பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த இந்திய குழு வாகா எல்லைக்கு பயணம் | தினகரன்

பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த இந்திய குழு வாகா எல்லைக்கு பயணம்

பாகிஸ்தானில் உள்ள கர்டார்பூர் பெருவழி பற்றிய இருதரப்பு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள இந்திய குழு வாகா எல்லைக்கு சென்றுள்ளது.

பாகிஸ்தானில் சாஹிப் குருத்வாரா அமைந்துள்ளது. இங்கு சீக்கிய மக்கள் யாத்திரை மேற்கொண்டு சென்று இறைவனை வழிபடுவது வழக்கம். இது சர்வதேச எல்லைக்கு 4 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்நிலையில் இங்கு செல்வதற்காக அமைந்த கர்டார்பூர் பெருவழியை பாகிஸ்தான் நாடு மூடி விட்டது.

இதுபற்றி கடந்த பா.ஜ.க. ஆட்சியில் இந்திய வெளியுறவு துறை மந்திரியாக இருந்த சுஷ்மா சுவராஜ் சார்பில் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும் இதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்தியாவில் உள்ள தேரா பாபா நானக் என்ற பகுதியில் இந்த குருத்வாரா தரிசனம் செய்ய ஏற்ற வகையில் தெளிவாக தெரியும். அதனால் அங்கு செல்ல முடியாத பக்தர்கள் இந்த பகுதியில் இருந்தபடியே தங்களது இறை வணக்கத்தினை செலுத்துவார்கள்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மத தலங்களுக்கு சென்று வருவதற்கான விதிகளுக்குள் சீக்கிய புனித தலத்தினை சேர்க்கும்படி பாகிஸ்தானிடம் கடந்த காலங்களில் பலமுறை இந்தியா கூறி வருகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தானிலுள்ள வாகா எல்லையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாட்டு அதிகாரிகள் கொண்ட குழு இதுபற்றிய பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்.

இதற்காக பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சின் செய்தி தொடர்பாளர் முகமது பைசல் தலைமையில் 20 அதிகாரிகள் கொண்ட குழு இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறது. இந்திய தரப்பில் உள்விவகார துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் (உள்நாட்டு பாதுகாப்பு) எஸ்.சி.எல். தாஸ் மற்றும் வெளிவிவகார அமைச்சகத்தின் இணை செயலாளர் (பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான்) தீபக் மிட்டல் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் குழுவும் வாகா எல்லையை அடைந்துள்ளனர்.

 


Add new comment

Or log in with...