இணைய கலாசார வளர்ச்சியினால் இளவயதினருக்கு வீண் துயரங்கள் | தினகரன்

இணைய கலாசார வளர்ச்சியினால் இளவயதினருக்கு வீண் துயரங்கள்

இணைய கலாசாரம் உச்ச வளர்ச்சி அடைந்து வருகிறது. இன்று இணையம் நன்மை-, தீமைகள் என இரண்டு பக்கங்களைக் கொண்டுள்ளது. வளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றத்தில் கணினி பயன்பாடுகள் மிக இன்றியமையாத பங்கு வகிக்கின்றன. கணனி பயன்பாடுகள் இல்லாத துறைகளே இல்லை எனலாம். இன்று கிராமங்களில் கூட இணைய பயன்பாடு என்பது மிக சாதாரணமாக உள்ளது. எனவே இணைய கலாசாரம் உச்ச வளர்ச்சி அடைந்து வருகிறது.

உலகளாவிய அளவில் பல்வேறு வலைத்தளங்கள் உலகத் தகவல் அனைத்தையும் நம் கண்முன்னே நம் இல்லத்திலேயே அள்ளித் தருகின்றன. இதில் பொழுதுபோக்கிற்காக அமைக்கப்பட்ட பல சமூக வலைத்தளங்களும் அடங்கும். மின்னஞ்சல் முகவரி வைத்திருப்பதையே பெரியதாகக் கருதும் இன்றைய சூழலில் தற்போது சமூக வலைத் தளங்களில் கணக்கு இல்லாதவர்கள் அற்பமாக பார்க்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் ஆகியவற்றில் கணக்கு இல்லாதவர்களை எண்ணி நகையாடுகின்றனர். வாழ்க்கையில் அங்கமாகவே சமூகவலைத் தளம் மாறி விட்டது எனலாம்.சமூக வலைத் தளங்கள் பொழுதுபோக்கிற்காக மட்டுமின்றி பல நன்மைகளையும் நல்கிக் கொண்டிருக்கின்றன. கருத்துகளை பரிமாறிக் கொள்ளவும், பொருளாதார வளர்ச்சிக்கும், மக்களை ஒன்றிணைக்கவும், தகவல் பரிமாற்றத்திற்கும் சமூக வலைத்தளங்கள் உதவுகின்றன.

அயல்நாடுகளில் வாழும் பலரும் சமூக வலைதளங்களின் உதவியுடன் தங்களது கருத்துகளையும், புகைப்படங்களையும், வீடியோ பதிவுகளையும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். வணிக நிறுவனங்கள் சமூக வலைத் தளங்கள் மூலம் பொருட்களை விளம்பரம் செய்து வாடிக்கையாளரின் கருத்துகளை நேரடியாக அறிந்துகொள்ள முயல்கின்றன. இதனால் வணிக நிறுவனங்களின் வளர்ச்சிக்கு சமூக வலைத் தளங்களின் பங்கு முக்கியமாக இருக்கிறது.

சமூக வலைத் தளங்களை பயன்படுத்தி சில சமூகவிரோதிகள் தவறான செயலிலும் ஈடுபடுகின்றனர். ஆபாசமான புகைப்படங்களையும், வீடியோ பதிவுகளையும் வெளியிடுகின்றனர். இதனால் இளம் வயதினரின் மனதில் சலனம் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

அதுமட்டுமின்றி சில பெண்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகி வெளியில் சொல்ல முடியாமல் தற்கொலையும் செய்து கொள்ளும் சம்பவமும் நிகழ்கிறது. 24 மணி நேரமும் சமூக வலைத் தளங்களையே பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு வெளியில் அவர்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல் போகிறது.

ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கடமைகள் இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் சமூக வலைத்தளங்களில் மூழ்கி இருப்பது துன்பத்தையே ஏற்படுத்தும். சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்கள் அதில் உள்ள நன்மை,- தீமைகளை அறிந்து அளவோடும், பாதுகாப்போடும் பயன்படுத்தினால் இதுபோன்ற குற்றங்களை குறைக்க இயலும். அதிலும் குறிப்பாக பெண்கள் புத்திசாலித்தனமாகவும், சற்று விழிப்போடும் பயன்படுத்துவது நன்மை பயக்கும்.

உதயா


Add new comment

Or log in with...