Saturday, April 20, 2024
Home » வெள்ளித்திரைக்கு அப்பால் மக்களின் இதயங்களை வென்றவர் எம்.ஜி.ஆர்

வெள்ளித்திரைக்கு அப்பால் மக்களின் இதயங்களை வென்றவர் எம்.ஜி.ஆர்

107 ஆவது பிறந்ததினத்தில் இந்தியப் பிரதமர் புகழாரம்

by gayan
January 18, 2024 6:04 am 0 comment

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க நிறுவனத் தலைவருமான காலஞ்சென்ற எம்.ஜி.ஆரின் 107- ஆவது பிறந்தநாள் நேற்று அனுஷ்டிக்கப்பட்டதை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எம்.ஜி.ஆருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழக மக்களால் மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என்று அழைக்கப்பட்டவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். இலங்கையில் கண்டி அருகில் உள்ள நாவலப்பிட்டியில் 1917 ஜனவரி 17 ஆம் திகதி பிறந்த எம்.ஜி.ஆர் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவின் திராவிட சிந்தனையால் ஈர்க்கப்பட்டு, திராவிட இயக்கத்தில் தன்னை 1953-இல் இணைத்துக் கொண்டார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நெருங்கிய நண்பராக தனது அரசியல் வாழ்வை தொடங்கிய எம்.ஜி.ஆர், பின்னாளில் கருணாநிதியுடன் ஏற்பட்ட பிணக்கினால் தி.மு.கவில் இருந்து பிரிந்து அ.தி.மு.கவை தொடங்கினார்.

எம்.ஜி.ஆர் 1977 இ-ல் தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றார். 1987 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் தமிழக முதல்வராக பதவி வகித்தார் எம்.ஜி.ஆர். தமிழகத்தின் முதல்வராக இருந்தபோது நல்ல பல திட்டங்களை செயல்படுத்தினார் எம்.ஜி.ஆர். மேலும், ஏழைகளுக்கு பல்வேறு உதவிகள் செய்தவராக இன்றளவும் போற்றப்படுகிறார். இந்நிலையில் எம்.ஜி.ஆரின் 107- ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று அரசியல் தலைவர்களாலும், தொண்டர்களாலும் அவர் நினைவுகூரப்பட்டார். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அமரர் எம். ஜி.ஆரின் பிறந்தநாளன்று நாம் அவருடைய வாழ்க்கையை நினைவுகூர்ந்து அனுஷ்டிப்போம்.

அவர் தமிழ் சினிமாவின் உண்மையான அடையாளம். தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர். அவருடைய திரைப்படங்கள் சமூக நீதியையும், பிறர் துன்பத்தைக் கண்டு விலகாமல் துணை நிற்கும் உணர்வுகளையும் கடத்தின. அவர் வெள்ளித்திரைக்கு அப்பால் மக்களின் இதயங்களை வென்றெடுத்தார்.

ஒரு தலைவராக, முதல்வராக அவர் மக்கள் நலனுக்காக அயராது உழைத்தார். தமிழகத்தின் வளர்ச்சியில், மேம்பாட்டில் நீங்காத தடம் பதித்தவர். அவருடைய பணிகள் இன்றளவும் நம்மை ஊக்குவிக்கக் கூடியவை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT