சிறுபான்மை கட்சிகளின் பலத்தை காட்டியுள்ளோம் | தினகரன்


சிறுபான்மை கட்சிகளின் பலத்தை காட்டியுள்ளோம்

அரசாங்கத்துக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை கட்சி பேதமற்ற முறையில் மீண்டும் தோற்கடித்து சிறுபான்மை கட்சிகளின் பலத்தை காட்டியுள்ளதாக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.  

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (14) திருகோணமலை மக்கேய்சர் மைதானத்தில் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,  

நாட்டின் இன்றைய சூழ்நிலையில் பட்டதாரிகளின் வேலை வாய்ப்பு, இளைஞர்களின் வேலை வாய்ப்பு தொடர்பில் அதிகமான கவனத்தை ஈர்த்து நியமனங்களை வழங்குவதில்   பிரதமர் மும்முரமாக திகழ்கிறார். மிகவிரைவில் 22 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அரச துறையில் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. 

மஹிந்த, சந்திரிக்கா அம்மையார் ஆட்சிக் காலத்தில் பட்டதாரிகள் ஏழு வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை காணப்பட்டது. ஆனால் இந்த அரசாங்கத்தில் அப்படியானதொரு நிலை இல்லை. பத்து இலட்சம் தொழில் வாய்ப்புக்களை வழங்கும் திட்டத்தில் தொடர்ச்சியான நியமனங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன.

முப்பது வருட கால யுத்த சூழ்நிலையில் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்த மக்கள் இப்போது நிம்மதியாக வாழும் சூழ் நிலையிலும் இருண்ட யுகம் ஒன்றை உருவாக்க எதிர்க்கட்சியினர் செயற்படுகின்றனர். அரசாங்கத்தை முறியடிக்கவோ எம்மை வீழ்த்தவோ முடியாது.   பொருளாதார ரீதியான முன்னேற்றம் உள்ளிட்ட சகல விடயங்களிலும் பிரதமர் உட்பட அரசாங்கத்துக்கு என்றும் ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம் தொடர்ந்தும் எமது ஒத்துழைப்பை வழங்குவோம் என்றார். 

திருமலை மாவட்ட விசேட நிருபர்   


Add new comment

Or log in with...