உணவு நச்சுத் தன்மை அடைய காரணங்கள் | தினகரன்


உணவு நச்சுத் தன்மை அடைய காரணங்கள்

மனிதன் வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகளில் ஒன்று உணவாகும். மனிதர்களை வாழ வைப்பதுதான் உணவின் வேலை. ஆனால் சில சமயம் நாம் செய்யும் தவறுகளால் அந்த உணவே எமக்கு விஷமாக மாறி விடுகின்றது.

சாப்பிட்ட உடனேயே வயிற்றில் குமட்டல், அடிவயிற்றில் வலி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உணவு விஷமாக மாறியுள்ளது என்று அர்த்தம்.

அசுத்தமான உணவை உண்பது உணவு நோய்த்தொற்றுக்கு காரணம்.

உணவை சமைக்கும் போதோ அல்லது சேமிக்கும் போதோ அதில் பக்ரீரியா மற்றும் வைரஸ்களின் தொற்றுகள் ஏற்படலாம். உணவுநோய்த்தொற்று ஏற்படுவதற்கான காரணங்கள் எவையென்று பார்க்கலாம்.

உணவு மாசுபாடு என்பது அறுவடை செய்வது, சேமிப்பது அல்லது சமைப்பது போன்ற எந்த நிலையில் வேண்டுமென்றாலும் நடக்கலாம். மேலும் வெளிப்புற தூண்டுதல்களாலும் உணவில் அசுத்தம் ஏற்படலாம்.

பொதுவாக சமையலுக்கு உட்படுத்தாத பொருட்கள்தான் அதிக அசுத்தத்திற்கு ஆளாகின்றன. உடனடியாக சாப்பிடக் கூடிய உணவுப் பொருட்களில் அதிக மாசு ஏற்பட வாய்ப்புள்ளது. பாலை குடிப்பதற்கு முன்னர் கொதிக்க வைக்கிறோம். வெப்பமாக்கல் முறையில் தொற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய பக்டீரியாக்கள் அழிக்கப்படுகின்றன.

உணவு நோய்த்தொற்றுக்கு பக்ரீரியாக்களே மிகவும் பரவலான காரணமாக உள்ளன. அதேநேரத்தில் ஒட்டுண்ணிகளும் காரணமாக இருக்கின்றன. சால்மோனெல்லா என்ற பக்ரீரியா உணவில் நச்சுத்தன்மையை அதிகரிக்கும் முக்கிய காரணியாக இருக்கிறது. பொதுவாக இது இறைச்சி, முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் பாலை அதிகம் தாக்குகிறது. இது கத்தியின், காய்கறி வெட்ட பயன்படுத்தும் பலகை மற்றும் சமைப்பவர் கை போன்றவற்றின் மூலம் பரவுகிறது.

உணவு நோய்த்தொற்றின் அறிகுறிகள் 1 முதல் 3 நாட்கள் வரை தோன்றலாம். ஒட்டுண்ணிகள் சமிபாட்டுத் தொகுதியில் பல ஆண்டுகள் வாழக் கூடும். கர்ப்பிணிப் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இதனால் மோசமான ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படலாம்.

அதேபோல 55 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஏனெனில் அவர்களின் நோயெதிர்ப்பு மண்டலம் மிகவும் பலவீனமாக இருக்கும்.

உணவு நோய்த்தொற்று பெரும்பாலும் கோடை காலத்தில் அதிகம் ஏற்படும். அதற்குக் காரணம் கோடை காலத்தில் உணவுகள் விரைவில் பழுதடைந்து விடும். மேலும் வெளியிடங்களுக்கு செல்லும் போது பச்சையாக அல்லது சரியாக வேக வைக்கப்படாத உணவுகளை சாப்பிடும் போது இந்தப் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.

கிருமிகளும், பக்ரீரியாக்களும் கைகளின் மூலம் பரவ அதிக வாய்ப்புள்ளது. எனவே சாப்பிடுவதற்கு முன்னரும், சமைப்பதற்கு முன்னரும் கையை சவர்க்காரம் இட்டு கழுவ வேண்டியது அவசியமாகும். அதேசமயம் மீதமான உணவுகளை பாதுகாப்பாகப் பத்திரப்படுத்த வேண்டியதும் அவசியமாகும்.

உணவு நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். ஏனெனில் வயிற்றுப்போக்கால் அவர்கள் குறிப்பிட்ட அளவு நீர்ச்சத்தை இழந்திருப்பார்கள். பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடும் முன்னர் சுத்தமாகக் கழுவ வேண்டும். அதேபோல உணவு வைக்கப் போகும் இடத்தை முன்னரே சுத்தம் செய்ய வேண்டும். உணவுத் தொற்று அறிகுறிகள் 2 நாட்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியமாகும்.


Add new comment

Or log in with...