பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு தடை கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி | தினகரன்

பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு தடை கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க கோரி தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சென்னை மாநகரில் ஓடும் கூவம் ஆறு, அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியவை மாசடைந்து விட்டதாகவும், அதை தமிழக அரசு தடுக்க தவறியதாகவும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஜவகர் சண்முகம் என்பவர் உள்பட சிலர் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள், தீர்ப்பாய தலைவர் நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையிலான முதன்மை அமர்வினால் விசாரணை செய்யப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

தீர்ப்பில்,கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகிய நீர்நிலைகள், தங்குதடையின்றி மாசடைந்து வருகின்றன. அவை சாக்கடையாகவே மாறிவிட்டன. இதை தடுக்க தவறிய மாநில அரசின் தோல்வியையே இந் நிகழ்வு காட்டுகிறது.

கூவம், அடையாறு ஆறுகளை சீரமைக்க ரூ.104 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதிகாரிகள் இந்த நீர்நிலைகளை பாதுகாக்கும் கடமையில் மெத்தனமாக செயல்பட்டுள்ளனர். ஆகவே, எங்கள் அதிருப்தியை பதிவு செய்கிறோம்.

மாநில அரசின் தோல்வியை கருத்திற்கொண்டு, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் தமிழக அரசு ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறோம். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதற்காக இந்த அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை, சுற்றுச்சூழலை மேம்படுத்த பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது.

இத் தீர்ப்புக்கு தடை விதிக்க கோரியே மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...