ராஜ்யசபாவில் 23 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஒலிக்கும் உறுமல்! | தினகரன்


ராஜ்யசபாவில் 23 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஒலிக்கும் உறுமல்!

'நாடாளுமன்ற புலி' என அழைக்கப்படும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வரும் 25-ந் திகதி ராஜ்யசபாவில் பதவி ஏற்கிறார். கொந்தளிக்கும் அரசியல் சூழலில் வைகோவின் பேச்சுகள் அனலைக் கிளப்பும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

1978-ஆம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தொடர்ந்து தி.மு.க எம்.பியாக ராஜ்யசபாவில் முழங்கியவர் வைகோ. 1998, 1999 லோக்சபா தேர்தல்களிலும் வைகோ வென்று எம்.பியானார்.

தற்போது 23 ஆண்டுகளுக்குப் பின்னர் ராஜ்யசபாவுக்குள் மீண்டும் நுழைகிறார் வைகோ. எதிர்வரும் 25ம் திகதி வைகோ, தி.மு.கவின் சண்முகம் மற்றும் வில்சன் ஆகியோர் எம்.பிக்களாக பதவி ஏற்கின்றனர்.1978-ம் ஆண்டு அவசரகாலச் சட்டத்தில் சிறைவாசம் அனுபவித்த வைகோவை ராஜ்யசபாவுக்கு அனுப்பி வைத்தார் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் வழிகாட்டுதலில் ராஜ்யசபாவில் வைகோவின் உறுமல் அதிர வைத்தது. அதனால்தான் 'நாடாளுமன்ற புலி' என்கிற பெருமை அவருக்கு கிடைத்தது.

தமது நாடாளுமன்ற அனுபவங்கள் குறித்து வைகோ பேட்டி ஒன்றில் குறிப்பிடுகையில், "அது நாடாளுமன்ற வரலாற்றில் பொற்காலம் எனலாம். இடதுசாரி தலைவரான பூபேஷ் குப்தா, பிலூ மோடி, பேராசிரியர் என்.ஜி. ரங்கா, வாஜ்பாய், அத்வானி என ஜாம்பவான்கள் அப்போது நாடாளுமன்றத்தில் இருந்தனர். இவர்களிடம்தான் அர்ப்பணிப்பு உணர்வையும் எப்படி சபையில் தெரிவிக்க வேண்டிய கருத்துகளை தெரிவிப்பது என்பதையும் கற்றுக் கொண்டேன்" எனக் குறிப்பிட்டார்.

தற்போதைய ராஜ்யசபாவில் ஜாம்பவான்கள் இல்லை. இடதுசாரிகள் பெரும் எண்ணிக்கையில் இல்லை. வலதுசாரிகளால் நிறைந்து இருக்கிறது ராஜ்யசபா. அதேநேரத்தில் வலதுசாரி குரல்களை கடுமையாக எதிர்க்கக் கூடிய, மாநில உரிமைகளை பேசக் கூடிய திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சி எம்.பிக்கள் இருக்கின்றனர்.தாலாட்டிசைத்துக் கொண்டிருக்கும் ராஜ்யசபாவில் ஜூலை 25-இல் வைகோ எனும் புலி நுழைந்து என்ன உறுமலை காட்டுமோ? என்பது அவரது ஆதரவாளர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆனால் வைகோவை உள்ளே நுழைய விட்டால் கிழித்து தொங்க விடுவாரோ எனும் பேரச்சத்தில் வலதுசாரிகள் இருக்கிறார்கள் என்பதைத்தான் சுப்பிரமணியன் சுவாமியின் ட்வீட்டர் பதிவுகள் வெளிப்படுத்துகின்றன. வைகோவுக்கு பதவிப் பிரமாணமே செய்து வைக்கக் கூடாது என அ.தி.மு.க எம்.பியான சசிகலா புஷ்பா மனு கொடுத்திருக்கிறார். சுப்பிரமணியன்சுவாமி குலைநடுங்கி உள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

ஏனெனில் இதே சுப்பிரமணியன் சுவாமியை நாடாளுமன்ற வளாகத்தில் வைகோ மிரட்டியதும் ராஜ்யசபாவில் ஓடிப் போய் "ஐயோ என்னை கோபாலசாமி கொலை செய்வதாக மிரட்டுகிறார்" எனக் கூறியதும் பழைய கதைகள்.

அது தொடர்பாக நடந்த விவாதத்தில் வைகோ ‘ஆடிய ஆட்டத்தை'யும் அனுபவித்தவர் சுப்பிரமணியன் சுவாமி. அது வரலாற்று படிப்பினை என்பது மிகையல்ல.

இது இவ்விதமிருக்க, தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு வழங்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், "ஒரு முறைக்கு இரு முறை யோசித்து பேசுங்கள்" என அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 2009-ஆம் ஆண்டு ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பேசியிருந்தார். இதையடுத்து அவருக்கு எதிராக தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த ஜூலை 5-ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் வைகோவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் ரூ 10 ஆயிரம் அபராதமும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து வைகோ சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு கடந்த வியாழனன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், "இந்தியாவின் ஒருமைப்பாட்டை பாதிக்காத வகையில் சிந்தித்து பேசுங்கள்" என்றும் "ஒரு முறைக்கு இரு முறை யோசித்து பேசுங்கள்" என்றும் அறிவுறுத்தியுள்ளது. வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறைத் தண்டனையை விசாரணை முடியும் வரை நீதிபதிகள் நிறுத்தி வைத்தனர்.


Add new comment

Or log in with...