உயிர்த்த ஞாயிறு மனு மீதான எதிர்ப்பை முன்வைக்க உத்தரவு | தினகரன்

உயிர்த்த ஞாயிறு மனு மீதான எதிர்ப்பை முன்வைக்க உத்தரவு

ஹேமசிறி பெனாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர வழக்கு ஜூலை 25 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு 

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டிருந்த பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் எதிர்வரும் 18 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் எதிர்ப்புகளை முன்வைக்கலாமென, சட்ட மா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று (12) முற்பகல் 07 பேரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த 12 மனுக்களை எடுத்துக்கொண்ட வேளையில் இந்த உத்தரவு வழங்கப்பட்டது.

இது தொடர்பான எதிர்ப்பிற்கு எதிராக ஜூலை 25 ஆம் திகதிக்கு முன்னர், ஆட்சேபனைகளை முன்வைக்குமாறு முறைப்பாட்டாளர் தரப்பு வழக்கறிஞர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களை தடுக்க முடியாமை தொடர்பில் ஹேமசிறி பெனாண்டோ மற்றும்  பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.  

பிரதம நீதியசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையில் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் குழாமில், புவனேக அலுவிஹாரே, சிசிர டி அப்றூ, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, எல்.ரி.பி. தெஹிதெனிய, முர்து பெனாண்டோ ஆகியோர் உறுப்பினர்களாவர்.

இம்மனு விசாரணையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டிருந்த பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் சார்பில் சட்ட மா அதிபர் முன்னிலையாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...