துறைசார் நிபுணர்களின் பரிந்துரை பெற்றே திருத்தம் செய்ய வேண்டும் | தினகரன்


துறைசார் நிபுணர்களின் பரிந்துரை பெற்றே திருத்தம் செய்ய வேண்டும்

நாணய விதிச் சட்டத்தில் திருத்தம்;

நாணய விதிச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவருவதாயின் துறைசார் நிபுணர்களின் பரிந்துரைகளைப் பெற்றே மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். நாடு பொருளாதார ரீதியில் நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கும் நிலையில் இவ்வாறான சட்டத்திருத்தங்கள் மேலும் நிலைமைகளை மோசமடையச் செய்யும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அரசாங்கத்துக்கு மேலும் சில நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில் நாணய விதிச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதைத் தவிர வேறு விடயங்களையே மக்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

பாராளுமன்ற குழு அறையில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.

1949ஆம் ஆண்டு 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவந்து மத்திய வங்கியின் நாணயச் சபை உறுப்பினர் பதவியிலிருந்து திறைசேரியின் செயலாளரை நீக்குவதற்கு முயற்சிக்கப்படுகிறது. இவ்வாறு செய்வதன் ஊடாக மத்திய வங்கி தொடர்பில் திறைசேரிக்கு இருக்கும் கட்டுப்பாடு இல்லாமல்போய், சுயாதீனமாக நாணயத்தை மத்திய வங்கி அச்சிடுவதற்கான சூழல் ஏற்பட்டுவிடும். அது மாத்திரமன்றி திறைசேரியின் செயலாளர், ஜனாதிபதியினாலேயே மத்திய வங்கியின் நாணயச் சபைக்கு நியமிக்கப்படுகிறார். எனினும், திருத்தத்தின் ஊடாக அதனை ஆணைக்குழுவிடம் கையளிப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்றார். இவ்வாறான நடவடிக்கைகளால் ஏற்கனவே நாடு பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், நிலைமைகள் மேலும் மோசமடையலாம். இவ் விடயம் குறித்து தொழிற்சங்கங்கள் கவனம் செலுத்தியுள்ளன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் விளக்கமளித்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி பந்துல குணவர்தன கூறுகையில், நாணய விதிச் சட்டத்தில் கொண்டுவருவதற்கு ஜனாதிபதி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் சமர்ப்பித்துள்ள அமைச்சரவைப் பத்திரத்தில், பொருளாதார நிபுணர்கள் மற்றும் கல்விமான்கள் அடங்கிய குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்


Add new comment

Or log in with...