எகிப்தின் கோணல் பிரமிட் பொது மக்களுக்கு திறப்பு | தினகரன்


எகிப்தின் கோணல் பிரமிட் பொது மக்களுக்கு திறப்பு

எகிப்தின் இரண்டு தொன்மையான பிரமிட்டுகள் 1965 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக பார்வையாளர்களுக்கு மீண்டும் திறந்துவிடப்பட்டுள்ளன. தாஷூர் நெக்ரொபோலிஸ் வட்டாரத்தில் அவை அமைந்துள்ளன.

அந்த வட்டாரம், தலைநகர் கெய்ரோவில் இருந்து 40 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது. மன்னர் ஸ்னேபெருவின் கோணல் பிரமிட்டும், சிவப்புப் பிரமிட்டும் அந்த வட்டாரத்தில் உள்ளன.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கல், களிமண், மரம் ஆகியவற்றால் செய்யப்பட்ட கல்லறைப் பெட்டிகளையும் கண்டுபிடித்துள்ளனர். அவற்றுள் சிலவற்றில், பதப்படுத்தப்பட்ட மம்மிகள் இருந்தன. அவைகளை பார்வையிடவும் சுற்றுலா பயணிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் அடுத்த மாதம் மேலும் அகழ்வாராய்ச்சி நடத்தப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் பார்வையாளர்களுக்காக திறக்கப்படவிருக்கும் கோணல் பிரமிட் கி.மு 2,600 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதாககும். ஆரம்பத்தில் இந்தப் பிரமிட் செங்குத்தாக 54 டிகிரி கோணத்தில் கட்டப்படவிருந்தது.

எனினும் மென்மையான, மெல்லிய களிமண்ணால் கட்டப்பட்டதால் அது நிலைத்து நிற்பதில் பிரச்சினை ஏற்பட்டதை அடுத்தே 43 டிகிரி பாகையாக மாற்றப்பட்டது.

குறுக்குவெட்டுத் தோற்றத்தில் நேர் கோணங்களுடைய சிவப்புப் பிரமிட் வடக்குப் பக்கமாக அமைந்துள்ளது.

கோணல் பிரமிட்டின் வாயிலில் இருந்து 79 மீற்றர் குறுகலான சுரங்கப் பாதையின் ஊடாக அறைகளைச் சென்று அடையவும் பார்வையாளர்களுக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பிரமிட்டின் உள்ளே வடக்கு பக்கமாக இரண்டு அறைகளை அடைய முடியும்.

சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்தே எகிப்து நிர்வாகம் இந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளது. எகிப்து வருவாயில் சுற்றுலாத்துறை பிரதான அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...