Friday, April 19, 2024
Home » IMF குழுவினர் – சஜித் இடையே சந்திப்பு

IMF குழுவினர் – சஜித் இடையே சந்திப்பு

- நாட்டின் நிலவரத்தினை எடுத்துரைப்பு

by Prashahini
January 19, 2024 10:14 am 0 comment

நாட்டின் உண்மையான நிலவரத்தினை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு எடுத்துக் காட்டினார்.

நாட்டின் பொருளாதாரத்தின் அண்மைய போக்குகளை ஆய்வு செய்வதை முக்கிய நோக்கமாக கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் (IMF) குழு மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான சந்திப்பொன்று நேற்று (18) மாலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றது.

சர்வதேச நாணய நிதியத்தை பிரதிநிதித்துவப்படுத்தி Mr Peter Breuer (Senior Mission Chief),Ms Sarwat Jahan (Resident Representative),Manavee Abeyawickrama (Local Economist) ஆகியோர் கலந்து கொண்டனர்.

தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை எனக் கூறி மக்களுக்கு பெரும் வரிச்சுமைய சுமத்தி, VAT உட்பட பல்வேறு வகையான வரிகளை கூடியளவில் பிறப்பித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.

பொது மக்கள்,கர்ப்பிணித் தாய்மார்கள், குழந்தைகள்,நடுத்தர வர்க்கத்தினர்,அரச ஊழியர்கள் என பல துறைகளைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆதாரங்களுடனும்,உண்மை சாட்சி மற்றும் தரவுகளுடனும் இங்கு சுட்டிக்காட்டினார்.

எனவே, ஐக்கிய மக்கள் சக்தி அமைக்கும் அரசாங்கத்தின் கீழ், தற்போதைய அரசாங்கம் IMF உடன் ஒருதலைப்பட்சமாக எட்டிய உடன்பாட்டை திருத்தியமைத்து பொது மக்களுக்கு முக்கியமான, மக்கள் சார் உடன்பாட்டை எட்ட எதிர்பார்கின்றோம். இதற்கான முறையான வேலைத்திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு சுட்டிக்காட்டினார்.

அத்துடன், தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளினால் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்களை ஆதரவற்ற நிலையில் இருந்து விடுவிக்கவும், தற்போதுள்ள வங்குரோத்து நிலையில் இருந்து நாட்டை மீட்டு, துயரிலும், ஆதரவற்ற நிலையிலிருந்தும் மக்களை காப்பாற்ற, ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியில் இருந்து செயற்படுவது போலவே அரச அதிகாரம் கிடைத்தவுடன் செயற்படுவதற்கான முறையான திட்டம் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இச்சந்திப்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன, கபீர் ஹாசிம், சுஜீவ சேனசிங்க, கலாநிதி நாலக கொடஹேவா மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திசத் விஜேகுணவர்தன உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT