சீரற்ற காலநிலையினால் இரத்தினபுரியில் 1,250 பேர் பாதிப்பு | தினகரன்


சீரற்ற காலநிலையினால் இரத்தினபுரியில் 1,250 பேர் பாதிப்பு

இரத்தினபுரி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, 331குடும்பங்களை சேர்ந்த 1,250 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, இரத்தினபுரி மாவட்ட செயலகம் தெரிவித்தது.

எலபாத்த, இரத்தினபுரி, கிரியெல்ல, அயகம, நிவித்திகல, களவான, எஹலியகொடை, காவத்தை, பெல்மதுளை, இம்புலபே ஆகிய 10பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள 51கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள 08குடும்பங்களை சேர்ந்த 47 பேர், 03 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதோடு, பாதிக்கப்பட்டவர்களில்  370  பேர் தமது உறவினர்களின் வீடுகளில்  தஞ்சமடைந்துள்ளனர்.

மேற்படி மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினால் இதுவரையில் 2 குடியிருப்புகள் முற்றாக சேதமடைந்துள்ளதோடு,  52 குடியிருப்புகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக இரத்தினபுரி மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள், கடற்படையினர், இராணுவத்தினர், பொலிஸார், நீர்ப்பாசன திணைக்களம், தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் உட்பட அரச திணைகளங்கள் என்பன செயற்பட்டு வருகின்றன.

இரத்தினபுரி மாவட்டத்தில நேற்று(18) வெள்ளத்தில் மூழ்கிய  முந்துவ மற்றும் எலபாத்த, கிரியெல்ல, அயகம உட்பட பல்வேறு பகுதிகளில்; தற்போது வெள்ளநீர் வடிந்து வருவதோடு,  களுகங்கையின் நீர்மட்டமும் குறைந்து காணப்படுகின்றது.

இருந்தபோதும் இம்மாவட்டத்தில் இன்று(19) காலை முதல் வானம் இருண்ட நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.

மேற்படி மாவட்டத்தில் இன்றையதினம் (19) பாடசாலைகளில் மாணவர்களின் வரவு மிகவும் குறைவடைந்து காணப்பட்டது.

இதேவேளை இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலியகொடை, களவான, கிரியெல்ல, அயகம, குருவிட்ட, எலபாத்த ஆகிய பிரதேசங்களில் பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதாக அனர்த்தஅ முகாமைத்துவ மத்திய நிலையம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

(காவத்தை தினகரன் விசேட நிருபர் - சிவா ஸ்ரீதரராவ்)


Add new comment

Or log in with...