ஈழத் தமிழர்கள் அகதிகளாக நடத்தப்படுவது தலைகுனிவாகும் | தினகரன்


ஈழத் தமிழர்கள் அகதிகளாக நடத்தப்படுவது தலைகுனிவாகும்

திபெத்திய அகதிகள் கூட அனைத்து வித வசதி வாய்ப்புகளையும் பெற்று நல்வாழ்க்கை வாழ்கிறபோது, ஈழத்தமிழர்கள் அகதிகளாக இந் நிலத்தில் நடத்தப்படும் முறை தலைகுனிவாகும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிற 34 ஈழத்தமிழர்களில் யோககுமார், குணசீலன், அருண் இன்பதேவர் ஆகியோர் மீதான வழக்கின் விசாரணை முழுமையாக நிறைவடைந்துவிட்ட நிலையிலும் அவர்களை இன்னும் விடுதலை செய்யாமல் வைத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. விடுதலை அல்லது கருணைக் கொலை இவையிரண்டில் எதையாவது ஒன்றைச் செய்யுங்கள் என்கிற கோரிக்கையை முன்வைத்து மூவரும் தொடர் பட்டினிப் போராட்டத்தை முன்னெடுத்திருப்பது பெரும் மனவேதனையைத் தருகிறது. ஈழத்தாயகம் சிங்களப் பேரினவாதத்தின் கொடுங்கரங்களுக்குள் சிக்கி முற்று முழுதாக அழித்தொழிக்கப்பட்டச் சூழலில் தமிழர்களின் பெருத்தத் தாயகமானத் தமிழகத்தை நம்பி ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் அடைக்கலம் புக வருகிறார்கள்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்கிற பெருமைக்குச் சொந்தம் கொண்டாடுகிற தமிழகம், சொந்த இன மக்களை சந்தேகத்தின் பேரில் இன்றுவரை அகதிகள் முகாமிலேதான் அடைத்து வைத்திருப்பது அவமானச் சின்னமாகும்.


Add new comment

Or log in with...