விழிப்புணர்வும் முன்னெச்சரிக்கையுமே பக்கவாதம் வராமல் தடுக்கும் தீர்வுகள் | தினகரன்


விழிப்புணர்வும் முன்னெச்சரிக்கையுமே பக்கவாதம் வராமல் தடுக்கும் தீர்வுகள்

மனிதனின் உயிர்வாழ்வு உணவுடனும், நோய்களுடனும் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளன. உண்ணாமலும் பருகாமலும் எவ்வாறு மனிதனால் உயிர்வாழ முடியாதோ, அதேபோன்று வாழ்நாள் முழுவதும் நோய்களை முழுமையாகத் தவிர்த்து வாழவும் முடியாது. உலகில் பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனும் பிறந்தது முதல் மரணிக்கும் வரையும் வாழ்நாளில் ஒரு தடவையாவது ஏதாவதொரு நோய்க்கு முகம் கொடுத்தே ஆக வேண்டும். அதனைத் தவிர்த்து உயிர் வாழ்ந்து மறைந்த மனிதர் எவருமே உலகில் இல்லை.  

உணவுடனும் நோய்களுடனும் பிணைக்கப்பட்டு இருக்கும் மனிதனுக்கு அவையே கெடுதல்களையும் தீங்குகளையும் தேடிக் கொடுக்கக் கூடியவையாகவும் உள்ளன. குறிப்பாக மனிதன் தன் ஒழுங்கு முறையற்றதும் தவறானதுமான உணவு மற்றும் பழக்கவழக்கங்களினால் பலவிதமான நோய்களுக்கு முகம் கொடுக்கின்றான். அவற்றில் மனிதனின் உயிருக்கும் உடலுக்கும் ஆபத்துக்களை விளைவிக்கக்கூடிய நோய்களும் இருக்கின்றன. சில நோய்கள் உடல், உள ரீதியான ஊணங்களை ஏற்படுத்துகின்றன. இன்னும் சில நோய்கள் கடுமையான வேதனையையும் வலிகளையும் குறிக்கப்பட்ட காலத்திற்கு வழங்கிய பின்னர் சாதாரண நிலைக்கு மனித உடல் திரும்ப இடமளிக்கின்றன.  

இவ்வாறு பயங்கரமான விளைவுகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும் இந்நோய்க்கு இரண்டு நிமிடங்களுக்கு ஒருவர் என்றபடி, உலக சனத்தொகையில் 06பேரில் ஒருவர் உள்ளாவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதிலும் பெண்களே இந்நோய்க்கு அதிகளவில் உள்ளாகின்றனர். அதாவது ஐந்து பெண்களுக்கு ஒருவர் இப்பாதிப்புக்கு முகம் கொடுப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம், குடும்பக் கட்டுப்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகள், பிரசவ கால நெருக்கடிகள், ஹோமோர்ன் மாற்று சிகிச்சை என்பன துணைபுரிவதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.  

இதன்படி இன்றைய உலகில் வருடா வருடம் 15மில்லியன் பேர் பக்கவாதத்திற்கு உள்ளாகின்றனர். இவர்களில் 06மில்லியன் பேர் அதாவது 06நிமிடங்களுக்கு ஒருவர் என்றபடி உயிரிழக்கின்றனர். 05மில்லியன் பேர் பலவிதமான உடல், உள ஊணங்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.  

அந்தவகையில் ‘இலங்கையில் திடீரென நோய் வாய்ப்பட்டு அரசாங்க வைத்தியசாலைகளுக்கு சிகிச்சை பெற வருகின்றவர்களில் 10வீதத்தினர் உயிரிழக்கின்றனர். அவர்களது உயிரிழப்புக்கு பக்கவாதமே காரணம்’ என்று இலங்கை தேசிய பக்கவாத சங்கம் குறிப்பிட்டுள்ளது.அதாவது இந்நோய்க்கு உள்ளாகின்றவர்களில் மூன்றிலொரு பங்கினர் உயிரிழக்கின்றனர். மேலும் மூன்றிலொரு பகுதியினர் உடல், உள ஊணங்களுக்கு முகம் கொடுக்கின்றனர். அடுத்த மூன்றிலொரு பகுதியினர் தானாகவே இயல்பு நிலையை அடைகின்றனர்.   இந்த பக்கவாதம் நோய்க்கு மனிதனின் ஒழுங்கு முறையற்றதும் தவறானதுமான உணவு உள்ளிட்ட பழக்கவழக்கமே பின்புலமாக உள்ளது. இதனை மருத்துவ விஞ்ஞான உலகம் ஆராய்ச்சி ரீதியாக உறுதிப்படுத்தி இருக்கின்றது. அதாவது மனித உடலாரோக்கியத்திற்கு கெடுதல்களை ஏற்படுத்தக்கூடிய பதார்த்தங்களை தொடராகவும் அளவுக்கதிகமாகவும் உணவாகக் கொள்ளும் போதும் உரிய உடற்பயிற்சிகளில் ஈடுபடாத போதும் இப்பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதைத் தவிர்க்க முடியாது.  

கொழுப்பு, உப்பு உள்ளிட்ட பதார்த்தங்களை அதிகமாக கொண்ட உணவு பொருட்களை தொடராகவும் அளவுக்கதிகமாகவும் உட்கொள்ளும் போது அவற்றில் உடலின் சக்தி தேவைக்கு மேலதிகமாகக் காணப்படும் பதார்த்தங்கள் இரத்தத்தில் கலப்பதுடன் அவை நாடி நாளங்களில் மெதுமெதுவாகப் படியவும் தொடங்கும். இப்படிவு அதிகரிக்கும் போது சீரான இரத்தவோட்டம் பாதிக்கப்படுவதுடன் இரத்தத்தின் செறிவிலும் வித்தியாசம் ஏற்படும்.  

இவற்றின் விளைவாக சீரான இரத்தவோட்டத்தில் ஏற்படும் பாதிப்புக்கள் இரு விதமாக அமைகின்றன. அவற்றில் ஒன்று உயர் இரத்த அழுத்தம் காரணமாக மூளைப் பகுதியின் இரத்த நாளத்தில் வெடிப்பு ஏற்பட்டு இரத்தக்கசிவு ஏற்பட முடியும். இக்கசிவு மூளையிலோ அல்லது மூளையைச் சூழவுள்ள பகுதியிலோ நிகழலாம். இதுவே குருதிப் பெருக்குப் பக்கவாதம் எனப்படுகின்றது.  

 மற்றையது மூளைக்கான இரத்த நாளத்தில் கொழுப்பு படிவதால் ஏற்படும். இதனால் மூளையின் ஒரு பகுதிக்கான இரத்தோட்டம் திடீரென தடைபடும். அதனால் அப்பகுதிக்கு தேவையான ஒட்சிசனும், ஏனைய போஷாக்கு பதார்த்தங்களும் கிடைக்காமல் போகும். அதன் காரணத்தினால் அப்பகுதி நரம்பு கலங்கள் இறந்து விடும். இதுவே குருதியோட்டக் குறைபாட்டு பக்கவாதம் எனப்படுகின்றது.  

அதேநேரம் மூளைப்பகுதிக்கான சீரான இரத்தோட்டத்தில் ஏற்படும் பாதிப்புக்கு ஏற்ப பக்கவாத நோய் அறிகுறிகளும் வித்தியாசப்படும். குறிப்பாக உணர்தல், பார்வை, சமநிலை, மொழி, பேச்சு, உதறல் என்பவற்றில் இவ்வித்தியாசங்களை அவதானிக்கலாம். அதாவது முகம், கைகள், பேச்சு ஆகியவற்றின் ஊடாக இவ்வறிகுறிகள் வெளிப்படும். இதன்படி முகத்தின் ஒரு பகுதியில் திடீரென செயலிழந்த உணர்வு ஏற்படும். வாய் ஒரு பக்கமாக இழுக்கப்படும். ஒரு கையில் (ஒரு காலில்) செயலிழந்த உணர்வு வெளிப்படும். பேச்சில் மாற்றம், திக்குவாய் ஏற்படல், இவ்வாறான அறிகுறிகள் தோன்றி சில நிமிடங்களுக்குள் மறைந்துவிடும்.  

அதேநேரம் சிலருக்கு கடும் தலைவலி, உணவை விழுங்குவதில் சிரமம் தலைசுற்று, உடல் சமநிலையில் மாற்றம், நடையில் தடுமாற்றம், உடலின் ஒரு பகுதி செயலிழந்து போதல், உணர்திறனில் வித்தியாசம் போன்றவாறான முன்னெச்சரிக்கை அறிகுறிகளும் வெளிப்படலாம்.  

ஆயினும் இவற்றைப் பெரும்பாலானவர்கள் பொருட்படுத்துவதில்லை. சிலர் இவ்வறிகுறிகளைச் சாதாரணமானவையாகக் கருதி கை வைத்தியம் செய்கின்றனர். ஆனால் பக்கவாதம் என்ற பேராபத்துக்கு முன்னரான முன்னெச்சரிக்கைகளே இவை என்பதை அனேகர் அறியாதுள்ளனர்.  

இந்நோய்க்கான முன்னெச்சரிக்கை அறிகுறிகளில் ஒன்றோ அல்லது பலதோ பக்கவாதம் ஏற்பட முன்னரான 24முதல் 48மணித்தியாலங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் திடீரென தோன்றி மறையும். இவ்வறிகுறிகளை மருத்துவ துறையினர் பக்கவாத்திற்கான முன்னெச்சரிக்கை அறிகுறிகள் என்றும் சிறிய பக்கவாதம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். அதனால் பக்கவாதத்திற்கான முன்னெச்சரிக்கை அறிகுறிகளை உடனுக்குடன் இனம் காண்பதும், அதற்கேற்ப துரிதமாக சிகிச்சை பெற்றுக்கொள்வதும் மிக மிக அவசியமானது. இவற்றின் ஊடாக உயிரிழப்பைத் தவிர்க்கவும் உடலுறுப்புக்களின் செயலிழப்பைக் குறைத்துக் கொள்ளவும் முடியும் என்றும் மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்  

இருந்த போதிலும் இவ்வாறு செயற்படத் தாமதிப்பதன் விளைவாகவே பக்கவாதத்திற்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது. அதன் காரணத்தினால் தான் இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் நேரம் தாமதியாது உடனடியாக வைத்தியசாலையை நாடி உரிய மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றுக்கொள்வது அவசியமென வலியுத்தப்படுகின்றது.  

மேலும் உயர் இரத்த அழுத்தம், இரத்தத்தில் அதிகம் கொழுப்பு படிதல், நீரிழிவு, இதயத் துடிப்பில் வீழ்ச்சி, புகை பிடித்தல், உளைச்சதை. உடற்பயிற்சி இன்மை, அதிகம் மது அருந்துதல், ஆரோக்கியத்திற்கு உகப்பற்ற உணவு பழக்கம் போன்றனவே பக்கவாதத்திற்கு அதிகம் துணைபுரிகின்றன. அத்தோடு 65வயதுக்கு மேற்படல், நெருங்கிய இரத்த உறவினருக்கு இந்நோய் ஏற்பட்டிருத்தல், முன்பு சிறிய பக்கவாதத்திற்கு உள்ளானவர்கள் போன்றோருக்கும் இப்பாதிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்பு மிக மிக அதிகம்.  

அதேவேளை இதயத்துடிப்பில் ஏற்படக்கூடிய பாதிப்பு எந்த வயது மட்டத்தினருக்கும் திடீரென ஏற்படலாம். இது கட்டம் கட்டமாக ஏற்படக்கூடிய ஒன்றல்ல. என்றாலும் முதியவர்கள் மத்தியில் இப்பாதிப்பு மிக அதிகம். அதிலும் இரத்த அழுத்தம், இதய நோய்கள், நுரையீரல் நோய்கள் போன்றவற்றுக்கு உள்ளாகி இருப்பவர்களிடமும் இப்பாதிப்பு அதிகமாகக் காணப்படும். அதனால் இப்பாதிப்பை துரிதமாக இனம் கண்டு சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.  

இதேநேரம் மூளைக்கான இரத்தவோட்ட நாளங்களில் வித்தியாசங்கள் ஏற்பட்டு சீரான இரத்தவோட்டத்தில் பாதிப்பு ஏற்பட புகைப்பிடித்தல் பெரிதும் துணை புரிகின்றது. அத்தோடு மதுப்பாவனையும் பக்கவாத அச்சுறுத்தலை 50வீதத்தினால் அதிகரிக்கின்றது.   அதனால் உடல் உள ஆரோக்கியத்திற்கு ஏற்றவகையில் உணவு மற்றும் பழக்கத்தை அமைத்து கொள்வதில் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக உப்பு, சிகப்பு நிற இறைச்சி வகைகள், கோதுமை மா என்பவற்றின் பாவனையைக் குறைத்துக் கொள்வதும் தானிய வகைகளையும், பழங்களையும் அதிகம் உண்பதும் மிகவும் அவசியமானது. அத்தோடு புகைப்பிடித்தலையும், மதுப்பாவனையையும் முழுமையாகக் கைவிடுவதுடன் மன அழுத்தத்தையும் ஊளைச்சதையையும் குறைத்துக் கொள்ளவும் வேண்டும். ஒழுங்கு முறையான உடற்பயிற்சியிலும் ஈடுபட வேண்டும்.  

மேலும் இலங்கையில் உப்பு, சீனி மற்றும் எண்ணெணைய் பாவனை அதிகம் என்பதால் 35வயதுக்கு மேற்பட்டவர்கள் வருடத்திற்கு ஒரு தடவையாவது இரத்தத்தில் கொலஸ்ட்ரோல் மற்றும் சீனியின் அளவு மட்டங்களையும் இரத்த அழுத்தத்தையும் பரீட்சித்துக் கொள்ள வேண்டும். இவற்றின் மூலம் பக்கவாதப் பாதிப்பை 80வீதம் தவிர்த்து கொள்ளலாம். அத்தோடு உடல் நிறை, இரத்த அழுத்தம், நீரிழிவு, இரத்தத்தில் கொலஸ்ரோல் அளவு என்பவற்றை அடிக்கடி பரீட்சித்து மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்வதும் அவசியம். இவற்றின் ஊடாக இந்நோயை ஒன்றில் முழுமையாகத் தவிர்த்துக் கொள்ளலாம் அல்லது சிகிச்சை மூலம் இந்நோயைக் குணப்படுத்திட முடியும்.  

இருப்பினும் பக்கவாதம் காரணமாக உடல் அவயவங்களின் செயலிழப்புக்கு உள்ளாகின்றவரகள் பெரும்பாலும் சுயமாக இயங்க முடியாத நிலைக்கு முகம் கொடுப்பர். அவர்கள் அடுத்தவரில் தங்கி இருக்கவே நேரிடும். அத்தோடு வறுமையின் பிடிக்குள்ளும் தள்ளப்படுவர். அதனால் இவர்கள் சமூக பொருளாதார ரீதியிலான நெருக்கடிகளுக்கும் முகம் கொடுப்பர்.  

ஆகவே பக்கவாதத்தைத் தவிர்த்து கொள்வதிலும் அதற்கு முகம் கொடுக்கக்கூடிய அச்சுறுத்தலை எதிர்கொண்டிருப்பவர்கள் அதற்குரிய சிகிச்சையை தாமதமின்றி பெற்றுக்கொள்வதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். இவற்றின் மூலம் அதிக நன்மைகளைப் பெற்றுக் கொள்ளலாம். அதாவது முன்னெச்சரிக்கையும், விழிப்புணர்வும் பக்கவாதத்திற்கு சிறந்த பதிலாக அமையும்.  

முஹம்மத் மர்லின்


Add new comment

Or log in with...