Home » அப்பாவி நோயாளர்களை பாதிக்கும் நடவடிக்ைக!

அப்பாவி நோயாளர்களை பாதிக்கும் நடவடிக்ைக!

by gayan
January 18, 2024 6:00 am 0 comment

சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இலங்கையில் இலவச சுகாதார சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இச்சேவையின் நிமித்தம் விசாலமான பௌதீக கட்டமைப்பு வசதிகளை கொண்டுள்ள இத்துறை மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள், தாதியர் உட்பட பல்துறைகளுக்குமான சிற்றூழியர்கள் என பெருந்தொகை ஆளணியினரையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

அரச செலவில் முற்றிலும் இலவசமாக இச்சேவை முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் பயனாக இந்நாடு சுகாதாரத் துறையில் பாரிய முன்னேற்றங்களை அடைந்து கொண்டுள்ளது. இதற்கு அனைத்துத் தரப்பினரும் அளித்துவரும் பங்களிப்புக்கள் எவ்விதத்திலும் குறைத்து மதிப்பிடக் கூடியவை அல்ல.

வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வருடா வருடம் கோடானு கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த இலவச சுகாதார சேவை சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றது. 2022 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் நாடு கடும் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்தது. அதன் விளைவாக மக்கள் பலவிதமான அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்தார்கள். உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டங்களைக் கூட இடைநிறுத்தும் நிலைமைக்கு நாடு உள்ளாகியது.

இருப்பினும் இலவச சுகாதார சேவைக்கான நிதியொதுக்கீடு நிறுத்தப்படவில்லை. பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்த போதிலும் நாட்டின் சுகாதார சேவை ஸ்தம்பிதமடைய இடமளிக்கப்படவுமில்லை. அந்தளவுக்கு கடும் அர்ப்பணிப்போடு இச்சேவை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பொருளாதார நெருக்கடி காலத்தில் நாடும் மக்களும் முகம்கொடுத்த அசௌகரியங்களும் பாதிப்புக்களும் தற்போது பெரும்பாலும் நீங்கியுள்ளன. ஆனாலும் அவற்றின் தாக்கங்கள் காணப்படவே செய்கின்றன. அதனால் இந்நெருக்கடியின் தாக்கங்களையும் அதன் விளைவாக மக்கள் முகம்கொடுத்துள்ள அசௌகரியங்களையும் கருத்தில் கொண்டு மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் பல வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அரசாங்க ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த அதிகரிப்பு தொகையை முதற்கட்டமாக ஐயாயிரம் ரூபா ஏப்ரல் மாதம் முதல் வழங்க ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அரச ஊழியர்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி இத்தொகையை ஜனவரி மாதம் முதல் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான சூழலில் சுகாதார சேவைகள் தொழிற்சங்கங்கள் 35 ஆயிரம் ரூபா கொடுப்பனவு அதிகரிப்பை கோரி 72 மணித்தியாலய வேலைநிறுத்த தொழிற்சங்க நடவடிக்கையை நேற்றுமுன்தினம் முதல் முன்னெடுத்துள்ளன. அதனால் வைத்தியசாலைகளின் வழமையான சேவைகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவுகள், கிளினிக்குகள் உள்ளிட்ட பிரிவுகளின் வழமையான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன. இப்பாதிப்புக்கள் அப்பாவி நோயாளர்களுக்கு தாக்கமாக அமைவதைத் தவிர்க்கும் வகையில் கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில போதனா வைத்தியசாலை, பேராதனை போதனைா வைத்தியசாலை உள்ளிட்ட 41 வைத்தியசாலைகளில் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் ஊடாக இவ்வேலைநிறுத்தத்தின் விளைவான தாக்கங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

ஆனாலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம், சின்னமுத்து தடுப்பு மருந்தேற்றல் நடவடிக்கை, தாய்-சேய் கிளினிக் சேவை, கண் பரிசோதனை, பற்சிகிச்சை, மருந்துப்பொருட்கள் விநியோகம் உள்ளிட்ட சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் இவ்வேலைநிறுத்த தொழிற்சங்க நடவடிக்கை நியாயமற்றது என்பதே அனைத்து தரப்பினரதும் கருத்தாகும். நாடு கடும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் சூழலான போதிலும் அரசாங்க ஊழியர்களுக்கு கொடுப்பனவு அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அப்படியிருந்தும் 35 ஆயிரம் ரூபா சம்பள உயர்வைக் கோரி வேலைநிறுத்தத்தை முன்னெடுப்பது நியாயப்படுத்த முடியாதது. அதுவே மக்களின் கருத்தாகும். தங்களது கோரிக்கையை அடைந்து கொள்வதற்காக சுகாதார தொழிற்சங்கங்கள் அப்பாவி நோயாளர்களைப் பணயக் கைதிகளாக கொள்வது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்நாட்டின் அண்மைக்கால தொழிற்சங்க வரலாற்றில் இவ்வாறான அதிகபட்ச கொடுப்பனவு அதிகரிப்பு கோரிக்கையை முன்வைத்து முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்த தொழிற்சங்க நடவடிக்கையே இது.

ஆகவே தொழிற்சங்கங்கள் தம் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேசி நியாயமான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதை விடுத்து தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்து அப்பாவி நோயாளர்களையும் சுகாதார சேவையையும் பாதிக்கப்பட துணைபோகலாகாது. அது நாட்டுக்கும் மக்களுக்கும் செய்யும் தீங்காகவே அமையும். மக்களின் கருத்தும் அதுவேயாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT