Friday, March 29, 2024
Home » வளியின் தரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

வளியின் தரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

by sachintha
January 19, 2024 6:37 am 0 comment

நாட்டின் சில பிரதேசங்களில் கடந்த சில தினங்களாகக் காலை வேளையில் மூடு பனி போன்ற வானிலையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அத்தோடு இலேசான குளிர்த்தன்மையையும் உணர முடிகிறது. இது வழமையான மூடுபனி எனப் பலரும் கருதுகின்றனர். ஆனால் இது உண்மையான மூடுபனி அல்ல.

இவ்வாறான வானிலைக்கு கடந்த சில வருடங்களாக இலங்கை முகம் கொடுக்கிறது. குறிப்பாக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் இவ்வானிலை பெரும்பாலும் ஏற்படக் கூடியதாக உள்ளது. ஆனால் இது உண்மையான மூடுபனி அல்ல என்று இலங்கை வளி மண்டலவியல் திணைக்களமும் அறிவித்துள்ளது. தற்போது பதுளை, பண்டாரவளை போன்ற சில பிரதேசங்களில் மூடுபனி நிலை காணப்படுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு குறிப்பிட்டுள்ள வளிமண்டலத் திணைக்களம், வளி மாசடைந்திருப்பதன் வெளிப்பாடே இது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள வளி மாசு இலங்கையின் வளிமண்டலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் தான் இந்த மூடுபனி நிலை ஏற்பட்டிருக்கிறது.

தற்போது இந்தியாவின் வட மாநிலப் பிரதேசங்களில் காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக பஞ்சாப், புதுடில்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வேளாண்மைச் செய்கையின் அறுவடையின் பின்னர் மீள் செய்கைக்காக நிலத்தை விவசாயிகள் தயார்படுத்துவது வழமையாகும். அதன் விளைவாக வெளிப்படும் தூசு துகள் வளிமண்டலத்தில் கலக்கின்றன.

இவ்வாறு காற்றில் கலக்கும் தூசு துகள்கள் காற்றோட்டத்தின் ஊடாக வங்காள விரிகுடாவை நோக்கி அள்ளுண்டு பயணிப்பதோடு அங்கிருந்து கிழக்கு வழியாக இலங்கைக்குள் பிரவேசிக்கின்றன. அதனால் தான் இந்நாடு இந்த வானிலைக்கு முகம் கொடுத்திருக்கிறது.

இந்தியாவின் சில பிரதேசங்களிலும் தற்போது கடும் பனிமூட்டம் போன்ற நிலை ஏற்பட்டிருப்பதும் இங்கு சுட்டிக்காட்டதக்கதாகும்.

உலகில் நிலத்தை அடிப்படையாகக் கொண்டு நாடுகளும் பிரதேசங்களும் பிரிக்கப்பட்டுள்ள போதிலும் வளிமண்டலத்தில் அவ்வாறான பிரிவுகள் இல்லை.

அதனால் தான் இலங்கையில் இருந்து பல ஆயிரம் கிலோ மீற்றர்களுக்கு அப்பால் ஏற்பட்டுள்ள காற்று மாசு கூட இங்கு வந்து சேர்கின்றன. ஆனால் வளி மாசு சுவாசத் தொகுதி தொடர்பான நோய்களுக்கு பங்களிக்கக்கூடியதாகும். அதனால் தான் மாசடைந்த வளியைத் தொடராகவும் நீண்ட காலத்திற்கும் சுவாசிக்கக்கூடாதென சுவாசத் தொகுதி தொடர்பான மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் தற்போது நாட்டின் பல பிரதேசங்களிலும் சுவாசத் தொகுதியுடன் தொடர்பான தடிமன், தும்மல் போன்ற உபாதைகளுக்கு உள்ளாகியுள்ளவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டு இருக்கின்றது. இது பருவ கால மாற்றத்தின் விளைவாக ஏற்பட்டுள்ள நோய்கள் எனக் கருதப்படுகிறது. ஆனால் இந்நோய்களுக்கு வளி மாசு அதிக பங்களிப்பு நல்கியுள்ளதாகவே நம்பப்படுகிறது.

இதேவேளை கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய பிரதேசங்களின் காற்றின் தரம் மோசமாகப் பதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள மத்திய சுற்றாடல் அதிகார சபை, மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

உண்மையில் வளியின் தரம் வீழ்ச்சி அடைவதும் வளி மாசடைவதும் மனித ஆரோக்கியத்திற்கு உகப்பானதல்ல. மனிதனின் வாழ்வே வளியின் ஒட்சிசனுடன் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது. அதனால் மனித உயிர்வாழ்வுக்கு தூய வளி மிகவும் இன்றியமையாததாகும்.

அதன் காரணத்தினால் வளியின் தரம் வீழச்சியடையவும், வளி மாசு அதிகரிக்கவும் துணை போகவே கூடாது. அது மனித உயிர்வாழ்வுக்கு விடுக்கப்படும் பாரிய அச்சுறுத்தலாக அமைந்துவிடும். அதனால் வளியின் தரத்தைப் பேணுவதற்கு ஒவ்வொருவரும் பங்களிக்க வேண்டும். அதனை மிக முக்கிய பொறுப்பாகக் கருத வேண்டும். வளி மாசடைய எந்த சந்தர்ப்பத்திலும் துணை போகலாகாது.

என்றாலும் ஆயிரக்கணக்கான கிலோ மீற்றர்களுக்கு அப்பால் இடம்பெறும் தவறானதும் பலவீனமானதுமான செயற்பாடுகளால் வளியின் தூய தன்மையைப் பேணும் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களும் கூட அசுத்தமடைந்த வளியைச் சுவாசிக்கும் நிலைக்கு முகம் கொடுக்கும் நிலை நிலவுகிறது. இது கைத்தொழில் வளர்ச்சியின் விளைவாக மனித சமூகம் முகம் கொடுத்துள்ள தீமைகளில் ஒன்றாகும். ஆனாலும் இந்தத் தீமையைத் தவிர்த்து வளியின் தூய்மையைப் பேண அனைத்து தரப்பினரதும் பங்களிப்பும் ஒத்துழைப்பும் இன்றியமையாததாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT