குமாரசாமியை கர்நாடகா முதலமைச்சர் பதவியிலிருந்து விலக கோரி பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டம் | தினகரன்

குமாரசாமியை கர்நாடகா முதலமைச்சர் பதவியிலிருந்து விலக கோரி பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டம்

கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து குமாரசாமி உடனடியாக விலக வேண்டும் என அம்மாநில சட்டசபை வளாகத்தில் எடியூரப்பா தலைமையில் பா.ஜ.கவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.​கர்நாடக மாநிலத்தில் 14 எம்.எல்.ஏ.க்கள் இராஜினாமா மற்றும் அமைச்சர்கள் இராஜினாமாவை தொடர்ந்து முன்னாள் முதல் மந்திரியும் அம்மாநில பா.ஜ.க தலைவருமான எடியூரப்பா நேற்று பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து, ‘ஆட்சி நடத்துவதற்கு தேவையான பெரும்பான்மையை இழந்துவிட்ட முதல் மந்திரி குமாரசாமி பதவி விலக வேண்டும்’ என வலியுறுத்தி நேற்று காலை 11 மணியளவில் சட்டசபை வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே எடியூரப்பா தலைமையில் பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய எடியூரப்பா,

நாளை சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குகிறது. ஆனால், அங்கு ஆளும் கட்சிக்கு போதுமான பெரும்பான்மை தற்போது இல்லை. எனவே, முதல் மந்திரி குமாரசாமி உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும். பா.ஜ.க ஆட்சி அமைய வழிவிட வேண்டும் என்றார்.

எம்.எல்.ஏக்களின் இராஜினாமா கடிதத்தை சிவக்குமார் கிழித்தெறிந்ததை சபாநாயகர் இதுவரை கண்டிக்கவில்லை. சபாநாயகரை சந்தித்து 14 எம்.எல்.ஏக்கள் இராஜினாமாவை ஏற்குமாறு வலியுறுத்துவேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Add new comment

Or log in with...