ஐம்பது ரூபா மாதாந்த சம்பளத்துடன் சேர்க்கப்படாது | தினகரன்


ஐம்பது ரூபா மாதாந்த சம்பளத்துடன் சேர்க்கப்படாது

தோட்டத் தொழிலாளர்களுக்கான 50 ரூபா, மாதாந்த சம்பளத்துடன் இணைக்கப்படாது. அதனை ஒரு கொடுப்பனவாகவே வழங்க முடியும் என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

நாள் சம்பளத்துடன் 50 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு நாம் இடமளிக்க மாட்டோம். திறைசேரி 600 மில்லியன் ரூபாவை வழங்கினால் நாமும் அமைச்சிலிருந்து 600 மில்லியன் ரூபாவை வழங்குவோம்.  அதற்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டால் பதவி விலக தயாராகவுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், இது தொடர்பில் பிரதமருக்கும் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள இலங்கைத் தேயிலை சபையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை தொடர்ந்து அரச வருமானம் குறைவடைந்துள்ளது. இதனால் இலங்கைத் தேயிலை சபைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் 15 வீதத்தை குறைக்குமாறு திறைசேரிக்கு கூறப்பட்டுள்ளது.

அதேபோன்று கம்பனிகள் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. 100 ரூபாவை அதிகரித்து கொடுத்தால் இன்னும் இரண்டு வருடங்களில் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுமெனக் கூறியுள்ளன. 50 ரூபாவை நாம் ஒரு கொடுப்பனவு எனக் கூறினாலும், அடுத்த கூட்டு ஒப்பந்தத்தில் குறித்த தொகையானது அடிப்படைச் சம்பளத்துடன் வழங்கப்பட வேண்டுமென வேண்டுகோள் விடுப்பர்.

அத்துடன், 800 ரூபாவிலிருந்தே பேச்சுவார்த்தைகளையும் ஆரம்பிப்பர். அது கம்பனிகளுக்கு பாரிய இழப்பை ஏற்படுத்தும்.

50 ரூபாவை வழங்க தேயிலை சபையிலிருந்து 600 மில்லியனை வழங்குவதாக நாங்கள் கூறியிருந்தோம். கம்பனிகள் 600 மில்லியனை வழங்க ஒத்துக்கொண்டால் மாத்திரமே எம்மால் நிதியை ஒதுக்கீடு செய்ய முடியும். அவர்கள் ஒதுக்காது முன்கூட்டியே நிதியை ஒதுக்கீடு செய்து அதனை மீண்டும் திறைசேரிக்கு அனுப்ப நாங்கள் தயாராக இல்லை.

தேயிலை சபையால் கொடுக்கப்படும் நிதியை கொடுக்க வேண்டாமென ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர். ஆகவே, பொறுமையாக பார்த்துக் கொண்டிருக்கின்றேன். சம்பளத்துடன் இணைக்காது வேறு வழியில்,இக் கொடுப்பனவை கொடுக்க முடியும் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்


Add new comment

Or log in with...