திருமணத்துக்கு முன்பாக ஆணுக்கும் பெண்ணுக்கும் எச்.ஐ.வி சோதனை கட்டாயம் | தினகரன்


திருமணத்துக்கு முன்பாக ஆணுக்கும் பெண்ணுக்கும் எச்.ஐ.வி சோதனை கட்டாயம்

எச்.ஐ.வி பரிசோதனை என்பது எவ்வளவு முக்கியமான விஷயம் என்பது நம் எல்லோருக்குமே நன்கு தெரிந்த விஷயம்தான். பாதுகாப்பற்ற உடலுறவின் காரணமாகவே இந்நோய் கூடுதலாகப் பரவுகிறது.

அதேபோல் இரத்தம் மாற்றப்படும் போது ஊசியின் மூலம் பரவுகிறது.இவ்வாறு பல காரணங்கள் இருந்தாலும் ஒருமுறை பரவி விட்டால் அதனைத் தடுப்பது அவ்வளவு எளிதல்ல. அதனால் இந்தியாவின் கோவா அரசு இனிமேல் திருமணத்துக்கு முன்பாக எல்லோரும் கட்டாயம் எச்.ஐ.வி பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருக்கிறது.

கோவாவின் சுகாதாரத் துறை அமைச்சரான விஸ்வஜித் ரானே திருமணத்துக்கு முன்பாக எச்.ஐ.வி பரிசோதனை செய்து கொள்வதைக் கட்டாயமாக்க வேண்டும் என்னும் பரிந்துரையை கோவா நீதித்துறைக்கு அனுப்பி இருக்கிறார். அது மிகப் பெரும் பரபரப்பையும் எதிர்ப்பையும் அதே அளவுக்கு ஆதரவையும் பெற்றிருக்கிறது.

தங்களுடைய திருமணத்தை தம்பதியினர் பதிவு செய்கின்ற பொழுது எச்.ஐ.வி சோதனை அறிக்ைகயை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று அந்த பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநில சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத் தொடர் வருகின்ற போது இதற்கான அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 15 ஆம் திகதியிலிருந்துதான் இந்த கூட்டத் தொடர் ஆரம்பமாகிறது.

இதற்கு முன்பாக கடந்த 2006 ஆம் ஆண்டு கோவாவில் சுகாரத்துறை அமைச்சராக இருந்த தயானந்த நர்வேக்கர் இதே பரிந்துரையை அப்போதே முன்வைத்திருந்தார். ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. அதனால் இந்த முறையாவது நிறைவேற்றப்படுமா, சட்ட வரைவு கொண்டு வரப்படுமா என்ற எதிர்பார்ப்பு கோவா மக்களிடம் அதிகமாகி இருக்கிறது.


Add new comment

Or log in with...