இலங்கை பிரேஸில் வர்த்தக உறவுகளைப் பலப்படுத்த நடவடிக்கை | தினகரன்


இலங்கை பிரேஸில் வர்த்தக உறவுகளைப் பலப்படுத்த நடவடிக்கை

வெளிவிவகார அமைச்சின் பொருளாதார இராஜதந்திர திட்டத்தின் ஓர் அங்கமாகவும், இலங்கைக்கும் பிரேசிலுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளைப் பலப்படுத்தும் நோக்கில் பிரேசிலுக்கான இலங்கைத் தூதுவர் முஸ்தபா.எம்.ஜபீர் கொய்யானியா நகருக்கு விஜயம் செய்திருந்தார். இந்த விஜயத்தில் வர்த்தக உறவுகள் தொடர்பான முதலாவது செயலாளர் சீவலி விஜயவந்தவும் கலந்துகொண்டிருந்தார். 

இந்த விஜயத்தின் போது கொய்யாஸ் மாநிலத்தின் பிரதி ஆளுநர் லிங்கன் தெஜோடாவை சந்தித்து பிராந்திய அரசாங்கத்துக்கும், இலங்கைக்கும் இடையில் காணப்படும் நீண்டகால ஒத்துழைப்பை பரஸ்பர இணக்கப்பாட்டுடன் பலப்படுத்துவது குறித்து கலந்துரையாடியிருந்தார். இலங்கையிலிருந்து வரும் வர்த்தக குழுவினருக்குத் தேவையான சகல உதவிகளையும் வழங்குவதாவும், தமது பிராந்தியத்தில் உள்ள உள்ளூர் தொழில்துறை பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கான களத்தை அமைத்துக் கொடுப்பதாகவும் பிரதி ஆளுநர் உறுதியளித்திருந்தார்.  இலங்கைத் தூதுவர், பிராந்திய அரசாங்கத்தின் வெளிநாட்டு வர்த்தக திணைக்களத்தின் அத்தியட்சகர் பெர்னான்டஸைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். 2020ஆம் ஆண்டு முதற்பகுதியில் ‘இலங்கை வர்த்தக தினம்’ ஒன்றை ஏற்பாடு செய்வதற்கு பிராந்திய அரசாங்கம் தயாராக உள்ளது என்ற செய்தியையும் அவர் வழங்கியிருந்தார். 2017ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து வர்த்தக பிரதிநிதிகள் தமது பிராந்தியத்துக்கு மேற்கொண்டிருந்த வெற்றிகரமான  பயணத்தை நினைவுகூர்ந்த பெர்னான்டஸ், இரு நாட்டுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடியிருந்தார்.

விவசாயம், மருந்து, சுற்றுலாத்துறை, தகவல் தொழில்நுட்ப சேவை மற்றும் இறப்பர் தொடர்பான விடயங்களில் பிராந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக இலங்கைத் தூதுவர் சுட்டிக்காட்டியிருந்தார்.   


Add new comment

Or log in with...