எதிர்ப்பு அரசியல் நன்மை தராது! | தினகரன்

எதிர்ப்பு அரசியல் நன்மை தராது!

அரசாங்கத்துக்கு எதிரான ஜே.வி.பியின் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று வியாழக்கிழமை மாலை நடைபெறவுள்ளது. ஜே.வி.பியின் இந்தப் பிரேரணையை எதிர்க் கட்சிகள் சில தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முனைவதை வெளிப்படையாகவே அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அரசாங்கத்தை தோற்கடிப்பதன் மூலம் முதலில் பாராளுமன்றத் தேர்தலொன்றுக்கு முகம்கொடுக்க முடியும் என்பதே எதிரணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஜே.வி.பி தரப்புடன் என்னதான் முரண்பாடுகள் காணப்பட்ட போதும் மஹிந்த ராஜபக்ஷ தரப்பு பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க உடன்பட்டுள்ளது.

அதேசமயம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இது விடயத்தில் இன்னமும் தீர்க்கமான முடிவெதனையும் எடுக்காமலிருப்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.சிலவேளை சுதந்திரக் கட்சி தரப்பினர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விலகி நிற்கக் கூடியதொரு வாய்ப்பும் ஏற்படக் கூடுமென்பது அரசியல் அவதானிகளின் கணிப்பாகத் தெரிகின்றது. இந்த விவகாரத்தில் பெரும்பான்மைக் கட்சிகள் எதிரும்புதிருமாக நின்று செயற்படுவதையே காண முடிகின்றது.

சிறுபான்மை சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் கைகளில்தான் நம்பிக்கையில்லாப் பிரேரணையின் வெற்றியும், தோல்வியும் தங்கியிருக்கின்றது. தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று எத்தகைய நிலைப்பாட்டினை எடுக்கப் போகின்றனர் என்பதை தூரநோக்குடன் பார்க்க வேண்டியுள்ளது. தமிழ், முஸ்லிம் தரப்புகள் பெரும்பாலும் அரசுக்கு ஆதரவாகவே செயற்படும் என்றே நம்பகமாக கருத முடிகிறது. சிறுபான்மை சமூகங்கள் கடந்த காலத்தில் எதிர்கொண்ட வேதனைகளை மறந்து விடுவதற்கில்லை.

இன்றைய நிலையில் அரசில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரேரணைக்கு எதிராகவே வாக்களிப்பார்கள். இதனை கட்சிகளின் கூட்டுப் பொறுப்பாகவே கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. தற்போதைய நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சியை தக்க வைத்து காய்நகர்த்தல்களை முன்னெடுக்க வேண்டிய அவசியம் அதனுடன் இணைந்திருக்கும் கட்சிகளுக்கு ஏற்பட்டிருக்கின்றது.

தற்போது பாராளுமன்றத்தில் எதிரணியில் இருந்து செயற்பட்டு வரும் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை இன்னமும் அறிவிக்கவில்லை. ஆனால் அவர்கள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பார்களா? என்ற சந்தேகமும் காணப்படுகின்றது. சிலவேளை இ.தொ.கா உறுப்பினர்கள் வாக்களிப்பிலிருந்து விலகி நின்றாலும் மறுப்பதற்கில்லை. டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி கட்சி பிரேரணைக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்திருப்பதாக அறிவித்திருக்கின்றது.

அரசுக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு கோணங்களில் விடயத்தை அணுகி ஆராய்ந்து வருகின்றது. தமிழ்க் கூட்டமைப்பின் ஆதரவு அரசுக்கு இருப்பதாக வெளிப்படையாகவே பேசப்பட்டு வருகின்ற போதிலும், கூட்டமைப்பின் உயர்மட்டம் விவகாரத்தை மிக ஆழமாக எடுத்து பரிசீலித்து வருவதாக அறிய முடிகின்றது.

அவர்கள் கடந்து வந்த பாதையை சற்று திரும்பிப் பார்க்க முயற்சிப்பதையும் அவதானிக்க முடிகிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள புளொட் அமைப்பின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் தருமலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் உன்னிப்பாக அவதானிக்கக் கூடியவையாகும்.

அரசாங்கத்தை தற்போதைய நிலையில் வீழ்த்துவதால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் கிட்டப் போவதில்லை. பதிலாக பாதிப்பே ஏற்படும். இதனை உணர்ந்த நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரேரணை விடயத்தில் முடிவினை எடுக்கும்.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமிழ் பேசும் தரப்புகள் ஆதரவு வழங்கி, அரசாங்கத்தை தோல்வியடையச் செய்தால் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.சிந்திக்காமல் கண்களை மூடிக் கொண்டு ஆதரவளிப்பதால் சிறுபான்மையினருக்கு ஏற்படக் கூடிய பின்விளைவுகள் குறித்து எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. இதில் அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டால் உடனடியாக தேர்தலொன்று நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. மாறாக நாட்டில் குழப்ப நிலையொன்றே ஏற்படலாம். மஹிந்த ராஜபக்ஷ,- மைத்திரிபால சிறிசேன தரப்புகள் எடுக்கும் நிலைப்பாடுகள் குழப்ப சூழலையே ஏற்படுத்தும் என்பதை சித்தார்த்தன் வெளிப்படையாகவே சுட்டிக்காட்டி இருக்கின்றார்.

தற்போதைய நிலையில் அரசாங்கம் நான்கரை வருட கால ஆட்சியில் தமிழ் மக்களின் பிரச்சினைகள், சவால்கள், நெருக்கடிகள் குறித்து ஆராய்ந்த போதும், ஆரோக்கியமானதொரு நிலை ஏற்படவில்லை என்பது நிதர்சனம். ஆனால் படிப்படியாக சிலமுனைப்புகளை அரசு முன்னெடுத்ததையும் நாம் மறந்து விட முடியாது. சில அடிப்படைப் பிரச்சினைகள் விடயத்தில் உரிய கவனம் செலுத்தப்பட்டிருப்பதையும் மறுப்பதற்கில்லை.

யுத்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. படையினர் வசமிருந்த மக்களின் காணிகள் பெருமளவில் விடுவிக்கப்பட்டன. காணாமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகள் விடயத்திலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் மறந்து சிறுபான்மை சமூகங்கள் மாற்றமான முடிவெடுக்க முடியாத நிலை காணப்படுகின்றது.

கடந்த நான்கரை வருடங்களில் சிறுபான்மைச் சமூகங்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லையென்பது உண்மைதான்.அதற்காக சமயோசிதமற்ற முடிவு எடுப்பதால் சிறுபான்மைச் சமூகத்துக்கு ஆகப் போவது எதுவுமில்லை.மீதமுள்ள ஆட்சிக் காலத்தில் முடிந்தளவுக்கு அழுத்தங்களை பிரயோகிக்க இக்கால கட்டத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும். எதிர்ப்பு அரசியல் எந்த நன்மையையும் கொண்டு வரப் போவதில்லை என்பதை உணர்ந்து செயற்படுவதே முக்கியமானதாகும்.


Add new comment

Or log in with...