கர்நாடகா ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க முயற்சி; மக்களவையிலிருந்து காங்கிரஸ் வெளிநடப்பு | தினகரன்


கர்நாடகா ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க முயற்சி; மக்களவையிலிருந்து காங்கிரஸ் வெளிநடப்பு

கர்நாடகாவில் ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க முயற்சி செய்வதாக குற்றம்சாட்டி மக்களவையில் குழப்பத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பிக்கள் பின்னர் அவை நடவடிக்கைகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

கர்நாடகாவில் காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணி அரசின் மீது அதிருப்தியில் உள்ள ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் 13 பேர் சமீபத்தில் இராஜினாமா கடிதம் கொடுத்தனர். அவர்களின் இராஜினாமா சபாநாயகரால் ஏற்கப்படவில்லை. எனினும் அவர்கள் பதவி விலகுவதில் உறுதியாக உள்ளனர். அவர்களை சமாதானம் செய்ய கட்சி தலைமை தொடர்ந்து முயற்சி மேற்கொண்டும் பலன் கிடைக்கவில்லை.

ஆளும் கூட்டணி கட்சியினரிடையே கிளர்ச்சியை தூண்டிவிட்டதாகவும், எம்.எல்.ஏக்களை மிரட்டி இராஜினாமா செய்ய வைத்திருப்பதாகவும் காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி உள்ளது. இந்த குற்றச்சாட்டை பா.ஜ.க மறுத்து வருகிறது. இராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏக்கள் 10 பேர் மும்பை ஓட்டலில் தொடர்ந்து முகாமிட்டிருப்பதால், கர்நாடக அரசியல் குழப்பம் முடிவுக்கு வராமல் இழுபறி நீடிக்கிறது.

இந்த விவகாரத்தை முன்வைத்து பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி கடும் அமளியில் ஈடுபட்டு வருகிறது. நேற்று மக்களவையில் காங்கிரஸ் எம்.பிக்கள் மீண்டும் இப்பிரச்சினையை எழுப்பினர். அப்போது, கர்நாடக அரசை கலைக்க பா.ஜ.க முயற்சி செய்வதாக குற்றம்சாட்டி, முழக்கமிட்டனர்.

ஆனால், மத்திய அரசு தரப்பில் இந்த விஷயத்தில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் எம்பிக்கள் அனைவரும் அவை நடவடிக்கைகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.


Add new comment

Or log in with...