காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்களுக்கு வரவேற்பு | தினகரன்


காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்களுக்கு வரவேற்பு

மாகாண மட்ட 18வயதுக்குற்பட்ட உதைபந்தாட்ட போட்டியில் சம்பியனாகத் தெரிவு செய்யப் பட்ட காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்களை வரவேற்கும் வைபவம் (17) காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் நடைபெற்றது.

காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசியப் பாடசாலையின் அதிபர் எஸ்.எச்.பிர்தௌஸ் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிப்பாளர் எஸ்.எம்.எஸ் உமர்மௌலானா, காத்தான்குடி கோட்டக் கல்விப்பணிப்பாளர் ஏ.ஜே.எம்.ஹக்கீம், முன்னாள் கோட்டக்கல்விப்பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.பதுர்தீன் உட்பட உதவிக் கல்விப்பணிப்பாளர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது மாகாண மட்ட 18 வயதுக்குற்பட்ட உதைபந்தாட்ட போட்டியில் சம்பியணாகத் தெரிவு செய்யப் பட்ட காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்கள் காத்தான்குடி குட்வின் சந்தியிலிருந்து மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதுடன் அதிதிகளும் வரவேற்கப்பட்டனர்.

கிழக்கு மாகாண மட்ட பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டியில் காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசியப் பாடசாலை அணி வெற்றி பெற்று கிழக்கு மாகாண சம்பியன் அணியாக (2019) தெரிவு செய்யப்பட்டுள்ளது.

18வயதுக்குற்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட உதை பந்தாட்டச் சுற்றுப் போட்டி திருகோணமலையில் இடம் பெற்றது. இந்தப் போட்டியின் இறுதிப் போட்டி திங்கட்கிழமை(15) நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை உதைபந்தாட்ட அணியும் காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசியப் பாடசாலை அணியும் மோதியது.

இதில் எந்தவொரு அணியும் கோள்களை போடாத நிலையில் ஆட்டம் சம நிலையில் முடிவடைய பெணல்டியில் 5க்கு4 என்ற அடிப்படையில் காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலை அணி வெற்றி பெற்று கிழக்கு மாகாண சம்பியன் அணியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் தேசிய மட்ட போட்டிக்கும் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...