வெளிநாடுகளின் தேவைக்காகவே தமிழ் கூட்டமைப்பு செயற்படுகிறது | தினகரன்


வெளிநாடுகளின் தேவைக்காகவே தமிழ் கூட்டமைப்பு செயற்படுகிறது

அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்குத் தேவையான வேலைகளை மாத்திரமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்து கொண்டிருக்கின்றது. அதுவே அக்கட்சிக்காரர்களின் பிரதான நிகழ்ச்சி நிரலாக உள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வாழ்கின்ற தமிழ் மக்கள் பற்றி அவர்களுக்கு எவ்வித அக்கறையும் இல்லை என தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.  

அக்கரைப்பற்று மாநகர சபையின் புதிய பிரதி மேயராக எம்.சி.எம்.யாசீர் பதவியேற்றுக் கொண்டார். வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் ஏ.எல்.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில், நாட்டில் வாழும் சிறுபான்மைச் சமூகத்திற்கு இன்று எத்தனையோ பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன. நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு எவ்வகையான பிரச்சினைகள் வந்து விட்ட போதிலும், வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து சமஷ்டி ஆட்சியொன்றினை எமக்குத் தாருங்கள் என்றே அவர்கள் ஆட்சியாளர்களிடம் கோருகின்றார்கள். இக்கூட்டமைப்பினர் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழ்கின்ற தமிழ் மக்கள் பற்றிய கவலையே இல்லை. அவ்வாறானவர்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகள் பற்றி அவர்கள் கணக்கில்கூட எடுப்பதில்லை.  

இன்றைய காலகட்டத்தில் மலையக மக்கள் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் படுகின்ற அவஸ்தைகளை அவர்கள் ஏறெடுத்துப் பார்த்திருக்கின்றார்களா?, மலையக மக்களுக்கு முறையான வீடமைப்பு வசதியில்லை. ஒது துண்டு நிலத்திற்காக அவர்கள் படுகின்ற அவஸ்த்தைகள் இவர்கள் காதுகளில் விழுவதில்லையா?, அம்மக்களுக்கு வேண்டிய அனைத்து அடிப்படை வசதிகளையும் முறையாக பெற்றுக் கொள்வதில் பாரிய சவால்களை அம்மக்கள் எதிர்கொள்வதை இவர்கள் கணக்கில் கூட எடுக்காமல் இருப்பதன் அர்த்தம் என்ன?இந்த நாட்டில் உள்ள பிரஜைகள் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பாக வாழ்வதற்குரிய அரசியல் யாப்பும் சட்டமும் இயற்றப்பட வேண்டும். அதுவே தற்போதுள்ள தேவையாக உள்ளது.  

மேலைத்தேய நாட்டவர்கள் தமக்கு வேண்டியவாறும் தாம் நினைத்த மாத்திரத்திலும் நமது நாட்டு யாப்பினை மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். அரசியல் யாப்பு ஸ்தீரமானதாக இருக்கும்போதுதான் அந்நிய நாட்டவர்கள் எமது நாட்டுக்குள் நுழைய முடியாமல் போகும். அதற்காக அனைத்து மக்களுக்கும் பொதுவான ஓர் யாப்பினை உருவாக்க வேண்டும்.  

தேர்தல்கள், அரசியல் தலைமைகள், ஆட்சி அதிகாரம் என்பன போன்ற பல்வேறு விடயங்களில் அந்நிய நாட்டு சக்திகள் எமது நாட்டுக்குள் புதைந்து கிடக்கின்றன. நாடு முழுவதும் வெளிநாட்டு உளவாளிகள் வேவு பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

சிறியதோர் எமது நாட்டிற்கு மாகாண சபை முறை என்பது பொருத்தமானதல்ல. சிறிய நாடொன்றை கூறுகளாக்கிக் கொண்டு ஆட்சி நடத்துவதில் நன்மைகள் ஏற்படப்போவதில்லை. மாகாண எல்லைகளால் சமூகங்களைப் பிரிக்காமல் அனைத்து சமூகத்தவர்களும் ஒற்றுமையாக வாழ்வதற்குரிய நிலைமை நம் நாட்டில் ஏற்படுத்தப்பட வேண்டும். நம் நாட்டில் இருபத்தைந்து சதவீதமுள்ள சிறுபான்மைச் சமூத்தினை எழுபத்தைந்து சதவீதமுள்ள பெரும்பான்மைச் சமூகத்திற்கு வாழ வைப்பதற்கான வழி தெரியவில்லையா? நாம் அனைவரும் வாழக்கூடியவாறு நாடு இருந்தால்தான் நிம்மதியாக வாழ முடியும் அல்லது சண்டையிட ஏற்படும்.தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காகவேண்டி கலவரங்கள் உருவாக்கப்படுகின்றன. முஸ்லிம் மக்கள் அதற்காக கிள்ளுக் கீரைகள் போல் பாவிக்கப்படுகின்றார்கள். நாம் பேச வேண்டிய எத்தனையோ விடயங்கள் நமக்கிருந்தும் நமது பராக்குகளை வேறு திசைகளுக்குத் திருப்பி விட்டு இன்று ஓர் பிரிவினர் சஹரான் போன்றோரை தமது கையில் எடுத்து உலகரங்கில் பல மாற்றங்களை செய்வதற்கான எத்தனிப்புக்கள் நடப்பதையும் நாம் காண்கின்றோம் என்றார். இந்நிகழ்வின்போது அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அஹமட் சக்கி உள்ளிட்ட மாநகர சபை உறுப்பினர்கள், துறைசார் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.   

அட்டாளைச்சேனை தினகரன், அக்கரைப்பற்று மேற்கு தினகரன் நிருபர்கள்  


Add new comment

Or log in with...