Home » புறக்கணிக்கப்பட்டுள்ள மௌலவி ஆசிரியர் நியமனங்கள் மீண்டும் வழங்கப்பட வேண்டும்

புறக்கணிக்கப்பட்டுள்ள மௌலவி ஆசிரியர் நியமனங்கள் மீண்டும் வழங்கப்பட வேண்டும்

புத்தளம் உலமா சபைத்தலைவர் மஹ்மூத் ஹஸரத்

by Gayan Abeykoon
January 19, 2024 7:02 am 0 comment

புத்தளம் காஸிமிய்யா மத்ரஸாவிலிருந்து இவ்வாண்டு மதீனா சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 8 மாணவர்களை பாராட்டும் நிகழ்வு மத்ரஸா மஹ்மூத் ஹஸரத் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை  (14)  மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட கல்லூரியின் அதிபரும் புத்தளம் மாவட்ட உலமா சபைத் தலைவருமான அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அங்கு உரையாற்றுகையில், புறக்கணிக்கப்பட்டுள்ள மௌலவி ஆசிரியர் நியமனங்கள், காலம் தாழ்த்தாது மீண்டும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கூறினார்.

காஸிமிய்யா பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், உலமாக்கள், கல்வியியலாளர்கள், அரசியல் பிரமுகர்கள், ஊடகத்துறை சார்ந்தோர், பழைய மாணவர்கள் என ஏராளமான முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். அதிபர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

இலங்கை அரபு மத்ரஸாக்கள் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு காலத்துக்கு தேவையான வகையில்  மறுசீரமைப்புக்கான காத்திரமான பணிகள் முன்னைய காலங்களை விட தற்போது வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இது பாராட்டுக்குரியதும் வரவேற்கத்தக்கதுமாகும்.

இப்படியான இந்த கட்டத்திலாவது மௌலவி ஆசிரியர்களை நியமிப்பதற்கான முன்னெடுப்புக்களையும் சம்பந்தப்பட்ட ஆட்சியாளர்களும், அதிகாரிகளும், முஸ்லிம் அரசியல் தலைவர்களும், சமூக அமைப்புகளும் முன்னெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

உயர் கல்விக்காக தெரிவு செய்யப் பட்டுள்ள மாணவர்களுக்கு அதிதிகளால் நினைவுச் சின்னங்களும் வழங்கி  வைக்கப்பட்டன.

(புத்தளம் தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT