உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்து நியூஸி தலைவர் சாதனை | தினகரன்


உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்து நியூஸி தலைவர் சாதனை

உலக கிண்ண தொடர் ஒன்றில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர் என்ற புதிய சாதனையை நியூசிலாந்து தலைவர் கேன்வில்லியம்சன் படைத்தார்.

உலக கிண்ண தொடர் ஒன்றில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர் என்ற புதிய சாதனையை நியூசிலாந்து தலைவர் கேன் வில்லியம்சன் படைத்தார். இங்கிலாந்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தையும் சேர்த்து வில்லியம்சன் 2 சதம் உட்பட 578 ஓட்டங்கள் குவித்து இருக்கிறார். இதற்கு முன்பு 2007-ம் ஆண்டு உலக கிண்ணத்தில் இலங்கையின் தலைவராக இருந்த மஹேல ஜயவர்தன 548 ஓட்டங்கள் எடுத்ததே இந்த வகையில் சிறந்ததாக இருந்தது. அவரை வில்லியம்சன் முந்தி இருக்கிறார்.

மேலும் சில சாதனை விவரம் வருமாறு:-

* இந்த உலக கிண்ணத்தில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் மொத்தம் 20 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இங்கிலாந்து அணிக்காக ஒரு உலக கிண்ணத்தில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சிறப்பை பெற்றார். இதற்கு முன்பு 1992-ம் ஆண்டு உலக கிண்ணத்தில் இயன் பொத்தம் 16 விக்கெட்டுகள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

* இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பிளங்கெட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உலக கிண்ண இறுதி ஆட்டத்தில் 3 அல்லது அதற்கு மேல் விக்கெட் எடுத்த சிரேஷ்ட பந்துவீச்சாளர் இவர் தான். பிளங்கெட்டின் தற்போதைய வயது 34 ஆண்டு 99 நாட்கள்.

* இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து விக்கெட் காப்பாளர் டாம் லதம் 2 பிடிகளை செய்தார். இந்த உலக கிண்ணத்தில் பிடி, ஸ்டம்பிங் செய்த வகையில் மொத்தம் 21 பேரை அவர் ஆட்டம் இழக்கச் செய்திருக்கிறார். இதன் மூலம் 2003-ம் ஆண்டு உலக கிண்ணத்தில் அதிக பேரை விக்கெட் காப்பில் மூலம் வெளியேற்றிய அவுஸ்திரேலியாவின் கில்கிறிஸ்டின்(21 ஆட்டமிழப்பு) சாதனையை சமன் செய்தார்.


Add new comment

Or log in with...