இம்மையைப் புறக்கணிப்பதா? | தினகரன்

இம்மையைப் புறக்கணிப்பதா?

இறைதூதர் (ஸல்) அவர்கள் கீழ்வருமாறு பகர்ந்தார்கள்:  

''ஒரு முஸ்லிம் ஒரு பயிரை நட்டு, அதிலிருந்து ஒரு மனிதனோ அல்லது ஒரு மிருகமோ அல்லது ஒரு பறவையோ உட்கொண்டால் அது அவருக்கு தர்மமாக அமையும்.''    (புகாரி, முஸ்லிம்)  

அனஸ் இப்னு மாலிக் (றழி), ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (றழி) ஆகிய இரு ஸஹாபாக்களும் அறிவிக்கின்ற மேற்படி நபிமொழி, புகாரி, முஸ்லிம், திர்மிதி, தாரமி, முஸ்னத் அஹ்மத் போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.  

பொதுவாக ஓர் உலோகாயதச் செயற்பாடாகக் கருதப்படும் விவசாயத்தை அதிலீடுபடுவதை - இந்நபிமொழி ஒரு மேலான வணக்கம் - தர்மம் என்று கூறுகின்றது. இது, மறுமைக்காக உழைப்பதுடன், உலக வாழ்வு சிறக்க, மனிதவாழ்வு வளம்பெற, பூமியில் செல்வம் கொழிக்க, ஒவ்வொரு முஸ்லிமும் பாடுபட வேண்டும் எனும் இஸ்லாத்தின் கருத்துக்கு உரமூட்டுவதாக உள்ளது.  

'இமாரத் ' எனும் உலகை வளப்படுத்தும் பணி, இபாதத்தை விட எவ்வகையிலும் முக்கியத்துவத்தில் குறைந்ததல்ல என்பதனை அர்ராகிபுல் அஸ்பஹானி அழகுற விளக்கியுள்ளார்.  

கைவிடப்பட்ட ஒரு நிலத்தை ஒருவர் கைப்பற்றி, அதனை வளப்படுத்தினால், அது அவருக்குச் சொந்தமாகிவிடுகின்றது என இஸ்லாம் கூறுகின்றது. ''ஒருவர் ஓர் இறந்த பூமியை உயிர்ப்பித்தால் அது அவருக்குச் சொந்தமாகி விடுகின்றது.'' (அஹ்மத், அபூதாவூத், திர்மிதி) இதுவும் மேற்படி கருத்துக்குச் சிறந்ததோர் ஆதாரமாகும்.  

இஸ்லாம் ஒருபோதும் துறவறத்தைப் போதித்ததில்லை. 'துறவறம் எங்கள்மீது விதிக்கப்பட்டதல்ல' (அஹ்மத்) என்பது நபிமொழியாகும். உலக விவகாரங்களில் ஒரு முஸ்லிம் உற்சாகமாக ஈடுபாடு கொள்ள வேண்டும் என்றே இஸ்லாம் எதிர்பார்க்கின்றது.  

இவ்வுலகிலும் கூட, தானும் மக்கள் அனைவரும் கவலைகளின்றி மகிழ்ச்சியுடன் வாழவேண்டுமென்றே றஸுலுல்லாஹ் விரும்பினார்கள். இதனால்தான் எப்போதும் கவலைகள், துன்பங்கள் தம்மை அணுகாமலிருக்க அல்லாஹ்வை வேண்டி வந்தார்கள். 

 'யா அல்லாஹ், துன்பத்திலிருந்தும் துயரத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'; (புகாரி, திர்மிதி) எனப் பிரார்த்திப்பது அண்ணலாரின் வழக்கமாயிருந்தது. ஸஹாபாக்களுக்கும் இதனைக் கற்றுக் கொடுத்தார்கள். வெறும் பிரார்த்தனையுடன் நின்று விடாது, மக்களின் துயர் துடைக்க அயராது உழைத்தார்கள்.  

'எனது கண்கள் தூங்கினாலும் என்னுள்ளம் என்றும் துயில் கொள்வதில்லை' (அபூதாவூத், அஹ்மத்) எனக் கூறிய அல்லாஹ்வின் தூதர், மக்களின் துயர் துடைக்க அல்லும் பகலும் அக்கறையோடு உழைத்தார்கள். பனூ முஸ்தலக் எனும் கோத்திரத்தாரிடையே ஏற்பட்ட ஒரு சச்சரவைத் தீர்த்து வைப்பதிலீடுபட்டு, ஒரு நேரத் தொழுகையையே நபியவர்கள் விட்டுவிட்ட வரலாற்றை ஸீரா கூறுகின்றது.  

ஆக்கபூர்வமான, மனித சமூகத்திற்கு நன்மை பயக்கக் கூடிய அனைத்துக் கருமங்களையும் இஸ்லாம் 'இபாதத்' தாகவே கருதுகின்றது. நபியவர்கள் கீழ்வருமாறு குறிப்பிட்டார்கள்: 'அநியாயம் செய்யும் நோக்கமோ, அத்துமீறும் நோக்கமோ இன்றி, எவரொருவர் ஒரு கட்டடத்தைக் கட்டினாரோ அல்லது ஒரு பயிரை நட்டாரோ அதனைக் கொண்டு றஹ்மானுடைய படைப்புகள் நன்மையடையும் காலமெல்லாம் அவருக்கு நிலையான நற்கூலி கிடைத்துக் கொண்டேயிருக்கும்' (அஹ்மத்). தனது மனைவி மக்களுக்காக உணவளிப்பதும்கூட தர்மமாகவே கருதப்படுகின்றது.  

உழைப்பையும் உயர்ந்த வணக்கமாகக் கருதுகின்றது இஸ்லாம். அதனை 'அல்லாஹ்வின் அருளைத் தேடிப் பெறல்' எனக் கூறிச் சிறப்பிக்கின்றது. ஜிஹாதுக்காகச் செல்வோருடன் உழைப்புக்காகச் செல்வோரை இணைத்துக் கூறுவதன் மூலம், உழைப்பின் மகத்துவத்தை மேலும் உயர்த்திக் காட்டுகின்றது.

(அல்குர்ஆன் ஸுரா முஸ்ஸம்மில் 20ம் வசனத்தைப் பார்க்க.) 'நம்பிக்கையும் நாணயமும் கொண்ட வியாபாரிகள் (மறுமையில்) நபிமார்கள், ஸித்தீக்கீன்கள், ஷுஹதாக்கள் ஆகியோருடன் எழுப்பப்படுவார்கள்' என்றார்கள் நபியவர்கள். (இப்னு மாஜா)  

அனைத்து வகையான சமூக சேவைகளையும் இஸ்லாம் வணக்கமாகவே கருதுகின்றது. 'மக்களுக்குத் தீங்கு செய்யக் கூடிய கற்கள், முட்கள் போன்றவற்றைப் பாதையிலிருந்து அகற்றிவிடுவதுகூட ஓர் இபாதத்தாகும்' (முஸ்லிம்). முஸ்லிம்களுக்குத் தீங்கு இழைக்கக்கூடிய, பாதையில் விழுந்திருந்து ஒரு மரக்கிளையைப் பாதையிலிருந்த நீக்கிய ஒரே காரணத்திற்காக சுவர்க்கம் நுழைவிக்கப்பட்ட ஒரு மனிதரைப் பற்றி ஹதீஸ் குறிப்பிடுகின்றது. (முஸ்லிம்)  

ஆன்மீகத்துறைக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து உலகியல் விவகாரங்களைப் புறக்கணிப்பது கூடாது. உலோகாயாத விவகாரங்களில் அளவு கடந்து ஈடுபட்டு ஆன்மீகத்துறையை மறந்துவிடுவதும் ஆகாது.

இஸ்லாம் உலக வாழ்வையும் மறுமை வாழ்வையும் இணைத்து அவையிரண்டிற்குமிடையில் சமநிலையைப் பேணி நடுநிலையான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றது.  

கீழ்வரும் அல்குர்ஆன் வசனங்கள் எவ்வாறு ஒரு முஸ்லிம் வர்த்தகம் போன்ற உலக விவகாரங்களிலும், தொழுகை போன்ற வணக்க வழிபாடுகளிலும் மாறிமாறி ஈடுபடுவதனூடாக, குறித்த இரு வாழ்வுக்கிடையிலான சமநிலையைப் பேணுவான் என்பதனை அழகுற விளக்குகின்றன.  

''விசுவாசிகளே! ஜும்ஆத் தினத்தன்று தொழுகைக்காக அழைக்கப்பட்டால், வர்த்தகத்தை விட்டுவிட்டு அல்லாஹ்வைத் தியானிக்க நீங்கள் விரைந்து செல்லுங்கள். நீங்கள் அறிவுடையோர்களாயிருந்தால் இதுவே உங்களுக்கு மிக நன்று. தொழுகை முடிவு பெற்றால் பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக்கொள்ளுங்கள். நீங்கள் சித்தியடையும் பொருட்டு அல்லாஹ்வை அதிகம் நினைவுகூருங்கள்.'' (63:9-10)

அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் (நளீமி, எம்.ஏ)

(பிரதிப்பணிப்பாளர், ஜாமியா நளீமிய்யா)

 


Add new comment

Or log in with...