உயிரைப் பணயம் வைக்கும் விபரீத விளையாட்டுகள்! | தினகரன்


உயிரைப் பணயம் வைக்கும் விபரீத விளையாட்டுகள்!

நாட்டின் காலநிலையில் தற்போது மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. நாடெங்கும் பல மாதங்களாக நிலவிய கொடிய வரட்சிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை பெய்யத் தொடங்கியுள்ளது. மலையகப் பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. இந்நிலையில் வெள்ளம், மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் மற்றும் நீரில் மூழ்குவதால் ஏற்படுகின்ற உயிராபத்து தொடர்பாக மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டியுள்ளது.

மண்சரிவு, வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களில் மக்கள் எதிர்பாராதவிதமாக அகப்பட்டுக் கொள்வதென்பது சிலவேளைகளில் தவிர்க்க முடியாத ஆபத்தாகிப் போகின்றது. ஏனெனில் இவ்வாறான அனர்த்தங்கள் திடீரென ஏற்படுவதாகும்.

அதேசமயம் வெள்ளம் ஏற்படாத காலத்திலும் நீரில் மூழ்குவதால் பலர் அநியாயமாக உயிரிழக்கும் சம்பவங்கள் வருடாந்தம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. கடலில் அல்லது குளங்கள் போன்ற நீர்நிலைகளில் மூழ்குவதால் வருடாந்தம் பலர் பரிதாபமாக மரணமடைகின்றனர்.

இலங்கை உயிர்காப்பு சங்கத்தின் தலைவர் அசங்க நாணயக்கார வெளியிட்டுள்ள தகவலின்படி, இலங்கையில் வருடாந்தம் சுமார் 1,100 பேர் நீரில் மூழ்கும் விபத்துகளால் உயிரிழப்பதாகத் தெரியவந்துள்ளது. இலங்கை போன்ற சிறியதொரு நாட்டில் இவ்வாறான உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகமானதென்றே கருத வேண்டியுள்ளது.

பலவிதமான விபத்துகளால் சம்பவிக்கின்ற மரணங்களை எடுத்துக் கொள்வோமானால் அவற்றில் நீரில் மூழ்குவதால் சம்பவிக்கின்ற மரணங்களின் எண்ணிக்கை இரண்டாவதாக உள்ளதாக அசங்க நாணயக்கார கூறுகின்றார். அதேசமயம் உலகெங்கும் நீரில் மூழ்கி உயிரிழப்போரின் எண்ணிக்கையை நோக்குமிடத்து இலங்கை 16வது இடத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முன்னரெல்லாம் ஆறுகள், குளங்களில் தோணிகள் கவிழ்வதால் மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுவதுண்டு.இன்றைய காலத்தில் அவ்வாறான விபத்துகள் வெகுவாகக் குறைந்துள்ளன. மக்கள் முன்னர் படகுப் பயணம் மேற்கொண்ட அநேக இடங்களில் இப்போது பாலங்கள் அமைக்கப்பட்டு விட்டன. பல இடங்களில் பாதுகாப்பாக ஆற்றைக் கடக்கும் ‘படகுப் பாதை’ பயன்படுத்தப்படுகின்றது. மேலும் சில இடங்களில் உயிர்காப்பு மிதவை அங்கிகளை படகுகளில் செல்லும் போது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறிருக்கின்ற போதிலும் கூட, எமது நாட்டில் வருடாந்தம் சுமார் 1,100 பேர் நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனரென்றால், மேற்படி பரிதாப மரணங்களுக்கு அலட்சியமும் கவனக்குறைவுமே காரணமாகின்றன எனலாம்.

‘செல்ஃபி’ மோகம் என்பது பலரின் உயிரைப் பறித்து விட்டது. கடற்கரையோரமாக அமைந்துள்ள கற்பாறைகளின் உச்சியில் ஏறி நின்றபடி தங்களை ‘செல்ஃபி’ படம் பிடிக்க முற்பட்ட பலர் கடலுக்குள் தவறி வீழ்ந்து பலியாகிப் போயுள்ளனர்.இவ்வாறான சம்பவமொன்று சில தினங்களுக்கு முன்னரும் நாட்டின் தென்பகுதி கடலோரத்தில் இடம்பெற்றது.

கடலோரம் காணப்படுகின்ற கருங்கற் பாறைகளின் அடியில் கடலின் ஆழம் எப்போதும் அதிகமாகவே காணப்படுவதுண்டு. அலைத்தாக்கமும் அவ்விடத்தில் அதிகமாகவே இருக்கும். ஈரமான கற்பாறைகள் வழுக்கும் தன்மையைக் கொண்டிருக்கும்.

இரண்டு மூன்று பேர் ஒன்றாகக் கூடி நின்று ‘செல்ஃபி’ படம் பிடிக்கின்ற வேளையில்,அவர்களில் ஒருவரின் கால் பாறையில் வழுக்கிக் கொண்டாலே அங்கு ஆபத்து தவிர்க்க முடியாததாகி விடுகின்றது. கால் வழுக்கிக் கொண்ட ஒருவர் ஏனையோரையும் இழுத்துக் கொண்டபடிதான் கடலுக்குள் விழுவார். இல்லையேல் அவரைக் காப்பாற்ற முற்படுகின்ற மற்றவர்களும் அவருடன் சேர்ந்து கடலுக்குள் விழுந்து மூழ்கும் ஆபத்து ஏற்படுகின்றது.

‘செல்ஃபி’ மோகத்தினால் சம்பவிக்கின்ற இதுபோன்ற விபத்து மரணங்கள் கடலில் மாத்திரமன்றி, மலையகத்திலும் அவ்வப்போது சம்பவிப்பதுண்டு.வழுக்கும் தன்மையுடைய பாறைகளின் மீது ஏறி நின்று ‘செல்ஃபி’ எடுப்பதற்கு முற்பட்ட பலர் நீரோட்டத்துக்குள் தவறி வீழ்ந்து,பலியாகிப் போயுள்ளனர். இந்த ஆபத்து தொடர்பாக துறைசார் நிபுணர்களும், சமூகநல நிறுவனங்களும் ஊடகங்கள் வாயிலாக இளவயதினருக்கு அறிவுரைகள் வழங்கி வருகின்ற போதிலும், அவற்றால் இதுவரை பலன் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. இதற்கெல்லாம் காரணம் ‘செல்ஃபோன்’ மீதான பித்து!

இளவயதினரின் கல்விக்கும், அவர்களது நல்லொழுக்கத்துக்கும் பெரும் சவாலாக அமைந்திருக்கிறது ‘ஸ்மாட் ஃபோன்’. அதன் ஊடாக காலடிக்கு வருகின்ற சீர்கேடுகளெல்லாம் ஒருபுறமிருக்க, ‘செல்ஃபி’ என்பது மற்றொரு ஆபத்து ஆகும். தங்களைத் தாங்களே புகைப்படம் பிடித்துக் கொள்கின்ற இந்த விபரீத விளையாட்டினால் கற்பாறைகளில் இருந்து வீழ்ந்தும், நீருக்குள் மூழ்கியும், புகையிரதத்தில் அகப்பட்டும் பரிதாபமாக உயிரிழந்து போனோரின் எண்ணிக்கை அதிகம்.

நீரில் மூழ்குவதால் சம்பவிக்கின்ற மரணங்கள் பலவற்றுக்கு இளவயது குறும்புத்தனங்களும் துணிச்சலும் கூட காரணமாக அமைகின்றன.கடல், ஆறு மற்றும் குளங்களில் நீராடும் போது நீரில் மூழ்கி பலர் மரணமடைகின்றனர். நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து கடலில் நீராடச் செல்லும் வேளைகளில், அலையில் அகப்பட்டு இளைஞர்கள் மரணமடையும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.

கடலில் மூழ்கிப் பலியானோரில் பலர் தங்களது பெற்றோருக்குத் தெரியாமலேயே கடலுக்குச் சென்றிருப்பது பின்னர்தான் தெரியவந்துள்ளது. எனவே பெற்றோர் எவ்வேளையிலும் தமது பிள்ளைகளின் நடத்தைகள் குறித்து அவதானமாக இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.

கடலால் இதுவரை பலிகொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏராளம். எச்சரிக்கைகளும் அறிவுரைகளும் கூறப்பட்டு வருகின்ற போதிலும் கடலுக்குப் பலியாகும் பரிதாப மரணங்களை இன்னுமே தடுத்து நிறுத்த முடியாமலுள்ளது. பலியாவோரில் கூடுதலானோர் இளவயதினராவர். விபத்துகள் மீதான அலட்சியமே இந்த விபரீதங்களுக்குக் காரணமாகின்றது.

இலங்கையில் பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பமாகி விட்டது. குளங்கள் திறந்து விடப்படுவதும், ஆறுகள் திடீரெனப் பெருக்கெடுப்பதும் எந்நேரமும் இடம்பெறக் கூடும். நீர்நிலைகளுக்கு அருகில் வசிப்போர் மட்டுமன்றி, ஆறுகள் குளங்களில் நீராடச் செல்லும் இளவயதினரும் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் உயிராபத்தில் இருந்து பாதுகாப்புப் பெற முடியும்.

 


Add new comment

Or log in with...