அக்கரப்பத்தனை சம்பவம்; மற்றைய சகோதரியின் சடலம் மீட்பு | தினகரன்


அக்கரப்பத்தனை சம்பவம்; மற்றைய சகோதரியின் சடலம் மீட்பு

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டொரிங்டன் தோட்டத்தில் நீரில் அடித்து செல்லப்பட்ட மற்றுமொரு மாணவியின் சடலம் இன்று (19) காலை மீட்கப்பட்டுள்ளது.

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டொரிங்டன் தோட்டத்தில் நேற்று (18) மாலை சகோதரிகள் இருவர் பாடசாலை முடிவடைந்து வீடு திரும்புகையில், அங்குள்ள நீரோடையொன்றில் தவறி வீழ்ந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இவர்களில் மதியழகன் லக்ஷ்மியின் சடலம் நேற்றையதினம் மாலை மீட்கப்பட்டு, அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நீரில் காணாமல் போன மற்றைய மாணவியான மதியழகன் சங்கிதாவை தேடும் பணியில்  அக்கரப்பத்தனை பொலிஸார், அதிரடிப்படையினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், மதியழகன் சங்கிதாவின் சடலம் இன்று காலை கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீரேந்திச் செல்லும் டொரிங்டன் தோட்டக் கால்வாய் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் 300 அடி தூரத்திலேயே குறித்த மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மதியழகன் சங்கிதாவின் சடலம், அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, பின்னர் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 மற்றும் 10 வயதுடைய சகோதரிகளான இவர்கள் இருவரும், டொரிங்டன் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயின்று வந்தனர்.

(ஹற்றன் சுழற்சி நிருபர் - ஜி.கே. கிருஷாந்தன்)  

 

 

 


Add new comment

Or log in with...