கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலய வழிபாட்டுக்கு சென்ற பக்தர்களுக்கு இடையூறு | தினகரன்


கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலய வழிபாட்டுக்கு சென்ற பக்தர்களுக்கு இடையூறு

கன்னியா பகுதியில் பதற்ற நிலை

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயத்தை உடைத்து அங்கு விகாரை கட்டுவதற்கு தொல்பொருள் திணைக்களமும் பௌத்த பிக்குகளாலும் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழர்களின் மரபுரிமை பாதுகாக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியும் போராட்டம் இடம்பெற்றது.

இப் போராட்டமானது நேற்று முற்பகல் 11 மணியளவில் வெந்நீரூற்று ஆலயப் பகுதியில் இடம்பெற்றதுடன் இதில் வடக்கு கிழக்கு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை

கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயத்தினை பௌத்த மதத்தவர்கள் ஆக்கிரமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழர் மரபுரிமையை பாதுகாக்க வலியுறுத்தியும் வழிபாட்டுடன் கூடிய கவனயீர்ப்பு போராட்டத்தை தென்கையிலை ஆதினமும் கன்னியா மரபுரிமை அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

இந் நிலையில் இவ் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வடக்கு கிழக்கிலிருந்து பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர் .

இவ்வாறான நிலையில் சிங்கள பௌத்தத்துக்கு உரிமையான இடத்தை தமிழர்கள் வன்முறையாக்க முயல்வதால் போராட்டம் இன முறுகலை எற்படுத்தும் என குறிப்பிட்டு பொலிஸாரால் திருகோணமலை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றம் இப் போராட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பித்தது.

இத் தடையுத்தரவு போராட்டக்காரர்களிடம் தனி சிங்கள மொழிமூலம் வழங்கப்பட்டது. இதனையடுத்து, கன்னியா வெந்நீரூற்று கிணறுகள் அமைந்திருக்கும் இடத்திற்கு ஆர்ப்பாட்டமாக செல்ல முயன்ற தமிழ் மக்களை, இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து தடுத்தனர். இதனால் அப் பகுதியில் குழப்பமும் பதட்டமும் ஏற்பட்டது.

வீதியிலிருந்து வழிபாடு

இதன்போது வழிபாடுகளை மேற்கொள்ள மாத்திரம் அனுமதி தருமாறு மக்கள் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்தனர்.எனினும் பொலிஸார் அதற்கு அனுமதியளிக்காத நிலையில், கன்னியா பிரதான வீதியில் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த மக்கள், அந்த இடத்திலேயே பிரார்த்தனைகளை மேற்கொண்டு போராட்டத்தை நடத்தினர்.

ஆதீன குருமுதல்வர் மீது சுடு தேனீர் வீச்சு

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் வெந்நீரூற்று கிணறுகள் அமைந்திருந்த பிரதேசத்திற்கு குறித்த கிணறுகள் அமைந்துள்ள காணியின் உரிமையாளரான கோகிலரமணி அம்மையார் மற்றும் தென் கையிலை ஆதீனத்தை சேர்ந்த அகர்த்தியர் அடிகளார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டனர். இதன்போது, அங்கு குழுமியிருந்த பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த சிலர் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இருவர் மீதும் சுடு தேநீரை வீசி தென்கயிலை ஆதீன குருமுதல்வர் அகத்தியாயர் அடிகளாரையும் கோகிலாமணி அம்மையாரையும் அவமானப்படுத்தினர்.

அநாகரிகமாக அணுக முற்றபட்டவர்களை பொலிஸார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் மக்களினால் முன்வைக்கப்பட்டது. எனினும் எவரும் கைது செய்யப்படவில்லை .

போராட்டத்துக்கு வருகை தந்தவர்கள் மீது கெடுபிடி

இதேவேளை போராட்டத்திற்கு வருகை தந்த மக்களிடம் கடுமையான உடல், உடமை சோதனைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பிட்ட தூரத்துக்கு முன்னரே பல இடங்களில் இராணுவத்தினராலும் பொலிஸாராலும் இச் சோதனை முன்னெடுக்கப்பட்டதுடன் வருகைதந்த மக்கள் அனைவரையும் இராணுவம் மற்றும் பொலிஸார் ஒவ்வொரு சோதனை சாவடிகளிலும் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தினர் .

இராணுவம் மற்றும் கலக்கம் அடக்கும் பொலிஸார் குவிப்பு

போராட்டம் இடம்பெற்ற இடத்தில் ஆயுதம் தாங்கிய முகத்தினை மூடிய நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டனர். மேலும் குறித்த பகுதிக்கு செய்தி சேகரிக்க சென்ற தமிழ் ஊடகவியலாளர்களும் கடுமையான உடல், உபகரண பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இடையூறு செய்யப்பட்டனர்.

ரி.விரூஷன், ரொட்டவெவ குறூப் நிருபர்


Add new comment

Or log in with...