Friday, March 29, 2024
Home » உக்கிர தாக்குதல்களுக்கு மத்தியில் காசாவுக்கு உதவிகள் செல்ல இஸ்ரேல்–ஹமாஸ் உடன்பாடு

உக்கிர தாக்குதல்களுக்கு மத்தியில் காசாவுக்கு உதவிகள் செல்ல இஸ்ரேல்–ஹமாஸ் உடன்பாடு

by gayan
January 18, 2024 6:40 am 0 comment

இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலுக்கு மத்தியிலும் கட்டார் மற்றும் பிரான்ஸின் மத்தியஸ்தத்தில் காசாவில் உள்ள பணயக்கைதிகள் மற்றும் பொதுமக்களுக்கு மருத்துவ உதவிகள் நேற்று (17) கொண்டு செல்லப்பட்டன.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலின்போது சுமார் 250 பேர் பணயக்கைதிகளாக கடத்திச் செல்லப்பட்ட நிலையில், தொடர்ந்து சுமார் 132 பணயக்கைதிகள் போராளிகளின் பிடியில் உள்ளனர். இவர்களில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

எஞ்சியுள்ள பணயக்கைதிகளின் நிலை தொடர்பில் இஸ்ரேலில் கவலை அதிகரித்திருப்பதோடு, இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதலுக்கு மத்தியில் முற்றுகையில் உள்ள காசாவில் பஞ்சம் மற்றும் நோய்கள் பரவுவது தொடர்பில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வரும் சூழலில் போர் நிறுத்தம் ஒன்றுக்கான சர்வதேச அழுத்தமும் அதிகரித்துள்ளது. “இஸ்ரேலிய பணயக்கைதிகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளுக்கு பகரமாக காசாவில் உள்ள பொதுமக்களுக்கு மருந்துகளுடன் மற்ற மனிதாபிமான உதவியை வழங்குவதற்கு இஸ்ரேல் மற்றும் (ஹமாஸ்) இடையே உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டது” என உத்தியோகபூர்வ கட்டார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் எகிப்தின் எல் அர்ஷ் நகரில் இருந்து அனுப்பப்பட்ட மருந்து மற்றும் உதவிகள் நேற்று காசா பகுதியை சென்றிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகமும் இந்த உடன்படிக்கையை உறுதி செய்துள்ளது. இந்த உடன்படிக்கையின் கீழ் நாற்பத்து ஐந்து பணயக்கைதிகளுக்கு மருந்துகள் வழங்கப்படவிருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

தெற்கு காசாவின் எல்லை நகரான ரபாவில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு நேற்று மருந்துகள் கொண்டுவரப்பட்டதோடு சர்வதேச செம்பிறை சங்கத்திடம் இருந்து அவைகளை பெற்றதாக அந்த மருத்துவமனை குறிப்பிட்டுள்ளது. அந்த மருந்துகள் பிரிக்கப்பட்டு பணயக்கைதிகளுக்கு அனுப்பப்படவுள்ளது.

கட்டார் மத்தியஸ்தத்தினால் பேச்சுவார்த்தை இவ்வாறான மற்றொரு உடன்படிக்கையை விரைவில் எட்டுவதற்கு வழிவகுக்கும் என்று நம்புவதாக அமெரிக்க பாதுகாப்பு கவுன்சில் பேச்சாளர் ஜோன் கிர்பி தெரிவித்துள்ளார்.

மேலும் 163 பேர் பலி

தெற்கு காசாவில் குறிப்பாக கான் யூனிஸ் மற்றும் ரபா நகரங்களில் இஸ்ரேல் சரமாரி குண்டு மழை பொழிந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 163 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு நேற்று (17) தெரிவித்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ரபா நகரின் மத்திய பகுதி மற்றும் சிறிய அகதி முகாமான ஷபூராவில் குண்டு தாக்குதல்கள் இடம்பெற்றன. ஷபூராவில் இரு வீடுகள் இலக்கு வைக்கப்பட்டதோடு நான்கு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 10க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

எனினும் கான் யூனிஸ் நகரிலேயே மிக மோசமான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. நகரின் மேற்குப் பக்கமாக பீரங்கி குண்டுகள் விழுந்துள்ளன. அதிகப் பெரும்பான்மையான சிறுவர்கள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான வபா கூறியது.

இதன்போது கான் யூனிஸின் மேற்குப் பகுதியில் குடியிருப்பாளர்கள் இருக்கும் நிலையிலேயே நான்கு வீடுகள் வான் தாக்குதலுக்கு இலக்காகி இருப்பதோடு அல் நம்பசாவி பகுதியில் பல குடியிருப்புக் கட்டடங்கள் பிராங்கி தாக்குதலுக்கு இலக்காகி உள்ளன. கான் யூனிஸின் மேற்கு மற்றும் கிழக்கின் ஏனைய பகுதிகளிலும் பீரங்கி குண்டுகள் விழுந்துள்ளன.

இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்று வரும் பகுதிகள் போரின் ஆரம்பத்தில் பாதுகாப்பு வலயமாக இஸ்ரேலால் அறிவிக்கப்பட்ட பகுதிகளாகும். எனினும் இங்கு தற்போது அடிக்கடி தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று கான் யூனிஸின் நாசர் மருத்துவமனைக்கு அருகாமையில் உக்கிர தாக்குதல்கள் நடத்தப்படும் போக்கு தொடர்ந்து நீடித்து வருவதாக அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் விபரித்துள்ளனர். இந்த மருத்துவமனைக்குச் செல்லும் பிரதான பாதையில் இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் நிலைகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்னதாக செவ்வாய்க்கிழமை இரவு ரபா நகரின் மேற்காக அல் ஹஷஷின் பகுதியில் பொதுமக்கள் குழு ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட வான் தாக்குதல் ஒன்றில் தாய் மற்றும் மகள் இருவரும் கொல்லப்பட்டிருப்பதாக வபா செய்தி வெளியிட்டது.

வடக்கின் ஜபலியா நகரில் இஸ்ரேலிய குண்டு வீச்சில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதன்படி காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை வேகமான அதிகரித்து வருவதோடு அந்த எண்ணிக்கை தற்போது 24,448 ஆக அதிகரித்துள்ளது. இதில் 70 வீதமானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்களாவர்.

மறுபுறம் காசாவில் உள்ள இஸ்ரேலிய தரைப்படை பலஸ்தீன போராளிகளின் எதிர்ப்பை தொடர்ந்து சந்தித்து வருகிறது. வடக்கு காசாவில் இடம்பெற்ற மோதலில் 32 மற்றும் 34 வயதுடைய மேலும் இரு இஸ்ரேலிய துருப்புகள் கொல்லப்பட்டதை இஸ்ரேல் இராணுவம் உறுதி செய்தது.

இதன்படி இஸ்ரேல் இராணுவம் வழங்கி இருக்கும் தரவுகளின்படி காசாவில் கொல்லப்பட்டுள்ள இஸ்ரேலிய வீரர்களின் எண்ணிக்கை 200ஐ நெருங்கியுள்ளது. மேலும் 1,135 படையினர் காயமடைந்துள்ளனர்.

டெல் அவிவில் ஆர்ப்பாட்டம்

இதேவேளை இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே செவ்வாய் இரவு மோதல் வெடித்தது. “முற்றுகையை நிறுத்து” மற்றும் “இனப்படுகொலையை நிறுத்து” என்ற பதாகைகளுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணி நடத்தினர்.

“ஆக்கிரமிப்பு இரத்தக்களரிக்கு வழிவகுப்பதோடு அது இடைவிடாது தொடர்ந்து வருகிறது. இப்போது காசாவில் வளரும் பிள்ளைகள் சில ஆண்டுகளில் எம்முடன் சண்டைக்கு வருவார்கள்” என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சாவா லெர்மன் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

“இஸ்ரேலிய குண்டுவீச்சில் பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள்” என்று சக ஆர்ப்பாட்டக்காரரான மிச்சால் சப்ரி கூறினார். “இது எதனையும் தராது. எமது பணயக்கைதிகள் தொடர்ந்து அங்கு உள்ளனர். மேலும் இராணுவ சக்தியை பயன்படுத்துவதன் மூலம் நாம் அவர்களை விடுவிக்க மாட்டோம்” என்றும் அவர் கூறினார்.

பணயக்கைதிகளை பாதுகாப்பாக விடுவிப்பதற்கு இஸ்ரேலிய மக்களிடம் இருந்து நெதன்யாகு அரசு கடும் அழுத்தத்தை எதிர்கொண்டுவருகிறது. எனினும் உடன்பாடு ஒன்றை எட்டுவதற்கு இராணுவ ரீதியான அழுத்தம் அத்தியாவசியம் என்று அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

மறுபுறம் இந்தப் போர் மத்திய கிழக்கில் போர் நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளது. செங்கடலில் யெமனின் ஹூத்திக் கிளர்ச்சியாளர்கள் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக தாக்குதல்களை நடத்தி வருவதோடு இஸ்ரேலின் லெபனான் எல்லையில் ஹிஸ்புல்லா போராளிகளுடனான மோதலும் நீடித்து வருகிறது.

சர்ச்சைக்குரிய ஷெபா பண்ணை பகுதியில் உள்ள இஸ்ரேலிய இராணுவ நிலைகள் மீது ரொக்கெட் தாக்குதல்கள் இடம்பெற்றிருப்பதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. தெற்கு லெபனானில் பல ஹிஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலை அடுத்தே இந்த ரொக்கெட் குண்டுகள் விழுந்துள்ளன.

ஷெபா பண்ணை பகுதி லெபனான், சிரிய மற்றும் 1967 போரில் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்று எல்லைக்கு அருகில் இருக்கும் குறுகிய நிலப்பகுதியாகும்.

மறுபுறம் மேற்குக் கரையில் இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் அங்கு கொந்தளிப்பு சூழல் நீடித்து வருகிறது. இதில் நேற்று துல்கரம் அகதி முகாமில் இஸ்ரேலிய படை புல்டோசர்களைக் கொண்டு உட்கட்டமைப்புகளை தகர்த்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

கார் ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் பலஸ்தீனர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், கடந்த பல ஆண்டுகளில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பொறுப்பான அஹமது அப்துல்லா அபூ சலால் என்பவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி காசாவில் போர் வெடித்தது தொடக்கம் மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவம் மற்றும் குடியேற்றவாசிகளின் தாக்குதல்களில் குறைந்தது 362 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT