இயற்கை அனர்த்த பாதிப்புக்களை தவிர்க்க உதவும் முன்னவதானம் | தினகரன்


இயற்கை அனர்த்த பாதிப்புக்களை தவிர்க்க உதவும் முன்னவதானம்

தற்போது நாட்டில் தென்மேல் பருவப்பெயர்ச்சி மழைவீழ்ச்சி காலநிலை ஆரம்பித்துள்ளது. இதன் விளைவாக மலையகம், தென்பகுதி உட்பட நாட்டின் பல பிரதேங்களிலும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகின்றது. அந்தவகையில் இரத்தினபுரியில் மாத்திரம் 172 மில்லி மீற்றர்கள் மழைவீழ்ச்சி நேற்று முன்தினம் பதிவாகியுள்ளது. என்றாலும் அதேதினம் பல இடங்களுக்கு 100 மில்லி மீற்றர்களுக்கும் மேற்பட்ட மழை வீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனால் மலையகத்தின் பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் பெரிதும் அதிகரித்துள்ளது. அதன் காரணத்தினால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள், லக்ஷபான நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள், கெணியன் நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு என்றவாறு வான்கதவுகள் திறக்கப்பட்டு மேலதிக நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன.

இந்த தொடர் மழை மற்றும் நீர்த்தேக்கங்களின் மேலதிக நீர் வெளியேற்றப்படுதல் என்பன காரணமாக களனி கங்கை மற்றும் களுகங்கைகளின் நீர் மட்டம் உயர்ந்து வருவதாகவும் இவ்விரு கங்கைகளதும் தாழ் நிலப் பிரதேசங்களில் வசிக்கும் மக்களை விழிப்பாக இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு கேட்டுள்ளது.

இதேவேளை மலையகப் பிரதேசங்களில் தொடராக கனத்த மழை பெய்து வருவதால் பல பிரதேசங்களில் வெள்ள நிலைமையும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கொட்டகலை, அக்கரப்பத்தனை பிரதேசங்களில் நேற்று முன்தினம் வெள்ள நிலைமை ஏற்பட்டது. அதனால் டொரிங்டன் தோட்டத்தின் ஆசுரலபெத்த பிரிவைச் சேர்ந்த பன்னிரெண்டு வயது மாணவிகள் இருவர் வெள்ளநீரில் அடித்து ச்செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர். அத்தோடு இவ்வெள்ள நீர் இப்பிரதேசத்திலுள்ள 63 வீடுகளுக்குள்ளும் 10 கடைகளுக்குள்ளும் புகுந்துள்ளன.

மேலும் கொட்டகல, மேபீல்ட், சாமஸ் பகுதியிலுள்ள தொடர் மாடி குடியிருப்பொன்றில் 06 வீடுகளும், லொக்பீல் பகுதியில் 30 வீடுகளும், வூட்டன் பிரதேசத்தில் 10 கடைகளும் வெள்ளநீரினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வட்டவளை பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை காரணமாக பல குடும்பங்கள் இடம்பெயர்ந்து வட்டவளை தமிழ் வித்தியாயத்தில் பாதுகாப்பாகத் தங்கியுள்ளனர்.

இந்த சீரறற்ற காலநிலை காரணமாக மலையகத்தின் பல பிரதேசங்களிலும் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுகின்றது. அந்த வகையில் கினிக்கத்தேனவில் நேற்று முன்தினம் ஏற்பட்ட மண்சரிவினால் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்தோடு 10 கடைகள் முற்றாக அழிவடைந்துள்ளன. என்றாலும் கொழும்பு, ஹற்றன், நுவரெலியா வீதிகளின் பல இடங்களில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.

அதனால் மண்சரிவு அபாயம் காணப்படும் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையோடும் விழிப்போடும் நடந்து கொள்ள வேண்டும் என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இவை இவ்வாறிருக்க, இச்சீரற்ற காலநிலையினால் களுகங்கையின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் இரத்தினபுரி, எலபாத, அயகம, கிரியெல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் மக்களை விழிப்பாகவும் முன்னவதானத்துடனும் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டிருக்கின்றது. அத்தோடு இப்பிரதேசங்களில் அச்சுறுத்தல் மிக்க பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை நேற்று முன்தினம் மன்னார் முதல் காலி, மாத்தறை வரையான கரையோரப் பிரதேசங்களில் கடும் காற்று வீசியது. இதன் விளைவாக பல பிரதேங்களில் உயரமான மரங்களும் அவற்றின் கிளைகளும் முறிந்து வீழ்ந்துள்ளன. இதனால் சில பிரதேசங்களில் வீதிப் போக்குவரத்து தடங்களும் மின்சாரத் துண்டிப்புக்களும் எற்பட்டன. சூரியவெவவில் மரமொன்றின் கிளையொன்று ஆட்டோ வண்டியில் முறிந்து விழுந்ததில் ஒரு தாயும் இரண்டு பெண் பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு காலி துறைமுகத்தை நோக்கி சென்று கொண்டிருந்த 'ஸ்ரீ லங்கன் குளோரி' என்ற கப்பல் இக்கடுங்காற்றில் சிக்கி விபத்துக்கு ள்ளானது. அக்கப்பலில் இருந்த கப்பல் பணியாளர்களை காலி கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டெடுத்தனர். என்றாலும் கப்பல் காலி ருமஸ்ஸ பகுதி கரைக்கு அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

இந்த சீரற்ற காலநிலையைக் கருத்தில் கொண்டு மீனவர்கள் கடற்றொழிலுக்காக கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கடலுக்கு சென்றுள்ள மீனவர்களை அருகிலுள்ள மீன்பிடித் துறைமுகங்களுக்கு திரும்புமாறும் இலங்கை கடற்படை கேட்டுள்ளது.

தற்போதைய சீரற்ற காலநிலையால் இவ்வாறு பலவிதமான அனர்த்தங்களும், பாதிப்புக்களும் ஏற்பட்ட வண்ணமுள்ளன. குறிப்பாக மண்சரிவு, வெள்ளம் மற்றும் கடுங்காற்று என்பவற்றினால் ஏற்படக்கூடிய இயற்கை அனர்த்த அச்சுறுத்தல் அதிகரித்துள்ளன. அதனால் அவற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களையும், தேசங்களையும் குறைக்கவும் தவிர்க்கவும் தேவையான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.

என்றாலும் பொதுமக்கள் வளிமண்டலவியல் திணைக்களம், கடற்படை, அனர்த்த முகாமைத்துவ நிலையம், தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் என்பவற்றின் அறிவிப்புக்கள் தொடர்பில் இன்றைய காலப்பகுதியில் விஷேட கவனம் செலுத்தி செயற்பட வேண்டும். குறிப்பாக வெள்ளம், மண்சரிவு, கடுங்காற்று என்பவற்றினால் அனர்த்தம் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் முன்சமிக்ஞை தென்படுமாயின் தாமதமின்றி பாதுகாப்பான இடங்களுக்கு தற்காலிகமாக இடம்பெயருவதே உசிதமானது.

இவ்வாறு முன்னவதானத்துடனும், விழிப்புடனும் செயற்படும் போது இந்த அனர்த்தங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களையும் சேதங்களையும் தவிர்த்துக்கொள்ளவோ குறைத்துக்கொள்ளவோ முடியும். தற்போதைய சூழலில் அதுவே மிக முக்கியமான தேவையாகும்.


Add new comment

Or log in with...