எங்களது துடுப்பாட்டத்தின் முதல் 40 நிமிடங்களே போட்டியை மாற்றியது | தினகரன்


எங்களது துடுப்பாட்டத்தின் முதல் 40 நிமிடங்களே போட்டியை மாற்றியது

விராட் கோலி

நியூசிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையிலான 2019ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி (10) நிறைவுக்கு வந்திருக்கின்றது.

மென்சஸ்டர் நகரில், மழை காரணமாக கடந்த இரண்டு நாட்கள் (9 & 10) நடைபெற்ற இந்த அரையிறுதி போட்டியில் இந்திய அணியை 18 ஓட்டங்களால் தோற்கடித்த நியூசிலாந்து அணி இந்த ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் அணியாக மாறியதோடு, உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி ஒன்றுக்கு இரண்டாவது தடவையாகவும் முன்னேறியுள்ளது.

இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி 240 ஓட்டங்களை, இந்திய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. எனினும், போட்டியில் தோல்வியைத் தழுவிய இந்திய அணி 221 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

நியூசிலாந்து அணியுடனான போட்டியில் தோல்வியைத் தழுவி கடந்த உலகக் கிண்ணம் (2015) போன்று இம்முறை, உலகக் கிண்ணத் தொடரிலும் அரையிறுதிப் போட்டியுடன் வெளியேறும் இந்திய அணியின் தலைவரான விராட் கோலி தமது தோல்வி பற்றி கூறுகையில்,

“(போட்டியின்) முதல் பாதியில் (நியூசிலாந்து அணி துடுப்பாடும் போது) நாம் மிகவும் சிறப்பாக இருந்தோம். அப்பாதியில் எமக்கு எது தேவையோ அதை பெற்றுக் கொண்டிருந்தோம். நாம் நியூசிலாந்து அணியை எட்டக்கூடிய இலக்கு ஒன்றுக்குள் கட்டுப்படுத்திவிட்டதாக நம்பியிருந்தோம். ஆனாலும், நியூசிலாந்து அணி தமது பந்துவீச்சினால் திருப்பத்தை ஏற்படுத்தியது. போட்டியானது, நாம் துடுப்பாடிய முதல் 40 நிமிடங்களுக்குள் வேறுவிதமாக மாறிவிட்டது” என இந்திய அணியின் தலைவர் விராட் கோலி தெரிவித்தார்.

நியூசிலாந்து அணி, இந்திய வீரர்களை வீழ்த்த அவர்களின் பந்துவீச்சாளர்கள் முக்கிய காரணமாக இருந்தனர். அந்தவகையில், நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளரான மேட் ஹென்ரி இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் உட்பட மொத்தமாக 3 வீரர்களின் விக்கெட்டுக்களை சாய்த்திருந்ததோடு ட்ரென்ட் போல்ட், இந்திய அணியின் தலைவர் விராட் கோலி உட்பட 2 பேரின் விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார். விராட் கோலி நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் தொடர்பிலும் குறிப்பிட்டிருந்தார்.

“அவர்கள் புதிய பந்தை எவ்வாறு வீச வேண்டும் என்பதில், சிறப்பான முன்னுதாரணத்தை காட்டினர். அவர்கள் எங்களை (துடுப்பாட்டத்தில்) தவறுகள் செய்வதற்கு வழி செய்தனர். இதனால், பாரிய அழுத்தம் உருவாகி விட்டது. நான் நினைத்தபடி, எங்களால் போட்டியின் 7, 8 ஓவர்களுக்கு சிறந்த துடுப்பாட்ட பாணியினை வெளிப்படுத்த முடியவில்லை. இது அவர்கள் போட்டியில் எந்தளவுக்கு கட்டுப்பாட்டுடன் இருந்தார்கள் என்பதை காட்டுகின்றது.”

“(போட்டியின் முதல் நாள் எமக்கு நல்ல நாளாக இருந்தது. (நேற்று) எங்களுக்கு நல்ல தருணம் இருந்ததாக உணர்ந்தோம். ஆனால், அனைத்து பெருமையும் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்களுக்கே சேரும். பந்துவீச்சுக்காக அவர்களுக்கு மைதான மேற்பரப்பில் இருந்து கிடைத்த உதவியும், அவர்களின் திறமையும் தெளிவாக காட்டப்பட்டிருந்தது.”

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மஹேந்திர சிங் டோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இந்திய அணியின் வெற்றிக்காக போராட்டம் ஒன்றை வெளிப்படுத்தியிருந்தனர். இதில், ஜடேஜா 77 ஓட்டங்களை பெற்றிருந்ததோடு, எம்எஸ். டோனி 50 ஓட்டங்களை குவித்திருந்தார். இந்திய அணியின் தலைவர் இந்த இரு வீரர்களின் துடுப்பாட்டம் பற்றி பேசியிருந்த போது இவ்வாறு தெரிவித்திருந்தார்.

“ஜடேஜாவுக்கு கடந்த இரண்டு போட்டிகளும் நன்றாக இருந்தது. இந்த இரண்டு போட்டிகளிலும் அவரின் ஆட்டம் மிகவும் நேர்மறையாக இருந்தது. அதோடு, அவர் (ஜடேஜா) மிகவும் நேர்த்தியாக செயற்பட்டார். இதேநேரம், டோனி நல்ல இணைப்பாட்டம் ஒன்றை அவருடன் சேர்ந்து உருவாக்கியிருந்தார். ஆனால், போட்டியில் மாற்றத்தை ஏற்படுத்தியது டோனியின் ரன் அவுட் தான். 45 நிமிடங்கள் மோசமாக கிரிக்கெட் விளையாடியது, எங்களை உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேற்றிவிட்டது” என கோலி கூறியிருந்தார்.


Add new comment

Or log in with...