ஹைட்ரோகார்பன் திட்டம்: தமிழக விவசாய நிலங்கள், கடற்பரப்புக்களை விற்பதற்கு எதிர்ப்பு | தினகரன்


ஹைட்ரோகார்பன் திட்டம்: தமிழக விவசாய நிலங்கள், கடற்பரப்புக்களை விற்பதற்கு எதிர்ப்பு

தமிழக சட்டப்பேரவையில், தி.மு.க கொண்டுவந்த ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பான விவாதம் நடைபெற்றது.இம்மாதம் (03) திகதி சமர்ப்பிக்கப்பட்ட இவ்விவாதத்தில் நேற்று உரையாற்றிய தி.மு.க உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா: ஹைட்ரோகார்பன் திட்டம் அமுல்படுத்தப்படுவது டெல்டா பகுதியின் நீர் ஆதாரத்தைப் பாதிக்கும். எனவே டெல்டா பகுதியைச் சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும், தி.மு.கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இது குறிப்பிடப்பட்டதா கவும் அவர் தெரிவித்தார்.

விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ``தமிழக அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கவில்லை. விதிகளின்படி, இந்தத் திட்டத்தைக் கடற்பரப்பில் நிறைவேற்ற வேண்டுமானால் மத்திய அரசே நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசின் அனுமதியும் இதற்குப் பெறப்பட வேண்டும். ஓ.என்.ஜி.சி நிறுவனம் இதற்கு அனுமதி கோரியும், தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. இத்திட்டத்திற்கு எதிர்காலத்திலும் அனுமதி வழங்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.

இது குறித்துப் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம்:

தமிழக அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கவில்லை. எதிர்காலத்திலும் வழங்காது.இவ்வாறான சூழலில், மத்திய பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறையின் கீழ் இயங்கும் ஹைட்ரோகார்பன் அலுவலகம் OALP முறைப்படி, இந்தியாவில் ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்படும் மண்டலங்கள், நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டது. கடந்த ஆண்டு முதல்சுற்று ஏலத்தில் வெற்றிபெற்ற நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்ட ஹைட்ரோகார்பன் அலுவலகம், தற்போது இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்றுகளை வென்றுள்ள நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

OALP என்ற முறைப்படி, நிறுவனங்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்றப் பொருத்தமான மண்டலங்களைத் தெரிவு செய்து, அரசிடம் வழங்கலாம். மத்திய அரசு அந்த மண்டலங்களை ஏலத்தில் விட்டு, நிறுவனங்களுக் கு கையளிக்கும். ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்துவதால் கிடைக்கும் வருமானத்தில், ஒரு பங்கு அரசுக்கும் வழங்கப்படும். கடந்த 2016-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட, HELP (Hydrocarbon Exploration and Licensing Policy) என்ற திட்டத்தின் கீழ் இது செயல்படுகிறது.

2016-ம் ஆண்டுக்கு முன், ஹைட்ரோகார்பனுக்கான இடங்களை அரசாங்கமே தெரிவு செய்தது. தற்போதைய திட்டத்தின்படி தெரிவு செய்யும் உரிமைகள் நிறுவனங்களிடம் வழங்கப்பட்டுள்ளன. எனினும் மண்ணிலிருந்து பெறப்படும் எரிவாயுவை விற்றல், விலையை நிர்ணயம் செய்யும் உரிமை அந்தந்த நிறுவனங்களுக்கே வழங்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு, OALP முறையின் கீழ், இந்தியா முழுவதும் ஏலத்தில் விடப்பட்ட 55 மண்டலங்களில், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான வேதாந்தா குழுமம் 41 இடங்களை வென்றது. தமிழ்நாட்டின் டெல்டா பகுதியில் மூன்று மண்டலங்கள் ஏலம் விடப்பட்டபோது நிலத்திலுள்ள மண்டலம் ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கும், கடல் பகுதியிலுள்ள இரண்டு மண்டலங்கள் வேதாந்தா நிறுவனத்துக்கும் வழங்கப்பட்டன.

தற்போது வெளியிடப்பட்டிருக்கும் இரண்டு சுற்று முடிவுகளிலும், மொத்தம் 32 மண்டலங்கள் ஏலத்துக்கு விடப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. இவற்றில் பெரும்பான்மையாக ஒயில் இந்தியா நிறுவனம் 12 மண்டலங்களையும், வேதாந்தா குழுமம் 10 மண்டலங்களையும் பெற்றுள்ளன.

காவிரி ஆற்றுப்படுகை மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒரு மண்டலம் இந்தியன் ஒயில் நிறுவனத்திடமும், மற்ற இரண்டு மண்டலங்கள் ஓ.என்.ஜி.சியிடமும் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம், 20 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் காவிரிப்படுகையில் தோண்டப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் தொடர்ந்து ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து வரும் சூழலில், மத்திய அரசு மீண்டும் தமிழக விவசாய நிலங்களையும், கடற்பரப்பையும் பாரிய நிறுவனங்களுக்கு ஏலத்தில் விற்று, ஹைட்ரோ கார்பன் பெற அனுமதித்துள்ளமை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


Add new comment

Or log in with...