Home » சகோதரத்துவம் ஓர் இஸ்லாமிய பார்வை

சகோதரத்துவம் ஓர் இஸ்லாமிய பார்வை

by sachintha
January 19, 2024 6:09 am 0 comment

 

இஸ்லாம் ஒரு முழுமையான வாழ்க்கைத் திட்டம். சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்தஆலா வகுத்தளித்திருக்கும் இவ்வாழ்க்கை நெறி அல்லாஹ்விடம் மனிதனுக்காக அங்கீகரிக்கப்பட்டிருப்பதாகும். உலகம் இருக்கும் வரையும் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்குமான வாழ்க்கை நெறி இது. மனிதனின் ஆன்மீக, லௌஹீக வாழ்வு குறித்து ஆழ அகலமாகக் கவனம் செலுத்தி தெளிவான வழிகாட்டல்களை வழங்கிக் கொண்டிருக்கிறது இவ்வாழ்க்கைநெறி.

அந்த வகையில் மனிதனின் சமூக வாழ்வில் சகோதரத்துவத்திற்கு இஸ்லாம் அதிக முக்கியத்துவம் அளித்திருக்கிறது. சகோதரத்துவம் என்பது பொதுவாக பிறப்பை அடிப்படையாகக் கொண்டது. ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள் சகோதரர்களாவர்.

ஆனால் இஸ்லாம் இந்த சகோதரத்துவத்தை அங்கீகரித்துள்ள அதேநேரம் சகோதரத்துவத்தைப் பரந்த கண்ணோட்டத்துடன் நோக்கியுள்ளது. இஸ்லாத்தில் இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் சகோதரர்களாவர். இதனை அல் குர்ஆன், ‘நிச்சயமாக நம்பிக்கையாளர்கள் அனைவரும் சகோதரர்களே… (49:10) என்றுள்ளது.

இதன்படி இஸ்லாத்தில் சகோதரத்துவம் என்பது நிலத்தையோ, நிறத்தையோ, மொழியையோ, பட்டம் பதவியையோ வசதி வாய்ப்புக்களையோ அடிப்படையாகக் கொண்டதல்ல. அவற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்கப்படுவதுமில்லை. வரையறை செய்யப்படுவதுமில்லை என்பது தெளிவாகிறது.

இறைவிசுவாசிகள் ஒருவருக்கொருவர் சகோதரர்களாவர். அவர் கருப்பரா, ​வெள்ளையரா, உயர்ந்தவரா, தாழ்ந்தவரா, மொழி ரீதியாகவும் நில ரீதியாகவும் வேறுபட்டவரா, பட்டம் பதவிகளில் ஏற்றத்தாழ்வு கொண்டவரா, ஏழையா பணக்காரரா, என்ற வேறுபாடு எதுவுமே பார்க்கப்படுவதுமில்லை. இப்பின்புலத்தில் இஸ்லாத்தைப் பின்பற்றும் கருப்பரும் வெள்ளையரும் சகோதரர்களாகின்றனர். அ​தேபோன்று முன்பின் அறிமுகமில்லாதவர்கள் மாத்திரமல்லாமல் அறிமுகமில்லாத மொழி பேசுபவர்களையும் இஸ்லாம் சகோதரர்களாக்கி வைத்திருக்கிறது.

இஸ்லாம் போதிக்கும் சகோதரத்துவத்தின் உண்மைத்தன்மையை நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்ட சகோதரத்துவ உடன்படிக்கை அர்த்தபூர்வமாக்கி வைத்துள்ளது. அது மனித வரலாற்றில் தடம்பதித்த உடன்படிக்கை என்றால் அது மிகையாகாது. அதாவது நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற பிறகு தம்மோடு வருகை தந்த மக்காவைச் சேர்ந்த இறைவிசுவாசிகளுக்கும் இஸ்லாத்தை ஏற்று தம்மோடு இணைந்து கொண்ட மதீனா வாசிகளுக்கும் இடையில் முதலில் சகோதரரத்துவ உடன்படிக்கையை செய்து வைத்தார்கள். இவ்வாறு உடன்படிக்கை செய்து வைக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் முன்பின் அறிமுகம் இல்லாதவர்களாவர். அவர்களை இறைநம்பிக்கை தான் சகோதரர்களாக இணைத்து வைத்தது.

அதேநேரம் நபி (ஸல்) அவர்கள் சகோதரத்துவம் தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் எடுத்தியம்பியுள்ளார்கள். அவற்றின் ஊடாக இறைநம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட சகோதரத்துவத்தை அன்னார் வலியுறுத்தி ஊக்குவித்துள்ளார்கள். ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், ‘ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு சகோதரர் ஆவார். அவரை அவர் துன்புறுத்தக்கூடாது (வெறுக்கக்கூடாது), மற்றவர்களின் தயவில் அவரை விட்டு விடவும் கூடாது’ என்று கூறியுள்ளார்கள்.

(ஆதாரம்: ஸஹூஹ் முஸ்லிம்)

இந்நபிமொழியும் இறைநம்பிக்கை சகோதரத்துவத்தின் முக்கிய அடிப்படை என்பதை எடுத்துக்காட்டுகிறது. இறைநம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவர்கள் ஒருவரை ஒருவர் வெறுக்கவும் முடியாது, ஒதுக்கவும் முடியாது, தனிமையில் விட்டுவிடவும் முடியாது. அடுத்தவரின் தயவில் விட்டிடவும் கூடாது. அந்தளவுக்கு வலுவானதும் இறுக்கமானதும் தான் இஸ்லாம் போதித்துள்ள சகோதரத்துவம்.

மற்றொரு தடவை நபி (ஸல்) அவர்கள், ‘ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஒர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புக்களும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டு விடுகிறது’ என்றுள்ளார்கள்.

(ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)

இறைநம்பிக்கையாளர்கள் உண்மையில் அவ்வாறு இருக்க வேண்டியவர்கள். அதுவே இஸ்லாத்தின் போதனையாகும்.

ஒரு உடலின் ஏதாவது ஒரு உறுப்பில் சுகவீனம், வலி ஏற்பட்டால் அதனை முழு உடலும் உணர்வது போன்றும் ஒரு உறுப்புக்குக் கஷ்டம் ஏற்படும் போது, ஏனைய உறுப்புக்களும் அதற்கு உதவி செய்வதுபோன்றும் ஒரு முஃமினுக்குச் சிரமம் ஏற்பட்டால் ஏனைய இறை நம்பிக்கையாளர்களும் அவருக்கு உதவ வேண்டும். ஏனெனில் மனித வாழ்வில் இன்பம், துன்பம், கஷ்டம், சிரமம் என்பன ஏற்படுவதும் அவை மாறிமாறி வருவதும் இயல்பானது. அதனால் கஷ்டம், துன்பம் சிரமங்களுக்கு உள்ளாகும் இறைநம்பிக்கையாளர்களுக்கு ஏனைய இறைநம்பிக்கையாளர்கள் உதவி, ஒத்துழைப்புக்களை நல்க வேண்டும். உடல் உழைப்பில் மாத்திரமல்லாமல் சமூக, பொருளாதார, அரசியல் வாழ்விலும் உதவி ஒத்துழைப்புக்களை நல்குவது இறை நம்பிக்கையாளரின் பொறுப்பாகும். இதுவே இஸ்லாத்தின் வழிகாட்டலும் போதனையும் ஆகும்.

அதேநேரம், ”முஃமின்கள் தங்களிடையே நேசிப்பதற்கும், கருணை காட்டுவதற்கும், இணைந்திருப்பதற்கும் உதாரணமானதானது, ஓர் உடலைப் போன்றதாகும். அதில் ஏதேனும் ஓர் உறுப்பு நோயுற்றால் எல்லா உறுப்புக்களும் காய்ச்சலையும் தூக்கமின்மையையும் முறையிடுகின்றன’ (ஆதாரம்: ஸஹீஹுல் புஹாரி, ஸஹீஹ் முஸ்லிம்), என்றும் ”முஸ்லிம்கள் ஒரே உடலைப் போன்றவர்கள். கண் வலியை முறையிட்டால் அனைத்து உறுப்புகளும் முறையிடுகின்றன. தலைவலியை முறையிட்டால் அனைத்து உறுப்புக்களும் முறையிடுகின்றன’ (ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்) என்றும் கூட நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

மற்றொரு சந்தர்ப்பத்தில், ‘ஒரு முஃமின், மற்றொரு முஃமினுக்கு கட்டிடத்தைப் போன்றவராவார். அதில் ஒரு பாகம் மற்றொரு பாகத்திற்கு வலுச் சேர்க்கிறது’ (ஆதாரம்: ஸஹீஹுல் புஹாரி, ஸஹீஹ் முஸ்லிம்) என்றும் நபி (ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

இவ்வாறு சகோதரத்துவத்தை வலியுறுத்தி வழிகாட்டியுள்ள இஸ்லாம், இறைநம்பிக்கையாளர்களுக்கு இடையிலான ஒற்றுமைக்கும் முக்கியத்துவம் அளித்துள்ளது. சகோதரத்துவம் பலமாகவும் இறுக்கமாகவும் இருப்பதற்கு ஒற்றுமை இன்றியமையாததாகும்.

இதனை அல் குர்ஆன், ‘நம்பிக்கையாளர்களே… நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்பட வேண்டிய முறைப்படி உண்மையாகப் பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் இறந்து விட வேண்டாம்’. (3:102)

மேலும் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வுடைய (வேதம் எனும்) கயிற்றைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். (உங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு) நீங்கள் பிரிந்து விட வேண்டாம். (3:103) என்று குறிப்பிட்டிருக்கிறது.

இஸ்லாம் சகோதரத்துவத்திற்கு அளித்துள்ள முக்கியத்துவம் வெளிப்படையானது, தெளிவானது. அது பரந்த கண்ணோட்டம் கொண்டது.

இருப்பினும் இஸ்லாம் சகோதரத்துவத்துக்கு அளித்துள்ள முக்கியத்துவத்தைப் பெரும்பாலானவர்கள் அறியாதவர்களாக உள்ளனர். அதன் விளைவாகவே சிரமங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் பொருளாதார கஷ்டங்களுக்கும் உள்ளாகியுள்ள இறைநம்பிக்கையாளர்கள் சமூகத்தில் அதிகரித்து காணப்படுகின்றனர். தான் உண்டு, தன் குடும்பம் உண்டு என்ற மனப்பான்மை முஸ்லிம்களில் அதிகரித்திருப்பது இதற்கு பெரிதும் பங்களித்துள்ளது. இஸ்லாம் போதித்துள்ள சகோதரத்துவம் வீழ்ச்சியடையவும் இது பெரிதும் உதவியுள்ளது. அதனால் இறைவிசுவாசிகளின் துன்பங்கள், நெருக்கடிகள் நீங்கவென தம்மைப் படைத்த இறைவனிடம் பிரார்த்தனை கூட செய்யாதவர்களாக சகோதர இறைவிசுவாசிகள் உள்ளனர். இது இஸ்லாமிய வழிகாட்டல்களுக்கு மாற்றமானதாகும்.

ஆகவே அல் குர்ஆனினதும் நபிமொழிகளதும் போதனைகளுக்கு அமைய சகோதரத்துவத்தைப் பேணுவது இன்றியமையாததாகும். அது இம்மையிலும் மறுமையிலும் நன்மைகள் பெற்றுத்தரக்கூடியதாக இருக்கும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT