ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் விநியோகம் | தினகரன்

ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் விநியோகம்

சென்னையில் ஏற்பட்டுள்ள கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க ஜோலார்பேட்டையில் இருந்து 25லட்சம் லிட்டர் குடிநீருடன் சென்னைக்கு ரயில் புறப்பட்டுள்ளது. இதனை குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் மகேஷ்வரன் தொடக்கி வைத்தார்.

சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் இருந்து ரயிலில் தண்ணீர் எடுத்துச் செல்வதற்காக தமிழக அரசு 65 கோடி ரூபா நிதி ஒதுக்கி, அதற்காக பணிகளை மேற்கொண்டது.

இதற்காக சென்னை மெட்ரோ குடிநீர் வாரிய அதிகாரிகள், ரயில்வே அதிகாரிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் ஜோலார்பேட்டை மேட்டுச்சக்கரம், கேதாண்டப்பட்டி, பார்சம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீரை ரயில் மூலம் எடுத்துச் செல்வதற்கான இடத்தைத் தேர்வு செய்தனர்.

அதன்படி, மேட்டுச்சக்கரகுப்பம் பகுதியில் உள்ள ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியில் நிரப்பி, அதிலிருந்து பார்சம்பேட்டை ரயில்வே கேட் வரை 3.5 கி.மீ. தொலைவுக்கு ராட்சத குழாய் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்ல முடிவெடுக்கப்பட்டது.

ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட 50 வேகன்கள் கொண்ட ரயில் ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. 70 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு வேகனில் 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மட்டுமே நிரப்பப்பட்டு சென்னைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

மொத்தம் 50 வேகன்கள் உள்ள இந்த ரயிலில் சோதனை ஓட்டமாக இரு நாள்களுக்கு 25 லட்சம் லிட்டர் தண்ணீர் ஒரு முறை கொண்டு செல்லப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து நாள் ஒன்றுக்கு இருமுறை கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. ராட்சத குழாய் மூலம் ரயில் நிலையத்துக்கு விநியோகமாகும் குடிநீரை வேகன்களில் ஏற்றுவதற்கு முன்பு ஒவ்வொரு முறையும் பரிசோதிக்கப்படுகிறது.


Add new comment

Or log in with...