தமிழிலக்கியங்களில் கூடல் இழைத்தல் | தினகரன்


தமிழிலக்கியங்களில் கூடல் இழைத்தல்

கூடல் இழைத்தல்' என்பது சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள திருமணம் தொடர்பான நம்பிக்கை. தலைவனிடம் காதல் கொண்ட பெண் தரையில் மணலைப் பரப்பி கண்களை மூடிக்கொண்டு தன் சுட்டு விரலால் மணலில் வட்டமாக வரைய சுட்டுவிரல் தொடங்கிய இடத்தில் வந்து முடிந்தால் தலைவி நினைத்தது நடக்கும் என்றும்; சரியாகப் பொருந்தாவிடின் நினைத்தது நடக்காது என்றும் நம்பினர்.

"திருமணம் செய்ய வருவேன்' எனக் கூறிச்சென்ற தலைவன் வருவானோ மாட்டானோ என்ற ஐயப்பாடு தலைவியின் உள்ளத்தில் எழும். இதுவே "கூடல் இழைத்தல்' எனப்படும்.

இதற்கு "சுழி இடுதல்' என்ற மாற்றுப் பெயருமுண்டு. அப்பரடிகள் இந்நிகழ்வை எடுத்தோதுகின்றார்.

"பாடலாக்கிடும் பண்ணொடு பெண்ணிவள்கூடலாக்கிடும் குன்றின் மணற்கொடுகோடல் பூத்தளலர் கோழம்பத்துள் மகிழ்ந்துஆடுங்கூத் தனுக்கன்பு பட்டாளன்றே' (5-64-4).

இதே நிகழ்வை மாணிக்கவாசகர் திருக்கோவையாரில் "சுழிக் கணக்கு' என்கிற பெயரில் அருளிச் செய்துள்ளார்.

"ஆழிதிருத்தும் புலியூர் உடையான்அருளின் அளித்துஆழி திருத்தும் மணற்குன்றின் நீத்துஅகன்றார் வருகவென்றுஆழி திருத்திச் சுழிக்கணக்குஓதி நையாமல் ஐயஆழி திருத்தித் தாக்கிற்றி யோஉள்ளம் வள்ளலையே' (திருக்:186).

கூடலாவது, வட்டமாகக் கோட்டைக் கீறி அதற்குள்ளே சுழிசுழியாகச் சுற்றும் சுழித்து இரண்டு சுழியாகக் கூட்டினால் இரட்டைப்பட்டால் "கூடுகை' என்றும் ஒற்றைப்பட்டால் "கூடாமை' என்றும் பொருளாகும்.

தம் இல்லத்தில் கூடல் இழைக்கின்றாள் தலைவி ஒருத்தி.

ஒருமுனை மறு முனையுடன் கூடவில்லை. இளம்பிறையைப் போல் விளங்க அது முழு நிலவாய் மாறி வருத்துமே என எண்ணுகிறாள்.

தாம் உடுத்தியிருந்த ஆடையால் அதை மூட இளம்பிறையை அணியும் சிவபெருமான் பிறையைத் தேடுவான் என எண்ணுகின்றாள். தாம் சிவனுக்கு அதைக் கொடுத்து உதவி புரிந்தவளாக எண்ணுகின்றாள்.  எனவே, துணியால் மூடாது விடுகின்றாள்.

இக்காட்சி கலித்தொகையில் (கலி.142) கண்ணுக்கு விருந்தாகிறது.

இதையே, "இலக்கண விளக்கம்' எனும் நூலில் (மேற்கோள் செய்யுள்), "அண்டர் கிளைக்கும் தெரிவரு கேதகை நீழல்கிளியிருந்து வளைக்கும் சுழிக்கும் அழிக்கும்ஒண்கூடல் வளைக்கைக் கொண்டே' எனக் கூறப்பட்டுள்ளது.

கூடல் இழைத்தலை உள்ளடக்கி நாட்டுப்புறப் பாடலும் ஒன்றுண்டு.

ஒருபெண் கூடல் இழைப்பதாகக் கருதி அம் முயற்சியில் ஈடுபடுகின்றாள். தன் முன்னால் மணலைப் பரப்பி, கண்களை மூடிக் கொள்கிறாள்.  "அவனைச் சேர்வேனாயின் வட்டங்கள் ஒன்று சேர்க' என்றெண்ணி மணலைத் தொட்டாளே தவிர அவ்விரல் அசையவே இல்லை. இக்காட்சியைப் படம் பிடிக்கும் பாடல் இது.

"கூடற் பெருமானைக் கூடலார் கோமானைக்கூடப் பெறுவேனேல் கூடென்று - கூடல்இழைப்பாள் போல் காட்டி இழையா திருக்கும்பிழைப்பில் பிழைபாக் கறிந்து!' (முத், 86)

சிறுமியாக இருந்தபொழுது ஆண்டாள் கண்ணன் மேல் காதல் கொண்டு கூடல் இழைத்ததை "நாச்சியார் திருமொழி' ("தெள்ளியார் பலர்கை தொழும் தேவனார்') எடுத்துரைக்கிறது.

இதிலுள்ள பத்துப் பாசுரங்களிலும் தமிழ்க் கவியால் கண்ணனுக்கு வட்டமிடுகிறார் ஆண்டாள்.

 "கூடல் இழைத்தல்' குறித்து மேலும் கயிலைபாதி காளத்திபாதி, நான்முகன் திருவந்தாதி, ஐந்திணை ஐம்பது, சீவகசிந்தாமணி, கலிங்கத்துப்பரணி முதலிய இலக்கியங்களும், இன்னபிற இலக்கியங்களும் எடுத்தோதுகின்றன.

கூடல் இழைத்தலுக்குத் தமிழிலக்கியங்கள் பல்வேறு வகையான பெயர்களைச் சூட்டியுள்ளன.

தமிழரின் மணற் சோதிடம், அதிசய சுழி, மணற்சுழி சோதிடம், கோடு இயைதல், கூடல் இயைதல் என்பன அவை!

 

இரா. வேதநாயகம்


Add new comment

Or log in with...