ஆரம்பத்தில் கண்டறிந்தால் மருத்துவ சிகிச்சை சுலபம் | தினகரன்


ஆரம்பத்தில் கண்டறிந்தால் மருத்துவ சிகிச்சை சுலபம்

சிறுநீரக பாதிப்பு

சிறுநீரக நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடிப்பது அவசியம். நாட்பட்ட சிறுநீரகக் கோளாறு ஏற்பட்ட பின்னர் அதனைக் குணப்படுத்துவது கடினம்.

சிறுநீரகங்கள் என்பது முதுகெலும்பு பகுதியில் உடலின் வலப்பக்கத்திலும், இடப்பக்கத்திலும் அவரை விதை வடிவில் அமைந்த உறுப்புகளாகும். நெடுநாட்பட்ட சிறுநீரகக் கோளாறு என்பது சிறுநீரகத்தின் முக்கியமான தொழிலான நீரில் கரையக் கூடிய கழிவுப் பொருள்களை குருதியிலிருந்து வடித்தெடுத்து வெளியேற்றும் செயல்பாடு சிறிது சிறிதாக குறைந்து நெடுநாட்களுக்குப் பின்னர் சிறுநீரகத்தின் முழுமையான செயல்திறனும் குறைவதாகும்.

சிறுநீரகம் குருதியில் அமில,-கார நிலையை சமப்படுத்துகிறது. குருதி அழுத்தத்தை கட்டுப்படுத்துகின்றது. குருதியில் உள்ள யூரியா மற்றும் 'கிரியாற்றினைன்' என்னும் கழிவுப் பொருட்களை வெளியேற்ற உதவுகின்றது. ​ேஹார்மோனை உற்பத்திசெய்கிறது. அதாவது தினமும் உடலில் உண்டாகும் நச்சுப் பொருட்களை வடி கட்டி கழிவுகளை சிறுநீரில் அனுப்புகிறது. தேவைக்கு அதிகமான உப்புகளையும், தாதுக்களையும் பிரிக்கிறது.

சிறுநீரகத்தின் செயற்பாடுகளில் பாதிப்பு ஏற்படும் போது சிறுநீரகங்கள் செயல் இழப்பு ஏற்பட்டு கழிவுகள் வெளியேறாமல் தங்கி விடும் போது முற்றிலும் சிறுநீரகத்தின் செயல் பாதிப்படைகின்றது.

தேவையான அளவு நீர் அருந்தாமை, உணவில் அதிகளவு உப்பு சேர்த்துக் கொள்ளுதல்,அதிக சக்தி வாய்ந்த மாத்திரைகள் அதிக நாட்களாக தொடர்ந்து உட் கொள்ளல், மருத்துவரின் ஆலோசனையின்றி தேவையற்ற மருந்துகளை உட்கொள்ளல், மதுபானம் மற்றும் புகைப்பிடித்தல் பழக்கம்,நாட்பட்ட நீரிழிவு நோய் மற்றும் இரத்த அழுத்தநோய் இருந்து அதற்கான மருந்துகளை அதிக நாட்கள் தொடர்ந்து உட்கொள்ளல், அடிக்கடி சிறுநீர்ப் பாதையில் தொற்றுகள், சிறுநீரகக் கற்கள், அதிகரித்த உடல்எடை,மரபணு குறைபாடு போன்ற பல விடயங்களை சிறுநீரக பாதிப்புக்குக் காரணங்களாகக் கூறலாம்.

இந்தக் காரணங்களை சரிசெய்வதன் மூலம் நெடுநாட்பட்ட சிறுநீரகங்களின் கோளாறுகளை தவிர்க்க முடியும்.

சிறுநீரக நோயின் முதல் அறிகுறிகள் பின்வருமாறு இருக்கும். சிறுநீர் வெளியேறும் அளவிலும், அதனை எத்தனை முறை கழிக்கிறோம் என்ற விதத்திலும் ஏற்படும் மாற்றங்களைக் கவனிக்க வேண்டும். சிறுநீர் கழிக்கும் அளவு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். சிறுநீரில் புரதம் அல்லது இரத்தம் காணப்படலாம். இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்திருக்கும்.

கைகள், கால்கள், முகம் ஆகிய இடங்களில் வீக்கம் உண்டாகும். சிறுநீரகத்தின் செயல்திறன் குறைவதால் நீர்த்தன்மை அதிகரித்து உடலில் வீக்கம் உண்டாகிறது. இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால் மூளைக்குச் செல்லும் ஒக்சிஜன் அளவு குறைந்து மயக்க உணர்வு ஏற்படும்.

இரத்தத்தில் உள்ள கழிவுப் பொருட்கள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் குமட்டலும் வாந்தியும் ஏற்படும். இரத்த அழுத்தம் அதிகரித்துக் காணப்படும்.உறக்கமின்மை உண்டாகும். இரவில் அடிக்கடி சிறுநீர் கழிதல் ஏற்படும். நுரையீரலில் நீர் சேர்ந்து விடுவதால் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும். இரத்தத்தில் யூரியா அளவு அதிகரித்து விடுவதால் வெளிவிடும் மூச்சுக்காற்றில் கெட்ட வாடை வீசும்.

இரத்தத்தில் யூரியா மற்றும் கிரியாற்றினைன் என்னும் கழிவுகள் அதிகரிப்பதால் சருமத்தில் தீவிரமான சொறிச்சலும்,அரிப்புகளும் ஏற்படும்.

சிறுநீரக நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடிப்பதால் பாதிப்பைத் தடுத்து நிறுத்தி மருத்துவம் செய்வதும் இலகுவானது.


Add new comment

Or log in with...