த.தே.கூவின் இராஜதந்திரங்களால் கல்முனை போராட்டம் கைகூடியது | தினகரன்


த.தே.கூவின் இராஜதந்திரங்களால் கல்முனை போராட்டம் கைகூடியது

கவீந்திரன் கோடீஸ்வரன் எம்.பிக்கு உண்ணாவிரதிகள் நன்றி தெரிவிப்பு

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு நிரந்தர கணக்காளரைப் பெற்றுத்தர உதவிய பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனுக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கும் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த, உண்ணாவிரமிருந்தோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினரை நேற்று (15) அக்கரைப்பற்றில் நேரில் சந்தித்தபோதே உண்ணவிரதிகள் தமது நன்றியைத் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று அலுவலகத்தில் நடந்த இச்சந்திப்பில் பல விடயங்களும் ஆராயப்பட்டன.

இச்சந்திப்பின் போது பிரதேச செயலகத்தின் கணக்காளர் நியமனத்திற்காக தானும் தமது கட்சியும் முன்னெடுத்த நடவடிக்கை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விளக்கமளித்ததுடன் அதற்கான ஆவணங்களையும் சந்திப்பில் கலந்து கொண்டோரிடம் காண்பித்தார். மேலும் எதிர்காலத்திலும் பிரதேச செயலகத்தின் தரமுயர்த்தல் தொடர்பான தொடர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இச்சந்திப்பில் கிழக்கு குருமார் ஒன்றியத் தலைவர் சிவஸ்ரீ க.கு.சச்சிதானந்த குருக்கள் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சா.சந்திரசேகரம் (ராஜன்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிவஸ்ரீ க.கு.சச்சிதானந்த குருக்கள்: கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் பயனுள்ளதாக அமைந்தது. இதற்காக குரல் கொடுக்கும் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனுக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கும் நன்றி தெரிவிக்கிறோம்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் புத்திசாலித்தன நகர்வால் கல்முனைத் தமிழ் மக்கள் தமது உரிமைகளைப் பெற முடிந்துள்ளது என்றார்.

கல்முனை மாநகர சபை உறுப்பினர் சா.சந்திரசேகரம் கருத்து தெரிவிக்கையில்:

உண்ணாவிரதப் போராட்டத்தில் இணைந்து ஆதரவளித்த வணக்கத்திற்குரிய ரன்முத்துக்கல சங்கரத்தின தேரர், கிழக்கு குருமார் ஒன்றியத் தலைவர் சிவஸ்ரீ க.கு.சச்சிதானந்த குருக்கள், மாநகர சபை உறுப்பினர் அழகக்கோன் விஜயரெத்தினம் வர்த்தக சங்க தலைவர் லிங்கேஸ்வரன் ஆகியோருக்கு எமது நன்றிகள்.

கல்முனை இளைஞர்கள் மற்றும் நாட்டின் பல பாகங்களிலுமிருந்தும் ஆதரவளித்தோர், புலம் பெயர் உறவுகளுக்கும் நன்றி தெரிவித்தார்.

 வாச்சிக்குடா விஷேட நிருபர்


Add new comment

Or log in with...