போதையற்ற நாட்டை உருவாக்க மக்களது பங்களிப்பு அவசியம் | தினகரன்

போதையற்ற நாட்டை உருவாக்க மக்களது பங்களிப்பு அவசியம்

நாட்டை போதைப்பொருள் அரக்கனிலிருந்து விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் பரந்த அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. போதைப்பொருட்கள் மனிதனின் உடல் உள ஆரோக்கியத்திற்கு தீங்குகளை விளைவிப்பதோடு, சமூக சீரழிவுகளுக்கும் அதிக பங்களிப்பை நல்கி வருகின்றன. அதன் காரணத்தினால்தான் போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றது.

போதைப்பொருட்களில் பெரும்பாலானவை மனிதனின் நரம்புத் தொகுதியை நேரடியாக பாதித்து பலவீனப்படுத்தக் கூடியவையாக உள்ளன. அதன் விளைவாக போதைப்பொருளுக்கு அடிமையாகின்றவர்களின் உடல் உழைப்பிலும் அவர்களது ஆற்றல்களிலும், உற்பத்தித் திறனிலும் பெரிதும் வீழ்ச்சி ஏற்படுகிறது. அத்தோடு வறுமையின் பிடிக்குள்ளும் அவர்கள் தள்ளப்படுவர். இவை நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் பாதிப்பாக அமையும்.

அதனால்தான் இன்றைய காலகட்டத்தில் ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாகப் போதைப்பொருட்கள் பாவிக்கப்படுவதாகக் கருதப்படுகின்றது. அதாவது இளம் பராயத்தினரை போதைப்பொருளுக்கு அடிமையாக்கி விடுவதன் மூலம் அவர்களது உற்பத்தித்திறன் வீழ்ச்சி அடையும். அது நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு வழியேற்படுத்துவதாக அமையும்.

இதேவேளை போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இதன் பாவனைக்குள் இளம் பராயத்தினரை உள்ளீர்த்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். ஏனெனில், அவர்கள் மூலம் நீண்ட காலம் வருமானம் ஈட்டக் கூடியதாக இருக்கும்.

இவ்வாறான பேரழிவு நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டுதான் போதைப்பொருள் பாவனையிலிருந்து நாட்டையும் மக்களையும் விடுவிப்பதில் இலங்கை அதிக கவனத்தையும் அக்கறையையும் குவித்து இருக்கின்றது. குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 'போதையற்ற நாடு' என்ற தேசிய வேலைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளார். இத்திட்டம் நாடெங்கிலும் பரந்த அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இவ்வேலைத்திட்டத்துக்கு பொலிஸாரும் முப்படையினரும் கலால் திணைக்கள உத்தியோகத்தர்களும் முழுமையான ஒத்துழைப்பை நல்கி வருகின்றனர்.

இதன் பயனாக போதைப்பொருள் குற்றச்செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சட்டவிரோத போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன.போதைப்பொருட்கள் குற்றச்செயல்களுடன் சம்பந்தப்படுபவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் ஆஜர்படுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு சட்டத்தின் ஊடாக தண்டனைகள் வழங்கப்படுகின்றன.

இந்த வகையில் கடந்த ஆறு மாத காலப் பகுதியில் 40,846 பேர் போதைப்பொருள் குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு 3,500 கிலோ கிராம் சட்டவிரோத போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றில் ஹெரோயின் 1029 கிலோகிராமாகும். அவற்றுடன் தொடர்பான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் 20,309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் தொடர்பான ஜனாதிபதி செயலணி, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் பொலிஸ் திணைக்களம் என்பன இணைந்து மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சிகரமான பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த தகவல்களின்படி 'நாளொன்றுக்கு சுமார் ஒரு இலட்சம் பேர் ஹெரோயின் போதைப்பொருளை தேடி அலைவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவர்களில் 85,000 பேர் ஆண்கள் என்றும் 1500 பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம், சுமார் மூன்று இலட்சம் பேர் கஞ்சா பாவனைக்கு அடிமையாகி இருப்பதும் இந்த ஆய்வினூடாக கண்டறியப்பட்டுள்ளது. போதைப்பொருட்கள் நாட்டில் எவ்வாறு ஆழ ஊடுருவி வருகின்றன என்பதை இந்தத் தகவல்கள் எடுத்துக் காட்டுகின்றன. இவ்வாறு போதைப்பொருட்களின் துஷ்பிரயோகம் அதிகரித்துச் செல்வது நாட்டுக்கோ மக்களுக்கோ ஒருபோதும் நன்மை அளிக்கப் போவதில்லை. அதனால் போதைப்பொருள் துஷ்பிரயோகத்திலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத் திட்டங்கள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். இது எல்லா மட்டங்களிலும் பரவலாக உணரப்பட்டுள்ளது.

போதைப்பொருள் தொடர்பான ஜனாதிபதி செயலணி, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியன இணைந்து மேற்கொண்ட ஆய்வின் அறிக்கையை கையேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 'நாடெங்கிலும் 18 வயதுக்குக் குறைந்த ஒரு இலட்சத்து 15 ஆயிரம் சிறுவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளனர்' என்று தெரிவித்ததுடன் 'அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கவென தேசிய வேலைத்திட்டமொன்றை விரைவாக ஆரம்பிக்குமாறும்' அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டிருக்கும் இந்த தகவலும் அதிர்ச்சிகரமானதாகும். 18 வயதுக்கு குறைந்தவர்கள் என்பவர்கள் சிறுவர்களாகவர். சிறுபராயத்திலேயே சட்டவிரோத போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு இந்நாட்டு சிறுவர்கள் உள்ளாகியிருப்பது துர்ப்பாக்கியமான நிலைமையாகும். அதேநேரம் போதைப்பொருள் துஷ்பிரயோகத்திலிருந்து நாட்டை மீட்டெடுக்கவென முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களையும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு வழங்கியுள்ள பணிப்புரைகளையும் மக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

போதைப்பொருள் துஷ்பிரயோகத்திலிருந்து நாட்டையும் மக்களையும் மீட்டெடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்களுக்கு மக்கள் அளிக்கும் ஒத்துழைப்பு மேலும் பலப்படுத்தப்பட வேண்டும். இது காலத்தின் தேவையாகும். இவ்வேலைத்திட்டங்களை மேலும் வலுப்படுத்துவதற்காக சமய, சமூக நிறுவனங்கள் மாத்திரமல்லாமல் ஒவ்வொரு சமூக நல ஆர்வலர்களும் கூட ஒத்துழைப்பு நல்கவேண்டும். அப்போதுதான் போதையற்ற நாட்டை விரைவாக உருவாக்கலாம். போதையற்ற நாடே மக்களின் ஒரே எதிர்பார்ப்பு.


Add new comment

Or log in with...