தமிழகத்தில்: உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த முடியாது | தினகரன்


தமிழகத்தில்: உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த முடியாது

மாநில தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றில் மனு

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த முடியாது. மேலும் ஓக்டோபர் 31-ஆம் திகதி வரை அவகாசம் வழங்கும்படி மாநில தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது.

தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று தி.மு.க. உச்ச நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 3 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

ஆனால், அந்த காலக்கெடுவிற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை.

மாறாக கூடுதல் அவகாசம் கேட்டது.வாக்காளர் பட்டியலை முழுமையாக தயார் செய்யும் நடைமுறை முடிந்த பிறகே உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியும் என்றும் பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறை அமுலில் இருந்ததால் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த முடியாது என்றும் கூறி இருந்தது.

தேர்தல் முடிந்த பின்னர் உள்ளாட்சி தேர்தலுக்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியது. முதற்கட்டமாக, வாக்காளர் பட்டியல் தயாரிப்புக்கான வழிமுறை வெளியிடப்பட்டது. வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் பிரிக்கும் பணி நடைபெற்றது.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று காலை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வார்டு மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தாலும், மாநிலத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனையில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதனால் வார்டு வரையறை பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் ஓக்டோபர் இறுதி வரை உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என தமிழக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

ஓக்டோபர் மாதத்துக்கு பிறகே உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியும் என கூறியிருந்தது. ஓக்டோபர் 31-ஆம் திகதி வரை அவகாசம் வழங்கவேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது.

எனவே, உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...