"இராமாயணத்தில் அகலிகை" | தினகரன்

"இராமாயணத்தில் அகலிகை"

அதிபர்  செல்வகுமாரின் தமிழ்ச்சங்க இலக்கிய சொற்பொழிவிலிருந்து...

கொழும்பு தமிழ்ச் சங்கம் கடந்த வார இலக்கியக்கள நிகழ்ச்சியில் "இராமாயணத்தில் அகலிகை" எனும் தலைப்பில் சிறந்ததொரு சொற்பொழிவை வழங்கியது.

நீர்கொழும்பு தோப்பு ரோமன் கத்தோலிக்க தமிழ்மகா வித்தியாலய அதிபர் ஆர். செல்வகுமார் சிறப்புச் சொற்பொழிவை வழங்கினார்.

அச்சொற்பொழிவின் ஒரு பகுதி இது.

"அகலிகை பற்றி கூறும் கம்பர் கௌதம முனிவர்  பற்றி குறிப்பிடுகையில்: அவர் முக்காலும் உணர்ந்த ஒரு முனிவர் என்றும் அகலிகையை காப்பாற்றவேண்டிய கணவராக அவர் தன் கடமையைச் செய்யவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகின்றார். அவர் அகலிகையை காப்பாற்றவில்லை என்பதையே அவர் உணர்த்துகிறார்.

அதேவேளை இந்த பாதகச் செயலுக்கு காரணமான இந்திரன் தொடர்பில் எதுவும் சொல்லப்படவில்லை. இன்று நாம் பார்க்கும் சமூகத்திலும் இதுதான் நடக்கின்றது.

ராமாயணத்தில் அகலிகையை சீதை சந்திக்கும் சந்தர்ப்பம் ஒன்று வருகிறது. ஏற்கனவே சீதை தம்மை பதிவிரதை என்று காண்பிப்பதற்கு செலுத்திய விலை மிக அதிகமானது. சீதை தூய்மையானவள் என்பதை நிரூபிப்பதற்காக அவளை அக்கினியில் குளிக்கும்படி இராமர் சொல்கிறார்.

இராமர் மிக நல்லவராகவும் தூய்மையானவராகவும்  உயர்ந்த நிலையில் காட்டப்படுகிறார்.

கல்லாகி நின்ற அகலிகையை அவ்வழியே சென்ற இராமபிரானின் கால் அசைவு அதிர்வினால் மீண்டும் பெண்ணாகிறாள் அவளது சாப விமோசனம் நீங்குகிறது எனக் கூறப்படுகின்றது.

அகலிகை என்ற கதாபாத்திரம் தன் மன உணர்ச்சியை வெளிப்படுத்த முடியாத ஒருவளாகக் காட்டப் படுகின்றாள் தன் பக்க நியாயத்தை சொல்ல முடியாத நிலையில் அவள் இருக்கின்றாள். பெண் என்பதால் அவளுக்கு அந்த நிலை இருந்தது

கல்லாக இருந்த அவள் மீண்டும் பெண்ணாக உருவெடுத்து இருந்தபோது கௌதமர் மீண்டும் அவள் அருகே செல்கிறார். ஆனால் அவளோ தான் கல்லாய் இருந்த போது எவ்வாறு இருந்தாரோ அதே போன்று மனதளவில் கல்லாகி ஒரு ஜடமாகவே அப்போதும் காட்சியளிக்கின்றாள். அதன் பின்பு அவள் வாழ்க்கை முழுவதும் அவள் கல்லைப் போன்று ஒரு ஜடமாகவே வாழ்ந்தாள் என்பதை பார்க்க முடிகிறது. கடவுள் பெண்ணைப் படைக்கும் போது மிக கவனமாக படைத்துள்ளார். அதனால்தான் பெண் என்பவளுக்கு உள்ளே பல்வேறு விடயங்கள் பொதிந்து ள்ளன. கற்பு, பாதுகாப்பு என வரும்போது ஆணுக்கு அது தொடர்பில் எதுவும் கூறப்படவில்லை. ஆனால் பெண்ணுக்கு அது முக்கியமானதாகிறது .

 தாய், மனைவி, சகோதரி,  தோழி என பல்வேறு பாத்திரங்கள் பல்வேறு உணர்ச்சிகள் அவளிடமிருந்து பிரதிபலிக்கின்றன.

விஞ்ஞான முறைப்படி பார்த்தாலும் பெண் என்பவள் ஆணைப் போலன்றி மிக மென்மையானவள். உடலமைப்பிலும் சரி சக்தியிலும் சரி அவள் வேறுபட்டவள். அது போன்றே இயல்பாகவே அவள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேருகிறது.

இத்தகைய காரணங்களுக்காக பெண்ணிற்கு நமது சமூகம் அவளுக்குரிய மதிப்பை கொடுக்க வேண்டும்.

 அகலிகை போன்று பல பெண்கள் நமது சமூகத்திலும் வாழ்கின்றார்கள். அவர்கள் இன்னும் விமோசனம் கிடைக்காமலேயே இருக்கின்றார்கள். அவர்களுடைய மனது கல்லாகிப் போகும் அளவுக்கு சமூகத்தின் செயற்பாடுகள் அமைந்துவிடுகின்றன.  பல சம்பவங்களுக்கு புரிந்துணர்வே காரணமாகின்றது. குறிப்பாக கணவன் மனைவிக்கிடையில் சரியான புரிந்துணர்வு இல்லாமல் பல்வேறு பிரச்சினைகளுக்கு அது காரணமாகின்றது.  உலகளவில் பெண்கள் பல சாதனைகளைப் படைத்து உயர்ந்து நின்றாலும் இன்னும் வட்டத்துக்குள் இருந்து அவர்கள் வெளியே வர முடியாமல் உள்ளனர்.

அகலிகையைப் பற்றி சிந்திக்கின்ற நாம் எம் சமூகத்தில் உள்ள பெண்களுக்கும் உரிய மதிப்பு வழங்க வேண்டியது முக்கியம். அகலிகைக்கு சாப விமோசனம் கொடுத்தவர் இராமபிரான்.

அது போன்று எமது பெண்களுக்கும் விமோசனம் கிட்ட வேண்டும்."

சமூகத்தில் பெண்களுக்கு உள்ள அந்தஸ்து அவர்கள் எவ்வாறு பார்க்கப்படுகின்றனர். என்பதை தெளிவுபடுத்துவதற்காக அகலிகை கதாபாத்திரத்தின் ஊடாக சிறந்த விடயங்களை அதிபர் செல்வகுமார் பெற்றுத் தந்துள்ளார். சொற்பொழிவையடுத்து இடம்பெற்ற கருத்துரையாடல் சிறப்பாக அமைந்தது. அகலிகை,கௌதமர்,இராமபிரான் என கதாபாத்திரங்களின் போலிகள், இதிகாச கதைகளின் வதந்திகள் இங்கு துகிலுரிக்கப்பட்டன.

வைத்திய கலாநிதி சி.அனுஷ்யந்தனின் தலைமையில் நடந்த இந் நிகழ்வு அருமை.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...