மதுரங்குளி நகரில் 61.69 மில். செலவில் பலநோக்கு கட்டட தொகுதிக்கு அடிக்கல் | தினகரன்


மதுரங்குளி நகரில் 61.69 மில். செலவில் பலநோக்கு கட்டட தொகுதிக்கு அடிக்கல்

கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்

புத்தளம் மதுரங்குளி நகரில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள மூன்று மாடிகளைக் கொண்ட பல்நோக்கு கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு சனிக்கிழமை (13) வைபவரீதியாக இடம்பெற்றது.

புத்தளம் பிரதேச சபை தலைவர் ஆர்.எம்.அஞ்சன சந்தருவன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் ஐ.தே.கவின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பாலித்த ரங்கே பண்டார, ஹெக்டர் அப்புஹாமி, முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான இனோக் துஷார பத்திரகே, எஸ்.எச்.எம்.நியாஸ் மற்றும் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர்கள், மதுரங்குளி வர்த்தக சங்கத் தலைவர் உட்பட வர்த்தகர்கள் , ஐ.தே.கவின் பிரதேச அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

பொதுமக்களின் தேவைகளை கவனத்தில் கொண்டு மதுரங்குளி நகரில் பலநோக்கு கட்டடம் ஒன்றை அவசரமாக அமைத்துக்கொடுக்குமாறு புத்தளம் பிரதேச சபை தலைவர் ஆர்.எம்.அஞ்சன சந்தருவன், பாராளுமன்ற உறுப்பினரும், புத்தளம் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான பாலித ரங்கே பண்டார ஊடாக உள்நாட்டலுவல்கள் , மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தனவிடம் வேண்டுகோள் விடுத்தார்.

குறித்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட அமைச்சர் வஜிர அபேவர்தன 'புறநெகும' திட்டத்தின் கீழ் மதுரங்குளி நகரில் மூன்று மாடிகளைக் கொண்ட பலநோக்கு கட்டடத்தை நிர்மாணிப்பதற்காக 61.69 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளார்.

இவ்வாறு மதுரங்குளி நகரில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள மூன்று மாடிகளைக் கொண்ட பலநோக்கு கட்டடத் தொகுதியில் முதலாவது தொகுதியில் வர்த்தக வங்கிகளும், இரண்டாவது கட்டடத் தொகுதியில் வர்த்தக நிலையங்களும், மூன்றாவது கட்டடத் தொகுதியில் கலாசார மண்டபமும் அமைக்கப்படவுள்ளதாக புத்தளம் பிரதேச சபை தலைவர் ஆர்.எம்.அஞ்சன சந்தருவன் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...