் எடுக்கவில்லை என்றார்.

பிரதமருக்காக நாம் கடந்த காலத்தில் பல அர்ப்பணிப்புகளை செய்துள்ளோம்.அவரை பாதுகாக்கவும் அவரின் அரசாங்கத்தை பாதுகாக்கவும் பங்களித்திருக்கிறோம். எனவே எமது அர்ப்பணிப்புகள் தொடர்பில் கவனம் செலுத்தியே அவர் எமது கோரிக்கைகள் தொடர்பிலும் செயற்பட வேண்டும். அது நிறைவேறும் என நம்புகிறேன் என்றார்.

முஸ்லிம் எம்.பிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பொய் என்பது நிரூபனமாகியுள்ளது. இதனை ஆரம்ப முதல் நாம் அறிந்திருந்தோம். இதனை நீரூபிக்கவே கால அவகாசம் வழங்கினோம். அதன்பின்னர் உருவாகியுள்ள புதிய பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். இத்தனை காலமும் இல்லாதிருந்த பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன. மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிடின் அரசுடன் இணைவது தொடர்பில் மீள ஆராய நேரிடும் என்றார்.

ரிசாத் பதியுதீன் அடங்கலான சகலரும் இதே நிலைப்பாட்டிலா இருக்கிறார்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், ஆம் சகலரும் ஒன்றாகத்தான் அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்தோம். அவர்கள் தனியாக சென்று அமைச்சு பதவிகளை ஏற்பார்கள் என்று நினைக்கவில்லை. ஒன்றாகவோ அனைவரும் முடிவு எடுத்தோம். ஒன்றாகவே எதிர்காலத்திலும் செயற்படுவோம் என்று தெரிவித்தார்.

நாம் பதவி விலகிய பின்னர் உருவான பிரச்சினைகள் தொடர்பில் தீர்வு வழங்கப்படவேண்டும் என்றும் கூறிய அவர், சேதமாக்கப்பட்ட சொத்துக்களுக்காக இதுவரை எந்த ஒரு நஷ்டஈடும் வழங்கப்படவில்லை என்றும் கூறினார்.

தாக்குதல் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட ​வேண்டும். காரணமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். நாட்டின் பாதுகாப்பு தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும்.

பிரச்சினைகளை மேலும் அதிகரிக்கும் வகையில் சில தரப்பினர் செயற்படுகின்றனர். ஒரு தரப்பு மக்களை தூண்டும் வகையில் செயற்படுகின்றது என்றும் கூறினார்.

இது தொடர்பில் வினவியதற்கு பதிலளித்த சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி, கிழக்கு மாகாணத்துடன் தொடர்புள்ள சில பிரச்சினைகள் தொடர்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமரை இன்று சந்திக்க எந்த ஏற்பாடும் கிடையாது எனவும் அவர் கூறினார்.முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் அமீர் அலி ஆகியோர் வெளிநாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

(பா)

ஷம்ஸ் பாஹிம்


Add new comment

Or log in with...